(Reading time: 2 - 4 minutes)

மகளிர் தின சிறப்புக் கவிதை - அவள் மட்டுமே அறிவாள் - நர்மதா சுப்ரமணியம்

Womens-Day

அழகியலாய் மட்டுமே
அதை நோக்கும் கண்கள்....
அதனுள்ளிருக்கும் துன்பம்
அவள் மட்டுமே அறிவாள்....

குழந்தைக்காய்
குழந்தைக்கு அட்சயமாய்
அதை வைத்தான் இறைவன்
என்றெனவே உலகமறியும்....
அதனுள்ளிருக்கும் துன்பம்
அவள் மட்டுமே அறிவாள்...

உடலிலுள்ள தெம்பெல்லாம்
வடித்தெடுத்து வீரயமற்று திராணியற்று 
நகரவும் இயலாது படுத்திருப்பாள் 
குழந்தை பிரசவித்த நேரம்...

அதையும் பொருட்படுத்தாது
அள்ள அள்ள குறையாத 
அமிர்தமாய் பால் பொழியும்
அவளின் மார்பகங்கள்
அவளின் குழந்தைக்கு...
அதனுள்ளிருக்கும் துன்பம்
அவள் மட்டுமே அறிவாள்...

வளரும் குழந்தை 
பாலருந்தும் ஆர்வத்தில்
மார்பு காம்பை கடித்து வைக்க..
புண்ணாய் ரணமாய் 
காந்தும் அவ்வலியிலும்
கண்ணில் கண்ணீர்
ஆறாய் ஓடியப் போதும்
பசியால் அழும்
பிள்ளையின் அழுகுரல்
காணச் சகிக்காது
தன் வலி பொறுத்து 
பிள்ளை பசி தீர்ப்பாளவள்..
அதனுள்ளிருக்கும் 
ரணமான எரிச்சலை
அவள் மட்டுமே அறிவாள்...

குழந்தை ஒவ்வாமையால்
ஒரு நாள் பாலருந்தாமல் போனாலும்
தன் பணி நிமித்தமாய்
பிள்ளைக்கு பாலூட்டுவதை
நிறுத்தும் போதும்
அதனுள்ளிருக்கும் துன்பம்
அவள் மட்டுமே அறிவாள்...

பிள்ளை அருந்தாத பால்
மார்பில் கட்டிக்கொண்டு
உயிர்போகும் வலியளிக்க
மாரடைக்காமலே
மாரடைப்பின் வலியை
மூச்சுத்திணறலின் கொடூரத்தை
உணர்வாளவள்....
அதனுள்ளிருக்கும் துன்பம்
அவள் மட்டுமே அறிவாள்...

தன் பிள்ளை கருவுருவாகிய
நேரம் முதல் பிரசவிக்கும் வரை
தன் ஒவ்வோர் உறுப்பின்
உயிர்வலி உணர்வாளவள்...
அதனுள்ளிருக்கும் துன்பம்
அவள் மட்டுமே அறிவாள்...

இன்பமாய் சுகமாய் 
இவ்வலியனைத்தையும் ஏற்பவள்,
இவற்றை தாண்டிய பெரும்வலியாய்
அருவருப்பாய் உணர்வாளவள்
கொடியவர்களின் தீப்பார்வையில்....

அழகியலில் மறைந்துள்ள
கொல்லும் வலியை
அவள் மட்டுமே அறிவாள்...

வலியையும் வரமாய் ஏற்பவள்,
கொடியவர்களின் வக்கிரப்பார்வையால் 
வரமும் சாபமாய் 
மாறும் விந்தையை
அவள் மட்டுமே அறிவாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.