(Reading time: 2 - 3 minutes)

கவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்

whoAmI

அவன் கைப்பிடியின்

நெருக்கமும்

முரட்டு உதடுகளின்

அரக்கத்தனமான அழுத்தமும்

என்னை நொடியில் சிதைத்தன

 

பற்ற வைத்த சிறு துணுக்கு

தகித்தது என் உடம்பின்

ஒவ்வொரு அணுக்களையும்

 

என் மனப்புகையினை அறியாமல்

என் உடற்சாறு அனைத்தையும்

உறிஞ்சினான் அவன்

சிறு கணங்களையும் தவறவிடாது

ரசித்து ருசித்தவாறே

 

அவன் எங்கே அறிந்தான்

என் உடலும் உயிரும்

ஒருங்கே மாய்கின்றன என்பதை

 

வலி அனைத்தும் என்னுள்ளே புதைத்து

நானும் சிதைந்தேன் சிறிதாக

சில நிமிடங்கள் பல யுகங்கள் போல எனக்கு

ஆனால் உன் விரல் இடுக்கில் நானும்

உருண்டு பிரளும் வரை

உன் கைகளுக்கு உணர்வில்லை....

 

சற்றே உணர்ந்தாய் என் உடற்சூட்டின்

வெப்பமும் உனைத் தாக்க

இருந்தும் விடாது ஒரே மூச்சில்

உறிஞ்சிய பின்னரே தூக்கியெறிந்தாய்

தோலாடை  கிழிபட்டு கருகிய கட்டையாய்

நானும் உன்முன்னே கிடக்க

தூக்கி எறிந்த நீயோ பார்த்தாய்

எனை ஒருமுறை.....

 

இன்னமும் தகிக்கின்றது எனக்கு

உன் பார்வையின் வெப்பக்கதிர்கள்

தூக்கி யெறிந்த  நீ

அத்துடன் நிறுத்தியிருக்கலாம்

ஆனாலும் எனை மிதித்தாய்

உன் உரம் கொண்ட கால்களால்

மண்ணினுள் என் மூச்சை அடக்கும் வரைக்கும்

 

பின்னரே உன் இச்சை தணித்திருக்கும்

எனினும் ஒரு உண்மை

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

உன் உயிர் குடித்த உனையழிக்க

என் ஆவி காத்திருக்கும்

சிறிது சிறிதாய் உனை அரித்து

என் சித்தம் துடித்திட உன்

இரத்தம் வாங்கிடுவேன்

தினமும் உன்னுள்ளே புதைந்து .......

 

இப்படிக்கு

நீ கசக்கியெறிந்த நான்

ஒரு சிகரட்

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.