(Reading time: 2 - 4 minutes)
humanity

கவிதை - வலிமையான நேசம் - ரம்யா

மனசெல்லாம்  நிறைஞ்சிருக்கும் மாமா உங்ககிட்ட

என் மனசு நிறைச்சிருக்கும் ஒருத்தன் பத்தி சொல்லணும்

இன்னொருத்தன் பெருமைய பேச நானும் நினைக்கல்ல

இவனொருத்தன்  தவிர என் வாழ்வில் வேறு தேவனில்ல

 

சொந்தம் விடக்கூடாதுன்னு தன் அத்தமவள கைபிடிச்சான்

மகராசியா அவள வாழவைக்க தினம் உழைச்சான்

நேசமாத்தான் அவள நெஞ்சுக்குள்ள பூட்டிவச்சான்

காலமெலாம் அவளோட வாழ நாளும் கனவுகண்டான்

அவன் கனவு கலைக்கத்தான் நானும் பொறந்துவந்தேன்

ஆறுமாசம் தாண்டும்முன்ன ஆத்தாள பறிகொடுத்தேன்

ஊர்கூடி அவனுக்கு இன்னொரு கண்ணாலம் பேசிவைக்க

இனி என் உசுரு இவதான்னு என்னையள்ளி தூக்கிகிட்டான்

அன்னைக்கு தூக்கினவன் இன்னைக்கும் சுமக்குறான்

ஆத்தாளுக்கும்  மேல ஒசரமாதான் நிக்கிறான்

 

பாண்டியாட்டம் அவனோட பல்லாங்குழி அவனோட

திருவிழா அவனோட தினம் தூக்கம் அவனோட

ஆத்தான்னு ஒரு உருவம் படத்திலகாட்டிடுவான் ஆனா

வேட்டிகட்டிய ஆத்தாவா என் நெஞ்சில வாழ்ந்திருக்கான்

பத்தாவது போகையில பதைபதைச்சு போயிருந்தான்

ஆத்தா இருந்திருக்க வேணுமுன்னு அழுதிருந்தான்

குத்த வச்ச நாளைக்குதான் அவன் அழுக புரிஞ்சது

கலங்கிநிக்கும் அந்த மனம் என் புள்ளயா தெரிஞ்சது

 

தோளில் சுமந்தவன் தோழனா மாறிநின்னான்

தோள்கொடுத்து பலவிசயம் சாதிக்க உரமும்தந்தான்

காலமெலாம் அவனோடன்னு கனவு நான் கண்டிருக்க

என் கண்ணாலக்கனவோட ராத்தூக்கம் அது இழந்துநின்னான்

மகராசம் எவனோ அவன் ராணிக்குன்னு காத்திருந்தான்

ஊரெல்லாம் தேடிதேடி உம்ம கொண்டு  நிறுத்திபுட்டான்

 

என் அப்பன் கைகாட்ட என் கழுத்த நீட்டிபுட்டேன்

எதுவோ எப்படியோ உம்ம கைகோர்த்து வந்துபுட்டேன்

இருபது வருசம் இழைஞ்சிப்போன உறவு அது

இருக்கும் வரைக்கும் இறக்காத பந்தம் அது

பொண்ணா பொறந்தேன்னு விட்டுவிட முடியாது

என் நரைச்சமுடி புள்ளைய மறக்கவும் முடியாது

 

அவன கூட்டிவந்து அவன் கூனவிடமாட்டேன்

உம்ம பிரிச்சிபோயி உம்ம குறுகவிடமாட்டேன்

என் நெஞ்சுபாசம் மட்டும் நீர் அறிஞ்சாபோதுமய்யா

அந்த நெனப்ப சிதைக்காம ஒருகைமட்டும் தாருமய்யா

வார்த்தையில அடங்காத வலிமையான நேசமது

அதுவிளங்கும்  நீரும் ஒரு பொண்ணு  பெறும்போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.