(Reading time: 2 - 4 minutes)

கவிதை - வாகன நெரிசல் - இரா.இராம்கி

தூங்கா மாநகரங்கள்;

துளியும் ஓய்வில்லா சாலைகள்;

 

துணிந்தே வாகனம் ஓட்டத் துவங்கும் புதுமுக ஓட்டுநர்கள்;

 

சாலையின் இரு மருங்கிலும் கூட்டமாய் கூட்டமாய் வாகனங்கள்;

 

புற்றீசல் போல் புறப்படும் இரு சக்கர வாகனங்கள்;

 

முந்த முடியாமல் உந்தியே செல்லும் சின்ன சரக்குந்துகள்;

 

முனைப்புடன் அநாயசமாக முந்திச்செல்லும் மூன்று சக்கர வாகனங்கள்

 

நத்தையாய் நகரும் நான்கு சக்கர வாகனங்கள் ஏராளம் ;

 

தவழ்ந்தே செல்லும் சொகுசு மகிழுந்துகள்;

 

வலமும் இடமும் வளைந்து லாவகமாக செல்லும் மாநகர பேருந்துகள்;

 

சற்றே கட்டுப்பாட்டுடன் செல்லும் பள்ளி வாகனங்கள்;

 

உயிருக்கு உத்தரவாதமில்லா சாலையில் உயிரின் வேரைத் தாங்கி வேகத்தோடும் விவேகத்தோடும் செல்லும் 108 ஆம்புலன்ஸ் வேன்கள்;

 

இத்துணை வாகனங்களையும்

 

பாங்குற நெறிப்படுத்தி,  அத்துணை மாசுகளையும் மறுக்க வழியில்லாமல் சுவாசிக்கும் போக்குவரத்துக் காவலர்கள்

 

ஓர் சின்ன சிகப்பு துணியில் தன் உயிரின் உத்தரவாதத்தை வைத்து துணிவுடனே பணிபுரியும் சாலைப்பணியாளர்கள்;

 

கட்டுக்கடங்கா குதிரைகளாம்-வாகனங்களுக்கு

 

 இரண்டு நிமிட கால்கட்டு போட்ட சிகப்பு நிற விளக்குகள்;

 

பந்தயத்திற்கு ஆயத்தமாய் நிற்கும் வீரர்களாய் செய்த மஞ்சள் நிற விளக்குகள்;

 

வாடிவாசல் திறந்த காளைகளாய் ஆர்ப்பரித்து ஒட வைத்த -பச்சை விளக்குகள்;

 

ஒர் வாகனத்தின் மரணத்திற்கு

முன்பு ,

ஒர் லட்சம் வாகனங்களின் ஜனனங்கள்;

 

ஓர் சாலையின் ஜனனத்திற்கு முன்பு ஓர் கோடி வாகனங்களின் ஜனனங்கள்;

 

ஏ சாலையே! நீ என்ன புகை கக்கும் பூக்களால் செய்த மாலையா;

 

வாகனங்கள் என்னும் அலை கொண்ட கடலா; ஆம்

 

வாகனநெரிசலே,  நீ நிச்சயம் ஓர் கடலலை; நீ ஓய்வதாய் தெரிவதில்லை உன்னால் சாலைக்கு ஓய்வு என்பதே இல்லை-

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.