(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 11வீணையும் கண்ணீரும்

டுத்த நாள் வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் வழக்கம் போல் சுடர்விளக்கு ஏற்றிய பிறகு ஸரஸ்வதி வீணை வாசிக்க உட்கார்ந்தாள். இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடாமல் கிடந்த வீணை 'டிரிங்' கென்ற நாதத்துடன் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அத்துடன் ஸ்வர்ணம் அன்று காலையில் ஸரஸ்வதியைப் பார்த்து, "அம்மா ஸரஸு! சங்கீதம் என்பது சாமான்ய வித்தையல்ல. தெய்வ கடாக்ஷத்தால் சித்திக்கும் அபூர்வக் கலை அது. அத்தெய்வீகக் கலையை ஒருத்தருக்காக உதாசீனம் செய்வது நல்லதில்லை. நீ வீணையைத் தொட்டு மாதக்கணக்கில் ஆகிறதே. சாயங்காலம் விளக்கேற்றிய பிறகு இரண்டு பாட்டாவது வாசி கேட்கலாம்" என்று கூறினாள்.

'வாஸ்தவந்தாள்! சாவித்திரிக்குப் பிடிக்காவிட்டால் அவளுக்காக நமக்குத் தெரிந்த கலையை உதாசீனம் செய்வானேன்?' என்று எண்ணமிட்டாள் ஸரஸ்வதி. ஆகவே, அன்று மாலை தூசுபடிந்து கிடந்த வீணையைத் துடைத்து எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள் ஸரஸ்வதி. சாவித்திரியும், ஸ்வர்ணமும் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். படங்களுக்குப் போட்டிருந்த மல்லிகை மாலைகளின் மணமும், ஊதுவர்த்தியின் சுகந்தமும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு தெய்வீகக் களையை ஏற்படுத்தின. நீர் ஊற்றுப்போல் கிளம்பும் நாத வெள்ளம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. காம்போதி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனம் செய்து தானம் வாசித்த பிறகு, 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்கிற கிருதியை ஸரஸ்வதி வீணையில் வாசித்து, மதுரமான குரலில் பாடினாள். இதுவரையில் அவள் பாட்டிலேயே லயித்துப்போய் உட்கார்ந்திருந்த ஸ்வர்ணம், "ஸரஸு! உன் அத்தான் இன்று இந்தப் பாட்டைக் கேட்க இங்கே இல்லையே? நேற்று கூட, 'ஏனம்மா! ஸரஸ்வதி இப்பொழுதெல்லாம் பாடுகிறதேயில்லை' என்று என்னிடம் கேட்டான்" என்றாள்.

புன்னகை ததும்பும் முகத்துடன் ஸரஸ்வதி பாட்டை முடித்துவிட்டு வேறு நீர்த்தனம் தன்றை ஆரம்பித்தாள். ஸ்வர்ணம் ஆசையுடன் நாட்டுப்பெண்ணின் பக்கம் திரும்பி, ”சாவித்திரி! உன்னைப் பாடர் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாட்களாக எண்ணம். எல்லோரும் சங்கீதத்தை முறைப்படி கற்காவிட்டாலும், சாதாரணமாக நாலு பாட்டுகள் பாடத் தெரிந்து கொண்டே இருப்பார்கள். எனக்குக்கூடப் பாடத் தெரியும். மார்கழி மாதத்தில் விடியற்காலம் ஸ்நானம் செய்து விட்டு, 'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை' என்று எதையாவது பாடிக்கொண்டே வீட்டு வேலைகள் செய்வேன். புளியையும் உப்பையும் போட்டுச் சமைத்துச் சமைத்து அலுத்துப்போன மனசுக்கு எதையாவது பாடிக்கொண்டே வேலை செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறமாதிரி தோன்றும்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.