(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

அப்பொழுது அவளையும் அவள் கணவன் வாசுவையும் அழைத்துப் போக நாகராஜன் ரயிலடிக்கு வந்திருந்தான்.

  

“அண்ணா ! அவளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது" என்று தயங்கினாள் பவானி.

  

”நீ ஒரு பைத்தியம்!" என்றான் நாகராஜன்.

  

”இந்த நகரத்திலே இம் மாதிரிக் காட்சிகள் சர்வ சகஜமானவை. உனக்குப் புதிதாக இருப்பதால் நீ இதை எல்லாம் பார்த்துப் பரிதாபப்படுகிறாய். எங்களுக்குக் கவனிக்கவே பொழுதில்லை" என்று கூறி நகைத்தான் நாகராஜன்.

  

”அண்ணா ! சமுதாயத்தின் வளர்ச்சியிலேதான் தேசத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அழகு மிகுத்த இந்த சென்னையிலே அவதியுறும் பல காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கிறதே. சமூகம் வளர்ந்து வருகிறதா? செடிகளின் வேரிலே புழு வைத்தால் செடி வதங்கச் சில காலம் ஆகுமாமே. அப்படிச் சமூகத்தின் வேரிலே, வேர்ச் செல் தோன்றி அரித்து வருவதற்கு இவை யாவும் அத்தாட்சியோ என்னவோ" என்றாள் பவானி, டாக்சியில் உட்கார்ந்து அந்த கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்துக் கொண்டே.

  

நாகராஜன், பதில் ஒன்றும் கூறவில்லை. பவானி கணவனைக் கேட்டு எட்டணாக் காசை வாங்கிக் கொடுத்தாள் அந்தப் பெண்ணிடம். அவள் உள்ளம் சோர்ந்து விட்டது. எந்த விதத்திலாவது இம்மாதிரி அபலைப் பெண்களுக்கு உதவி புரிய மாட்டோமா என்று ஏங்கினாள்.

  

அப்புறம் அவள் சென்னைப் பக்கமே போகவில்லை. இப்பெழுது அந்த நகரத்திலே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். பஞ்சமும் பிணியும் கொஞ்சமாவது குமைந்திருக்கும். பெண்கள் இன்பமாக வாழ்வார்கள் என்றெல்லாம் நினைத்தாள். தெருவிலே விளக்கேற்றி விட்டார்கள். கோவிலிலிருந்து மணியின் நாதம் கேட்டது.

  

”பவானி கால் கடுக்க அரை மணியாய் நிற்கிறாயே? நாளைக்குத் தான் நீ ஊருக்குப் போகிறாய், திரும்பி வர இன்னும் எத்தனை மாசங்கள் ஆகுமோ? உள்ளே வந்து உட்காரேன்" என்று பார்வதி அவளை அழைத்தாள்.

   

--------------

தொடரும்

Go to Muthu sippi story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.