(Reading time: 5 - 10 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அந்தக் குடும்பத்தின் நலன் ஒன்றிலேயே கருத் துடைய சுவாமி நாதனுக்கு மூர்த்தியைப் பற்றித் தெரிந்ததும், ஏதோ எக்கச்சக்கமாக நடக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்தவர் போல் வாய் திறவாமல் மௌனமாக இருந்தார்.

  

அவராகவே ஏதாவது கேட்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். . எனக்கு இனிமேல் எதுவும் புதிதாகத் தெரியவேண்டாம்' என்று சொல்வது போல் இருந்தது அவர் மௌனம்.

  

தோட்டக்கார ராமையா மட்டும், "என்ன ஐயா இப்படி ஆகிவிட்டது? நம்ப ஐயா குணத்துக்கும். ராதா அம்மாவின் செல்வாக்குக்கும் இப்படி ஒரு தலை குனிவு ஏற்பட வேண்டுமா!" என்று அவரிடம் கூறி அங்கலாய்த்தான்.

  

ராமையா! எனக்கு அப்பவே தெரியும். கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுகிற மாதிரி இந்தப் பெண் தானாகத் தேடிக் கொண்ட வினை அப்பா இது. இனிமேல் சட்டியா பானையா மாற்றிக் கொள்வதற்கு? ஆயுள் பூராவும் அவதிப்பட வேண்டியது தான் போ ..."

  

"ஐயா! உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க. ராதா அம்மா வளர நீங்க எவ்ளவோ கஷ்டப்பட்டீங்க. மனம் நிறைஞ்ச வார்த்தையா ஏதாவது சொல்லுங்க. பாவம்! பின்னாலாவது அந்தப் பெண் சுகமாக இருக்கட்டும்" என்றான் ராமையா. ”படித்த பெண் தவறி நடக்கமாட்டாள். அவள் சுதந்திரத்தில் தலையிடக் கூடாதென்று டாக்டர் அவளைக் கவனிக்காமல் விட்டு விட்டார் அப்பா. பவானி அம்மாவை உனக்குத் தெரியாதா? அந்தப் பெண். பாவம் எப்படியெல்லாம் இருக்க வேண்டியவள். அவளுக்கு நல்ல முறையில் வாழ யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த வருஷம் படிப்பு முடிந்து விடுமாம். பாலுவும் படிக்கிறான். இனி மேல் அவர்களைப் பற்றிக் கவலை இல்லை."

  

அவர்கள் அந்த வீட்டின் உப்பைத் தின்று உடலை வளர்த்தவர்கள். ஆகவே தங்களுக்குள்ளேயே குமைந்து போய் பேசிக் கொண்டார்கள். வெளியாரிடம் ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை. வேலைக்காரர் களில் இப்படி ஒரு ரகம் உண்டு. நடக்காத விஷயங்களைக் கயிறு திரித்துக் கூறி கதை பேசுபவர்களும் உண்டு. இதில் எஜமானர்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் நல்ல அபிப்பிராயமும் அடங்கி இருக்கிறது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.