(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அச்சமயம் தோட்டக்கார கோபாலன் டாக்டர் ஸ்ரீதரனும் ஜெயஸ்ரீயும் வந்திருப்பதை அறிவித்தான்.

  

டாக்டரைக் கண்ட பவானி தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.

  

நாகராஜன் நீங்கள் அதிர்ஷ்டசாலி , உங்கள் தங்கைக்கு ஆரம்பத்திலேயே நல்ல சான்ஸ் கிடைத்து விட்டது. பலர் பணிபுரியும் ஓர் ஆஸ்பத்திரியில் ஒருவர் எவ்வளவுதான் திறமையாகச் சேவை செய்தாலும் அவர்களுடைய திறமை வெளிப்பட நாளாகும். ஒரு குடும்பத்தில் இருக்கும் மருமகள் எவ்வளவு தான் குடும்ப நிர்வாகத்தில் திறமைசாலியாக இருந்தாலும், அங்கிருக்கும் மாமியார். நாத்திகள். ஓரகத்திகள் இவர்களை மீறி அவள் திறமை வெளியாகப் பல வருஷங்கள் ஆகும்.

  

"அதே மருமகள் தனிக்குடித்தனம் நடத்தினால் சில மாதங்களில் அவளுடைய சாமர்த்தியத்தை மாமியாரே மெச்சுவாள். பசுமலை ஆஸ்பத்திரியில் தற்சமயம் அதிகமான நர்ஸ்கள் கிடையாது. அங்கிருப்பவர்களுக்குப் பவானி தலைவியாகப் போகிறாள். என்ன அம்மா பவானி? நீங்கள் ஒன்றுமே பேசவில்லை?” , என்று கேட்டார் ஸ்ரீதரன்.

  

எப்பொழுதுமே படபடவென்று பேசத் தெரியாத பவானி மிகவும் விநயமாக, ”உங்களுக்கு எல்லாம் தெரியும். நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்று கூறினாள்,

  

டாக்டர் ஸ்ரீதரன் அவளையும் மற்றவர்களையும் அடுத்த நாள் தமது வீட்டில் நடக்கும் விருந்துக்கு வரும்படி அழைத்தார். ”ஜெயஸ்ரீ! சுமதியை நீயே கூப்பிட்டு விடு அம்மா!' ' என்றார் ஸ்ரீதரன் வீட்டுக்குக் கிளம்பும் போது.

  

சுமதி அவசரமாக அவர் எதிரில் வந்து நின்றாள். பிறகு கணீரென்ற குரலில். ”டாக்டர் மாமா! அவள் என்னை அழைக்க இங்கே வரவில்லை" என்றாள்.

  

அங்கு நின்றிருந்தவர்கள் மனத்தில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டன. எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரனும் அவளை வியப்புடன் பார்த்தார்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.