ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது. இளமையில் எனக்குக் கிடைத்த அரிய நண்பர்கள் அவர்கள் இருவருமே, அவர்கள் நல்லபடி இருந்திருப்பார்களானால், ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். இப்போது இருவரும் இருவேறு வகையாய்த் தவறுகள் செய்து தடுமாறித் துன்புறுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன்.
பத்து நாள் கழித்து மாலனிடமிருந்து கடிதம் வந்தது. ஏதாவது ஒரு நல்ல செய்தி இருக்கும் என்று எதிர்பார்த்துப் பிரித்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்தக் கடிதம் என் கலக்கத்தை மிகுதிப்படுத்தியது. நான் சோழசிங்கபுரத்துக்குச் சென்றபோது, அவன் இல்லாமற் போனதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, பண முடையால் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தான்படும் துன்பத்தைப் பற்றி விரிவாக எழுதியிருந்தான். இந்த வேளை பார்த்துத் தன் மனைவி தன்னைக் கைவிட்டுத் தாய் வீட்டுக்குப் போய்ச் சுகமாக உட்கார்ந்திருப்பதாகக் குறித்திருந்தான். கடைசியாக, எப்படியாவது இந்தச் சமயத்தில் தனக்கு இரண்டாயிரம் ரூபாய் கடன் தரவேண்டும் என்றும், எந்தக் காரணத்தாலும் தட்டிக் கழிக்கக்கூடாது என்றும், இந்தச் சமயத்தில் இந்த உதவி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையே அடியோடு போய்விடும் என்றும் எழுதியிருந்தான்.
தங்கைக்குத் தையல்பொறி வாங்கித் தருவதாக மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு வந்ததை நினைத்துக் கொண்டேன். அதற்காக அந்த மாதச் சம்பளத்திலிருந்து நூறு ரூபாய் தனியே எடுத்து வைத்திருந்தேன். இன்னும் இரண்டு மாதம் அப்படி நூறு நூறு ரூபாய் எடுத்து வைத்தால் அவளுக்கு அதை வாங்கிக் கொடுத்துவிடலாம், அவ்வாறு செய்தால் பொருள் வகையிலும் அந்தக் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்ததாகும். அதைக் கொண்டு அக்கம் பக்கத்தாருக்குச் சோளி சொக்காய் முதலானவை தைத்துக் கொடுத்துத் தன் குடும்பத்துக்குச் சிறு வருவாயும் தேடிக் கொள்வாள் என மகிழ்ந்திருந்தேன். என் திட்டமெல்லாம் வீண் மனக்கோட்டை ஆனதாக வருந்தினேன்.
இரண்டாயிர ரூபாயை யாரிடமிருந்து நான் எப்படி வாங்கித் தருவது? தந்தையாரின் மளிகைக்கடை வீட்டுச் செலவுக்கு வேண்டிய வருவாயைக் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நிலையில் நான் அவரைப் பண உதவி கேட்க முடியாது. அவருக்கு இந்தச்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.