இன்னொருத்தன் அந்தப் பானையை வாங்கி, அதில் கொதித்த நீரை கீழே கொட்டிவிட்டு, மீண்டும், அதை மத்திய பானைக்குமேல் மல்லாக்க வைத்தான். இன்னொருத்தன் கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் கேனை தூக்கி அதற்குள் இருந்த தண்ணீரை அந்தப் பானையின் வாய்க்குள் தாரை வார்த்தான். அப்போது பானைத் தண்ணீர் கீழே சிந்தி நெருப்புமேல் பட்டு, அந்த நெருப்பை நாகப்பாம்பாய் சீறவைத்து, பின்னர் பூனைக்குட்டியாய் ஒப்பாரி போட வைத்தது.
துரை, உடம்பை நெளித்தபடியே கத்தினான் :
"அசல் நாட்டுப்புறண்டா நீ... தொழிலில் சுத்தம் வேணுண்டா சோமாறி"
"நாட்டுப்புறமுன்னா, அசமந்தமுன்னு நினைக்காதண்ணா... இப்போ நமக்கே கத்துக் கொடுப்பாங்க. இந்த காச்சலையே எடுத்துக்கோ. நாம அடிக்கடி மேல்பானை தண்ணிய மாத்தறோம். ஆனா நாட்டுப்புறத்துல பம்பு செட்டு தண்ணியையே வாய்க்கால் மாதிரி அந்தப் பானை மேல விடுறாங்கோ. அந்தப் பானையோ நம்ம அண்ணாத்தே வீடு மாதிரி சும்மா கும்முன்னு குளுராவே இருக்குது. சிலரு நிலத்துலயே ஊறல ஊத்தி வைக்கிறாங்க."
துரை, இப்போது பலமாகச் சிரித்தான்; சத்தம் போட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில், எல்லோரும் சேர்ந்து அதன் ஒலி அடர்த்திக்கு, ஒரு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் சரோசா மட்டும் சும்மாவே நின்றாள். துரை, அவளை செல்லமாக அதட்டினாள்:
"இன்னாமே ஒனிக்கி கேடு? ஜல்தியா, ஸ்பெஷல் தயாரிமே. அம்மாம் பெரிய கார எவ்வளவு நேரம் காக்க வைக்கிறது? இந்தா வாங்கிக்கோ."
அடித்துப்போட்ட இளங்கோவையும், அவன் துடித்த துடிப்பையும், மனதுக்குள் உள்வாங்கி, மருவிக் கொண்டிருந்த சரோசாவுக்கு, துரையின் பேச்சு காதுகளை உரசவில்லை. அதோடு அவளைப் போலவே ஏழ்மையில் இருந்தாலும், பாசமும், நேசமும் கொண்ட ருக்குமணியை நினைக்க நினைக்க, அவள் அண்டமாகவும், இவள் அணுவாகவும் பெருகிக்கொண்டும், சருங்கிக் கொண்டும் இருப்பதுபோல் தோன்றியது. இந்தக் கோலத்தில், இளங்கோ தன்னைப் பார்த்தால் அவன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் அவளை சாராயம் போடாமலேயே 'கிக்காக்கியது'. துரை, மீண்டும் அதட்டினான் :