சுகந்தங்கள் எல்லாம் எல்லையற்றவையாய் விளங்கின. வாசனைகளுக்கும் ஞாபகங்களுக்கும் மிக நுண்ணிய நெருக்கமான தொடர்பு இருந்தது போல் தோன்றியது.
இப்போது இந்தப் பூக்களின் நறுமணம் ரவியை மிகப் பல ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டு சென்று நினைக்கச் செய்தது. சங்கரமங்கலத்தின் அதிகாலை மெல்லிருளில் இந்தப் பூக்கள் இதழ் விரிந்து மணம் பரப்பும் வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடியில் போய்க் குளிர்ந்த தண்ணீரில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு திண்ணைக்கு வந்து தந்தைக்கு எதிரே அமர்ந்து அமர கோசமும் சப்த மஞ்சரியும், ராமோதந்தமும் வாய் மொழியாகப் பாடம் கேட்டு மனனம் செய்த பிள்ளைப் பருவம் நினைவு வந்தது. அதிகாலை மூன்றரை மணியிலிருந்து ஐந்து மணி வரை இப்படித் தந்தையிடம் வாய்மொழியாகப் பாடம் கேட்டுப் பாடம் கேட்டு மனனம் செய்த படிப்பு அவனுடையது. விடிந்ததும் மற்றப் பிள்ளைகளோடு பள்ளி சென்று முறையான ஆங்கிலப் படிப்பும் தொடர்ந்து நடக்கும்.
அந்நாளில் கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை. அந்த வைகறை இருளில் அகல் விளக்கை ஏற்றுவதற்காகும் நேரத்தைக் கூட அவனை வீணாக்க விடமாட்டார் தந்தை. இருளில் அமர்ந்திருந்து கணீரென்ற குரலில் அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்லிக் கற்ற கல்வி அது. 'ராமஹ ராமௌ ராமா; ராமம் ராமௌ ராமான் ராமேண ராமாப்யாம்' - என்று ராம சப்தம் நினைவு வந்தால் கூடவே காலைக் குளிரையும், கிணற்றடியையும் குடை மல்லிகைப் பூ வாசனையையும் நினைவு கூர்வது அவனுக்கு ஒரு பழக்கமாக ஆகி விட்டது. அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்வது ஒரு கணம் தடைப்பட்டாலும் தந்தை அவன் தூங்கிவிட்டானோ என்று காதைப் பிடித்துத் திருகுவார். அந்த இரு குரல்களும் அக்ரகாரத்துத் திண்ணையில் ஒலிக்கத் தொடங்கிய பின்பே சங்கரமங்கலத்தில் பொழுது புலரும். நிகண்டு சப்தம் எல்லாம் முடிந்த பின் ரகுவம்சம் முதல் காவியங்களெல்லாம் இப்படியே தொடர்ந்து கற்ற நாட்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. பணிந்து அடங்கிப் பயந்து கற்று வளர்ந்த சங்கரமங்கலத்துப் பிள்ளைப் பருவம், ஓரளவு விடுபட்ட கல்லூரிப் பருவம், முழுச் சுதந்திரமும் உல்லாசமும் நிறைந்த கட்டுப்பாடில்லாத பாரிஸ் நகர வாழ்வு, கமலியின் காதல் எல்லாமே மிக விரைவாக நிகழ்ந்து நிலைத்து விட்டவைபோல் இப்போது மலைச்சாலையில் வேகமாகப் பயணம் செய்யும் இந்த முன்னிரவில் அவன் மனத்துள் தோன்றின. மலைமேல் ஏறும் போதும் சீறிப் பொங்கி எழுந்து வரும் கடலலைகளை எதிர் கொள்ளும் போதும் எவ்வளவு வயதாகியிருந்தாலும் மனிதன் சிறு குழந்தையாகி விடுவதை ரவி உணர்ந்திருக்கிறான். இந்த