பைனாகுலர்ல பார்க்கலாம். எல்லாம் பார்த்துப் போட்டு மதியத்துக்கு மேலே கீழே திரும்புங்க போதும்!" என்றார் நாயுடு. வேணுமாமாவும் வசந்தியும் கூட அப்படியே செய்யலாம் என்றார்கள். அருவி நீராடுவதில், ஏலக்காய், தேயிலை, காபி எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்ப்பதில், யானைக் கூட்டத்தைக் காண்பதில் கமலியும் அதிகம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிந்தது.
மலையில் பகல் பதினொரு மணிக்கு மேல்தான் வெய்யில் தெரிந்தது. வெயில் கொஞ்சம் உச்சிக்கு வந்து உறைக்கத் தொடங்கிய பின்பே அவர்கள் அருவியில் நீராடச் சென்றார்கள். அவர்கள் போகிற வழியில் ஜீப்பை நிறுத்தி ஏலக்காய், தேயிலை, காப்பிச் செடிகளைக் காண்பித்துக் கமலிக்கு எல்லா விவரமும் சொல்லி விளக்கினார் நாயுடு.
அருவியில் பால் வெள்ளமாகத் தெளிந்த தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு வேகமாக மேலே இருந்து கொட்டும் நீரில் நின்று குளித்தால் தலை வலிக்காதா என்று வசந்தியிடம் கேட்டாள் கமலி.
வலிக்காமல் இருப்பதற்காகத் தலையில் நிறையத் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாள் வசந்தி. நிறையத் தேங்காய் எண்ணெயை வழியவிட்டுக் கொண்டு நின்ற வசந்தியைப் பார்த்து "இந்த எண்ணெய் முழுவதும் எப்படி நீங்கும்? குளித்து விட்டுத் திரும்பும் போது முகத்திலெல்லாம் வழியாதா?' என்று சந்தேகப்பட்டுக் கேட்டாள் கமலி.
"கவலைப்படாதே! தலை ஷாம்பூ போட்டுக் குளித்த மாதிரி ஆகிவிடும். வா சொல்கிறேன். நீயும் என்ணெய் தேய்த்துக் கொள்" என்று அவள் தலையில் எண்ணெயை வழிய விட்டாள் வசந்தி. கமலி அதைத் தடுக்கவில்லை.
"இந்த எண்ணெய் இல்லாமே வெறும் உடம்போட அருவி நீரில் போய் நின்னியோ கழுத்தும், பிடரியும் காதுகளும் அந்த வேகத்திலே ரத்தம் கன்றிச் சிவந்து போயிடும்" என்று எச்சரித்தாள் வசந்தி.
முதலில் வேணு மாமா, ரவி, நாயுடு ஆகியோர் அருவி நீராடலை முடித்துக் கரையேறினார்கள். கமலியும் வசந்தியும் விளையாட்டுக் குழந்தைகள் போல அருவி நீரைவிட்டு வெளியேற மனமில்லாமல் நீரில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.