இரண்டு இடங்களிலும் திடீரென்று மனிதனுக்கு வயது குறைந்து விடுகிறது. மூப்பு விலகி ஓடி விடுகிறது. தளர்ச்சி, தயக்கம் எல்லாம் பறந்து போய் உடனே உற்சாகம் வந்து விடுகிறது. மலையாயிருந்தாலும் உயரப் பறக்கும் விமானமாயிருந்தாலும் மேலே ஏறும் மாடிப் படியாயிருந்தாலும் - மேலே ஏறிச் செல்கிறோம் என்ற உணர்வே ஓர் உற்சாகம் தான்.
கார் தரை மட்டத்திலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வந்ததும் காற்றுக் காதை அடைத்தது. குளிர் அதிகமாகவே கார்க் கண்ணாடிகளை உயர்த்தி விட்டான் ரவி. கமலி இவன் மேல் துவளும் ஒரு மெல்லிய இதமான பூமாலையைப் போல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
நிர்த்தாட்சண்யமான கண்டிப்புடன் தந்தை எழுப்பி விட எழுந்திருந்து அந்த அதிகாலைக்கே உரிய சுகமான தூக்கத்தின் கிறக்கத்தோடு நடந்து போய்ப் பூக்களின் மதுரமான வாசனை நிறைந்த தோட்டக் கிணற்றடியில் சில்லென்ற பச்சைத் தண்ணீரின் குளிர்ச்சியில் தள்ளாடும் தூக்கத்தைக் கரைத்துவிட்டுத் தந்தைக்கு முன் பாடம் கேட்க அமர்ந்த வேளைகளில் இந்த அந்நிய நாடு உத்தியோகம், இப்படி ஓர் அழகிய காதல் எதையுமே அன்று அவன் கனவு கூடக் கண்டதில்லை.
ஆனால் நடந்தவையெல்லாம் - உண்மை என்பதற்கு அடையாளம் போல் கமலி அவன் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். வாசனைகளின் உருவகமாய் உறங்கும் இனிமையின் நிசப்த சங்கீதமாய் நிகழ்ந்தவற்றின் நிலையான சாட்சியாய், இதமான தன்மையும் வெப்பமும் இணைந்த அந்த நளினம் அவன் தோளில் கொடியாய்ப் படந்திருந்தது.
இரவு நேரமாக இருந்ததாலும், மலைச் சாலையில் நிறைய 'ஹேர்ப்பின்' வளைவுகள் இருந்ததாலும் பதினொன்றரை மணிக்குத்தான் அவர்கள் மலைமேல் எஸ்டேட் பங்களாவை அடைய முடிந்தது.
தரைமட்டத்திலிருந்து உயரம் அதிகமாயிருந்ததால் எஸ்டேட் பகுதியில் குளிர் மிகுதியாயிருந்தது. வேணு மாமாவும் வசந்தியும் நாயுடுவின் பங்களாவிலேயே தங்கிக் கொண்டார்கள். அந்தப் பங்களாவைவிட இன்னும் சிறிது உயரமாக மேட்டுப் பாங்கான இடத்தில் தனியே ஒரு 'கெஸ்ட் ஹவுஸ்' இருந்தது. அதன் உச்சிப் பகுதியில் போர்ட்டிகோ வரை போவதற்கும் சுற்றி வளைத்துத் தார் ரோடு போடப்பட்டிருந்தது. ஏதோ தேன் நிலவுக்கு