வந்தவர்களைத் தனியே கொண்டு போய் விடுவது போல் கமலியையும் ரவியையும் அங்கே கொண்டு போய் விட்டார் நாயுடு. குளிருக்கு இதமாகப் படுக்கை அறையில் 'ஹீட்டர்' இருந்தது. குளியலறை விளக்குகளுக்கான ஸ்விட்சுகள் இருக்குமிடம் எல்லாவற்றையும் நாயுடுவே, ரவிக்கு அடையாளம் காண்பித்து விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் பிளாஸ்கில் பாலும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான் ஓர் ஆள்.
கமலிக்குத் தூக்கம் விழித்திருந்ததால் அவள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். ரவி அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டு மெல்ல அவளைக் கேட்டான்.
"கமலி! மத்தியானம் நீ ரெஸ்ட் எடுத்துக்கலை போலிருக்கே...என்ன பண்ணினே? எப்படிப் பொழுது போச்சு? மாடியிலேயும் உன்னைக் காணலியே?.... கீழே போய் அம்மாட்டப் பேசிட்டிருந்தியா?"
வசந்தியும் தானுமாகப் போய்க் காமாட்சியம்மாளிடம் அம்மானையாடச் சொல்லி இரசித்ததையும் 'ரெக்கார்ட்' செய்ததையும் ரவியிடம் விவரித்தாள் கமலி.
"அம்மா உங்கிட்ட எப்படிப் பழகினா? கோபமில்லாமே சுமுகாமா இருந்தாளா?"
"சுமுகமாய் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதே சமயத்திலே கோபமாக இருந்ததாகவும் சொல்றத்துக்கில்லே...."
"நீ கொஞ்சம் பொறுமையாயிருந்துதான் அவ மனசை ஜெயிக்கணும். என் அம்மாவின் வயசை ஒத்த தலைமுறையைச் சேர்ந்த இந்தியத் தாய்மார்களுக்கு நெஞ்சழுத்தம் அதிகம். சுலபத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்."
"நம் உறவின் நெருக்கத்தைப் பற்றிய சந்தேகமும் பயமும் இன்னும் உங்கள் அம்மாவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது! நான் கையில்லாத ரவிக்கை அணிந்தது உங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்று வசந்தி வந்து சொன்னாள். நான் உடனே கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொண்டு தான் அம்மாவுக்கு முன்னால் போனேன்."