"நீ எதை அணிந்து கொள்ளக் கூடாது எதை அணிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அம்மா கோபித்துக் கவலைப்படுகிறாள் என்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான் கமலி! ஒரு பெண் எப்படி உடுக்க வேண்டும், எங்கே நிற்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்தப் பெண்ணின் காதலனுடைய தாய் கவனிக்கவும் கண்காணிக்கவும், கவலைப் படவும் கோபித்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டாலே அவள் அந்தப் பெண்ணின் மாமியாராகத் தன்னைக் கருதிக் கொள்ளத் தொடங்கிவிட்டாள் என்று தான் அர்த்தம்."
இதைக் கேட்ட கமலி சிரித்தாள். ரவியும் அவளோடு சேர்ந்து வாய்விட்டுச் சிரித்து விட்டான். காமாட்சியம்மாளின் இனிய குரல் பாடும் திறமை, அம்மானையாடும் அழகு எல்லாவற்றையும் வியந்து கூறிவிட்டு, "உங்கள் நாட்டுப் பெண்கள் நுண்கலைக் களஞ்சியங்களாக இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருக்கிறது" என்றாள் கமலி.
"ஒரு பெண் தன்னை விட மூத்த இன்னொரு பெண் மேல் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டாளென்றால் இந்தியாவில் அவளுக்கு ஒரு மாமியாரின் மருமகளாவும் தகுதி வந்துவிட்டதென்று அர்த்தம்."
அப்போது அவனுடைய பேச்சிலிருந்து ரவி மிகவும் உற்சாகமாக இருக்கிறான் என்று தெரிந்தது. கமலி வேணு மாமா வீட்டு விருந்தில் சந்தித்த சிலர் தன்னிடம் அதிகம் கூச்சப்பட்டு நாணியதையும் வேறு சிலர் சம்பந்தமில்லாதவற்றைப் பேசியதையும், விசாரித்ததையும் பற்றி ரவியிடம் இப்போது குறிப்பிட்டாள்.
"ஒரு பெண்ணிடம் பலர் முன்னிலையில் அளவுக்கதிகமாக வளைந்து நெளிந்து, கூனிக் குறுகிப் பாவனை செய்யும் ஆண்களிடம் அவர்களைத் தனியே சந்திக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கமலி. தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவையுள்ள போது தேவையான அளவு கூட நாணப்படாத பெண்ணும் சந்தேகத்துக்கிடமானவர்கள். விருந்தில் நீ சந்தித்த பலர் ஸ்பிளிட் பெர்சனாலிட்டிகள். உன்னைப் போல பல ஐரோப்பியர்கள் 'கிருஷ்ணா கான்ஷியஸ்னெஸ்', 'யோகா' 'ஸேக்ரெட் புக்ஸ் ஆஃப் ஈஸ்ட்' என்று கிழக்கே பார்த்து ஏங்குகிறீர்கள்! இங்கே இந்தத் தேசத்தில் சிலர் தாழ்வு மனப்பான்மையோடு எல்லாமே மேற்கில் தான் இருக்கிறது என்று மேற்கே பார்த்து ஏங்குகிறார்கள். அதனால் தான் நீங்களும் இவர்களும் சந்திக்கும்போது எதிரெதிர்த் திசையில் ஆர்வங்கள் செல்லுகின்றன. நீ நாயுடுவிடம்