நேரமாகவே, ரவியும் வேணு மாமாவும் குரல் கொடுத்தார்கள். பின்பே அவர்கள் கரையேறினார்கள். வசந்தி சொன்னது போல் இப்போது எண்ணெய் முழுவதும் நீங்கித் தன் தலைமயிர் பட்டுப் போல் மென்மையாகவும் மழமழப்புள்ளதாகவும் ஆகியிருப்பதைக் கமலி தொட்டுப் பார்த்து உணர்ந்து வியந்தாள்.
குளித்துக் கரையேறிய நாயுடுவின் தலையில் எண்ணெயே உபயோகித்த மாதிரித் தெரியவில்லை. அவருடைய வழுக்கைத் தலை தேய்த்த செப்புப் பாத்திரம் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. வேணுமாமா நாயுடுவைக் கேலி பண்ணினார்.
"என்ன நாயுடுகாரு - தலையிலே ஒண்ணுமே இல்லையே? எல்லாம் சுத்தமாப் போயிடுத்துப் போலிருக்கே!"
"வாக்கியம் சரியா அமையலியே மாமா? வேற ஏதோ அர்த்தப்படறாப்பலே இருக்கே? கேட்கிற கேள்வியை எதுக்கும் தெளிவாக் கேட்டுடுங்கோ" என்றான் ரவி.
"கோட்டாப் பண்ணாதீங்க. மயிர் உதிர உதிர அத்தனையும் அநுபவ முதிர்ச்சியாக்கும். உங்களுக்கும் நடுவாக வழுக்கை விழத் தொடங்கிடிச்சு. சீக்கிரம் நம்ம கட்சிக்கு வந்திடுவீங்க! ஜாக்கிரதை" என்று பதிலுக்கு வேணுமாமாவைக் கிண்டல் செய்தார் நாயுடு.
"நாயுடுகாரு! நல்ல வேளையா நம்ம தேசத்திலே இன்னம் இது ஒண்ணுக்குத்தான் தனியா ஒரு கட்சி இல்லே. போற போக்கைப் பார்த்தால் இதுக்கும் கூட யாராவது ஒரு கட்சி தொடங்கிடுவீங்க போலிருக்கே!"
"தொடங்கினா என்ன தப்புன்னேன்?"
"தப்பு ஒண்ணுமில்லே எவ்வளவு மொத்தம் பாபுலேஷனா அவ்வளவு பேரும் ஆளுக்கொரு கட்சி தொடங்கிட்டா அப்புறம் ஓட்டுப் போடறதுக்குன்னு தனியா யார் தான் மீதமிருப்பாங்க? ஓரொரு கட்சிக்கும் ஓரொரு வோட்டுத்தான் விழும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு சொல்றாப்ல எல்லோரும் இந்நாட்டுத் தலைவர்னு ஆயிடும். மக்கள்னு தனியா யாரும்