மரப்பெட்டியில் கொண்டு போய் வைத்துவிட்டுச் சமையலறையில் எட்டிப் பார்த்தபோது புதிர் தானாக விடுபட்டது. உள்ளே தோசைக்கு மாவரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் அவரைக் கேட்டாள்: "ஏன்னா வாசல்லே யாரோ புருஷாள் வந்து பேசிண்டிருந்த மாதிரி காதிலே விழுந்ததே? பாருவை விளக்கேத்தித் திண்ணைப் பெறையிலே வையின்னு குரல் குடுத்தேனே? செஞ்சாளோ? சனியன்... இங்கேயிருந்து எத்தனை தடவை தான் கத்தறது? செய்யறேன்... செய்யலேன்னு ஒரு வார்த்தை பதில் சொல்லப்பிடாதோ? பெண்கள் ரெண்டெழுத்துப் படிச்சிட்டாலே பிடிபடாமத் தலை கனத்துப் போயிடறதுகள் இந்த நாளிலே?...."
"இங்கே பாரு எங்கே இருக்கா? அவ இன்னும் வரவே இல்லியே?" - என்று வாய் நுனி வரை வந்து விட்டது சர்மாவுக்கு. ஆனால் அதைச் சொல்லாமல் "விளக்கேற்றி வச்சாச்சு. வாசல் திண்ணைப் பெறையிலே விளக்கைப் பார்த்தேன். நீ பாட்டுக்குக் கவலைப் படாமே உன் கைக்காரியத்தைப் பார்" - என்று வேறு வார்த்தைகளைச் சொல்லிச் சமாளித்தார் சர்மா. கமலிதான் அதைச் செய்தாள் என்று காமாட்சியம்மாளிடம் சொல்லி அப்போது கமலியை வம்பிலே மாட்ட வைக்க விருப்பமில்லை அவருக்கு.
நல்லவேளையாக அப்போது கமலியும் அங்கே இல்லை. மாடிக்குப் போயிருந்தாள். ரவியையும் தன்னோடு ஆற்றங்கரைக்கு அழைத்துப் போகக் கருதி மாடிக்குப் போகும் படிக்கட்டில் நாலைந்து படிகள் ஏறி அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டார் அவர்.
"அவர் இல்லை. நாலைந்து வீடுகள் தள்ளி இதே தெருவிலே யாரோ பழைய சிநேகிதரைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன் என்று போயிருக்கிறார்" - என்று கமலி மாடியிலிருந்து எட்டிப் பார்த்து சர்மாவுக்குப் பதில் சொன்னாள். பதில் சொல்லியதோடு நிற்காமல் "ஏன்? ஏதாவது செய்யணுமா? நான் செய்யறேன் சொல்லுங்களேன்" - என்றும் தானே முன் வந்தாள்.
"ஒண்ணுமில்லேம்மா! நீ ஏதோ படிச்சிண்டிருக்கே போலிருக்கே... படி..." - என்று அவளுக்குப் பதில் கூறிவிட்டுப் புறப்பட்டார் சர்மா. முதலில் அவளை 'நீங்கள்' என்று தான் விளிக்க நினைத்தார் அவர். அப்புறம் அது மிகவும் செயற்கையான காரியம் என்று அவருக்கே தோன்றியது. கிராமத்தில் இளம் பெண்களையும் அவருக்கு மருமகள் ஆகிற முறைக்கு வயதுள்ள பெண்களையும், இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி விட்ட ஆனால் அவரைவிடப் பால்யமான பெண்களையும் 'நீ' என்று பேசித்தான் அவருக்குப் பழக்கம்.