உருட்டிக்கொண்டு போனார்கள். பதவி என்றால் சும்மாவா?
ஆங்காங்கே கும்பல் கும்பலாய் மாணவர் கூட்டம். பேராசிரியர்கள் ஒதுங்கி நின்றும், உதவிப் பேராசிரியர்கள் ஒதுக்கப்பட்டும், அந்தத் தேர்தல் திருவிழாவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்நாளில் ஒரு தடவை கூட வாக்களிப்பதில்லை என்று கங்கணம் கட்டிய ஒரு சில தாடிக்கார அறிவு ஜீவிகள், அங்கே நடப்பதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஆங்கில இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். வாக்குப் பதிவு அமைதியாக நடப்பதற்கு உறுதி செய்ய காவலுக்குப் போட்ட போலீஸ்காரர்களும், அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கல்லூரிக்கு வெளியே இரண்டு கட்சிக்காரர்கள் கத்தியும் கம்புமாக சோடாவும் பாட்டிலுமாக ஆயத்த நிலையில் நின்றார்கள்.
ஒரு மாணவப் பட்டாளம், இசைக் கருவிகளோடு பாடிக்கொண்டு, விடுதிகளில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் மாணவ மாணவியருக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியது. ஒருத்தனிடம் உடுக்கு, ஒருத்தியிடம் கஞ்சிராக் கட்டை, இன்னொருத்தன் ஜால்ரா. ஜான்சி, கண்ணகி, இளவரசி போன்ற பெண் விடுதிகளில் ‘வாங்கம்மா வோட்டுப் போட’ என்று ஒரு பையன் முதல் தடவையாக மரியாதையோடு பாடியபோது, சில பெண்கள் மாடி முனைக்கு வந்து “நாங்க என்ன கிழவிகளா, அம்மாவாம். அம்மா. இந்த லட்சணத்துல ஒங்களுக்கு வோட்டு வேற போடணுமா” என்று கேட்டுவிட்டு உள்ளே போய் விட்டார்கள்.
இந்தக் கேளிக்கைக்கு மறுபக்கம், ஒரு தரப்பு மாணவர்கள் ஒரு லெதர் பைல் கவரை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். குறைந்தது முப்பது ரூபாய் வெறும் பைல் கவர். அசல் காகிதம் போன்ற நிறம். உள்ளே வெல்வெட் துணி வியாபிக்க அதன் இரு பக்கமும் இரண்டு ரெக்ஸின் கவர்கள். இரண்டிலும், ஒரு பேனா, ஒரு குறிப்புப் புத்தகம், ‘தலைவனின்’ படம். இதேபோல், இன்னொரு தரப்பு ஓசைப்படாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கவர்’ கொடுத்தது. அதுக்குள்ளும் பணத்தோடு சேர்ந்த இன்னொரு தலைவனின் படம். பெரும்பாலான மாணவர்கள் ஒன்றை வாங்கி அறைக்குள் போய் வைத்து விட்டு, அடுத்த தரப்பிலிருந்து அதையும் வாங்கிக் கொண்டார்கள். தலைவன்களின் படத்தைக் கிழித்துப் போட மறக்கவில்லை.
இந்த அமர்க்களத்தில், சுயம்பு லுங்கியைக் கட்டிக் கொண்டே அங்குமிங்குமாய் அலைந்தான். அவன் கண்கள் டேவிட்டைத் தேடிக் கொண்டிருந்தன. கண்களைக் கால்கள் பின்பற்றின.