சுயம்பு, அரிச்சந்திரன் மாதிரி தலையாட்டினான். இதற்குமேல் மூர்த்தியால் பொறுக்க முடியவில்லை. முத்து வேறு அவன் முதுகைக் கிள்ளிவிட்டான்.
“சார். சார். இவன் மனநிலை சரியில்லாதவன் சார். போனவாரம் சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட கூட்டிட்டுப் போனோம் சார். மனசு சுத்தமானவன் சார்.”
“புத்திசாலியான போக்கிரிய விட, சுத்தமான முட்டாள் அபாயமானவன்னு உனக்குத் தெரியுமா யங் மேன். நீ இதுல தலையிடாதே. மை டியர் சைல்ட். உன் பேரு என்னம்மா... என்ன நடந்ததும்மா...”
பிரமிளா அழுதாள். அவள் அடித்த இடத்திலேயே, சில பெண்கள் சுயம்பு மனநோயாளி என்று அவள் காதைக் கடித்தார்கள். அப்படிப்பட்ட ஒருவனை, இப்படிச் செய்து விட்டோமே என்று மனவாதையில் அழுதாள். விட்டுடுங்க சார் என்றுகூட சொல்லப் போனாள். ஆனால் இப்போது கடைசியாக அவர் சேர்ந்திருக்கும் பொன்முகத்தைப் பார்த்தாள். அந்த முகம் இறுகிக் கிடந்தது. அவளால் அழத்தான் முடிந்தது. பேச முடியவில்லை. இந்த அழுகையையே, பதிவாளரும், இன்ஸ்பெக்டரும், சுயம்புவுக்கு எதிரான ஒரு சாட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். பொன்முகன், அவளுக்குப் பிரதிநிதியாகப் பேசினான்.
“ஒருவர் செயல்பட்டால்தான் மதிப்பீடு செய்யப்படுகிறார். நோக்கங்களால் அல்ல... ஆக்ஷன்... நாட் இன்டென்ஷன்... நாளைக்கே இவன் ஒரு பெண்ணை ரேப் செய்யலாம். தட்டிக் கேட்கிற, என்னை மாதிரி ஆட்களை கொலைகூடச் செய்யலாம். மனநிலை சரியில்லன்னு அப்போ சொல்ல முடியுமா. அதோட பிரமிளா லோக்கல் கேர்ள். அவங்க கம்யூனிட்டி இந்த டவுனில் அதிகம். நாளைக்கே கதவடைப்பு செய்தால் நம்ம காலேஜுக்கு கெட்ட பேரு இல்லியா. ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துணவனுக்கு பதிவாளரான நீங்க என்ன தண்டனை கொடுக்கப் போறீங்க?”
இன்ஸ்பெக்டர் நிமிர்ந்தார் - தான் ஏன் தீர்மானிக்கக் கூடாது என்பதுபோல். அதோடு கதவடைப்பு நடந்தால் முதல் சஸ்பெண்ட் அவர்தான். பதிவாளரிடம் நாசூக்காக பேசப் போனவர் திடுக்கிட்டு எழுந்தார். ஒரு சல்யூட் அடித்தார். அதை ஏற்றுக்கொண்டே உள்ளே வந்த டி.எஸ்.பி ரிஜிஸ்ட்ராரைப் பார்த்து வணக்கம் போடாமலே தனது வருகையின் நோக்கத்தைக்