போறதில்ல. காதல் ஒரு வழிப் பாதையா இருந்தாலும் காதல் காதல்தானம்மா... எங்க இலக்கியத்துல இதைப் பொருந்தாக் காமம் என்று சொல்லுவாங்க... இருக்கட்டுமே... பொருந்துதோ பொருந்தலியோ... அவரு இருக்கிற இந்த மனசுக்குள்ள... அடுத்தவன் போக முடியாதும்மா...”
கங்காதேவி மகளையே பார்த்தபடி நின்றாள். மனத்திற்குள் வியாபித்த மீசைக்காரன் லேசாய் விலகி, மருமகனைப் பற்றிய ஒரு வடிவக் கோட்டை அந்த மனமே போட்டுக்கொண்டது. இதற்குள் மேகலை, தனது பழைய அறைக்குள் ஓடிப்போய், பழைய சூட்கேஸோடு வந்தாள். துணிகளையும் அங்கேயும் இங்கேயுமாய்ச் சிதற அடித்துவிட்டு ஒரு புகைப்படத்தை நாணிக்கோணியபடி, கங்காதேவியிடம் காட்டினாள். அவள் செல்லமாக அதட்டினாள்.
“இப்படியாடி படத்தை கசக்கி வைக்கிறது. நான் சொல்றேன். சாமுத்திரிகா லட்சணப்படி இவன் நல்லவன். அரவானுக்கு முப்பத்திரண்டு லட்சணங்கள் இருந்தால், இவனுக்கு இருபதாவது தேறும். இவனை நினைத்தால், எவன் நெணைப்புமே வாராதுடி... இதைக் கொஞ்சம் பெரிசு படத்தி பிரேம் போட்டு மாட்டிடலாம். ஒன் மேஜையிலேயே வச்சுக்கோ. அப்புறம் ஒங்க அம்மா அப்பா, அடிக்கடி என்கிட்டச் சொல்வியே அக்கா, அவங்க படம் இருந்தாலும் கொடு. பிரேம் போடுவோம். இந்த வீட்ல இனிமேல் ஒனக்குத்தாண்டி முதல் மரியாதை. நான் முர்கேமாதாவோட ஆலமரத்தடியில் ஒதுங்கப்போற கிழவி...”
மேகலை, மீண்டும் சுயம்புவாகி, பெற்றொரை நினைத்தான். கூடப்பிறந்தவர்களை நினைத்தான். சின்னப் பிள்ளைகளை நினைத்தான். கண்கள் பொங்கின. இதயம் கழண்டுவிடும் போலிருந்தது. பிறகு உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி, மனத்தை ஒரு நிறுத்து நிறுத்திக் கங்கா தேவியின் தோளில் சாய்ந்து மேகலையாய் ஒலமிட்டாள்.
“எல்லாமே நீதாம்மா. நீதாம்மா...”
அப்போது -
சுயம்புவின், கத்தலைப்போல் ஆயிரம் ஆயிரம் கத்தல்கள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அலிகளின் புலம்பல்கள். பலத்த ஒப்பாரி. அங்குமிங்குமான காலடிச் சத்தங்கள். ‘மாதாஜி மாதாஜி’ என்ற புலம்பல்கள். தாயும், மகளும் வெளியே எட்டிப் பார்த்துப்