(Reading time: 14 - 28 minutes)
Vata malli
Vata malli

Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 43 - சு. சமுத்திரம்

வாடா மல்லி, அத்தியாயம் - 43

  

ண், பெண், அலி என்ற அத்தனை தன்மை களையும் தாண்டிப் போனவள்போல், மேகலா அக்காவின் படத்தைப் பார்த்த விதத்தைப் பார்த்தான், பார்த்தாள், பார்த்தது. என்றுகூடச் சொல்லமுடியாது. இதற்கும் மேலான ஒரு வார்த்தையை இனிமேல்தான் தேட வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும்.

  

வீட்டிலிருந்து கொண்டுவந்த, அக்காவின் படத்தைச் சிறிது பெரிதாக்கி கங்காதேவியின் புகைப்படத்திற்கு அருகே மாட்டிவிட்டாள். அக்கா எழுதிய அந்தக் கசங்கிய ‘எட்டு வயதுக்’ காகிதத்தை அதைவிடப் பெரிய கலர்த் தாளில் ஒட்டிவிட்டாள். அதையும் பிரேம் செய்து அக்காவின் படத்திற்குக் கீழே மாட்டிவிட்டாள். அந்தக் கடிதத்தை டில்லிக்குத் திரும்பிய பிறகு, இந்த ஒரு மாத காலத்தில் ஐநூறு தடவைக்குமேல் படித்திருப்பாள். அக்காவுக்குச் செலுத்தப்போகும் லட்சார்ச்சனை போல், இன்னும் படித்துக்கொண்டே இருக்கிறாள். அவளுக்கு அது ஒரு திருக்குறள். படிக்கப் படிக்க மீண்டும் படிக்கத் தூண்டும் பாசக்குறள். அந்தக் குறளில் அக்காவின் குரலும் ஒலித்தது...

  

மெத்தை நாற்காலியில் உட்கார்ந்தபடியே, அக்காவின் படத்தையும், கோவில்களில் வைத்திருப்பது போன்ற மந்திரத் தகடாய் அக்கா படத்திற்குக் கீழே சாத்தி வைக்கப்பட்ட அந்தக் கடிதமிருக்கும் கண்ணாடிச் சட்டத்தையும் உற்றுப் பார்த்தவள், அக்காவும் தானும் உறவாடிய ஊருக்கு மீண்டும் போகப் போகிற மகிழ்ச்சியை நினைத்தபடியே எழுந்தாள். இதற்குள், நீலிமா இரண்டு சூட்கேஸ்களை ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைத்து விட்டு, போர்வைகளை மடித்து, ஒயர்க் கூடைக்குள் திணித்தபடியே, “ஜல்தி, ஜல்தி” என்றாள். பிறகு மேகலையின் முன்னால் போய், தனது கடிகாரம் கொண்ட கையைத் தூக்கிக் காட்டினாள்.

  

மேகலை அவசர அவசரமாக எந்தப் புடவையைக் கட்டலாம் என்பதுபோல் யோசித்தாள். காலத்தின் கோபத்தையும் கருணையையும் நினைத்தபடி வெளிர் மஞ்சள் புடவையை எடுத்து உடம்பில் சுற்றியபடியே உள்ளத்தைச் சுற்றவிட்டாள். அண்ணனின் கடிதம் முந்தா நாள் கிடைத்தது. பதினைந்து நாட்களுக்கு முன்பு கலியாண அழைப்பிதழுடன் அவன் அனுப்பிய கடிதம். தேதி நன்றாகவே தெரிகிறது. தபால் முத்திரையும் அப்படியே. ஆனால் தபால்துறை, இதர சகோதரத் துறைகளைப்போல் பின்வாங்குவதில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.