வெங்காயம் உரித்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து, சாம்பார் கொதித்தபோது வெங்காய வாசனை கமகமத்தது!
"கதவைச் சாத்துங்க, வாசனையை வெளியே விடாதீங்க.... ஜாக்கிரதை!" என்று எச்சரித்தார் புள்ளி.
எல்லாக் கதவுகளையும் மூடி , துளி வாசனை கூட வெளியே போகாதபடி துவாரக பாலகர் மாதிரி காவல் காத்தார் முத்து.
புள்ளி சுப்புடு விசிறியால் வீசி, வீசி வாசனையைக் கலைத்துவிட்டுக் கொண்டிருந்தார்.
வீட்டுக்கார அம்மாள் உட்கார்ந்திருந்த கவுண்ட்டர் வரை போய் நின்று அங்கு சாம்பார் வாசனை வருகிறதா என்று மோப்பம் பிடித்துப் பார்த்தார் புள்ளி.
வீட்டுக்கார அம்மாவோடு பேச்சுக் கொடுத்து. அவள் கவனத்தை திசை திருப்பினாள் கோமோச்சி. முத்து ஊதுவத்தி கொளுத்தி வைத்து சாம்பார் வாசனையை அதில் மறைக்கப் பார்த்தார்.
சாம்பாரைக் கீழே இறக்கி வைக்கிற போது வீடு பூராவும் வாசனை அடர்த்தியாய்ப் பரவிவிட்டது.
வீட்டுக்கார அம்மாள் மூக்கை உறிஞ்சி உறிஞ்சி, ’அதென்ன வாசனை! எங்கிருந்து வருகிறது?' என்று யோசித்தாள். சந்தேகத்துடன் மேலே இவர்கள் தங்கியிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தாள்.
"ஐயோ, வீட்டுக்கார அம்மான் தெரிஞ்சு போச்சு போலிருக்கு என்ன ஆகப் போகுதோ!" என்று எல்லோரும் பயந்து போய் திருட்டு முழி முழித்தார்கள்.
அந்த அம்மாள் "இங்கே சமையல் செய்தீர்களா?' என்று அதிகாரமாய்க் கேட்டாள்.