பிறகும்கூட கனபாடிகள் சாப்பிடாமல் மூர்த்தியை நினைத்து உருகிக் கொண்டிருந்தார். கமலா மெதுவாக அவர் அருகில் போய் நின்று "மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க, சாப்பிட வாங்கப்பா!" என்று அழைத்தாள்.
"வேண்டாம்மா; எனக்குப் பசியே இல்லை!"
"வெறும் வயிற்றோடு படுக்கக் கூடாது. மூர்த்தி உங்களுக்குப் பிடிக்கும்னு திராட்சைப் பழம் வாங்கி அனுப்பியிருக்கான், இந்தாங்க, இதையாவது சாப்பிடுங்க" என்றாள் பாகீரதி.
"மூர்த்தியா எனக்கா? அனுப்பியிருக்கானா!" கனபாடிகள் ஆவலோடு அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டார். திராட்சை தேனாக இனித்தது. (அடாடா, இந்த மூர்த்திக்கு என் மீது எத்தனை அன்பு !)
"கமலா! நான் படுக்கப் போறேன், காலெல்லாம் வலிக்கிறது. இன்றைக்கு ரொம்ப தூரம் நடந்தே வந்தேன். கிட்டாவைக் கூப்பிட்டு என் காலைக் கொஞ்சம் மிதிக்கச் சொல்லு. நான் இப்படியே இந்த மான்தோல் மீது படுத்துக் கொள்கிறேன்" என்றார்.
கிட்டா வந்து அவர் கால்களை மிதிக்காமல் கைகளால் பிடித்துவிட்டான்.
“காலால் மிதிடா, அப்பத்தான் வலி போகும். இல்லைன்னா என் கால் வலியெல்லாம் உன் கைக்கு ஏறிடும்!" என்றார்.
"பரவாயில்லே; நான் பிடிச்சே விடறேன்" என்றான் கிட்டா.
"ஒகோ, உனக்கு ஒரு கால் ஊனமோ?..."
"அதுக்கில்லே. குருவைக் காலால் மிதிக்கலாமா? பாவமில்லையா!””
"குரு சொல்லைத் தட்றதுகூடப் பாவம்தாண்டா, பரவாயில்லை; மிதி" என்றார்.
அவன் ஒற்றைக் காலால் மிதிக்கும்போது கனபாடிகளின் கண்கள் மாலை மாலையாய்க் கண்ணீர்