Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 09 - சாவி
வேப்ப மரத்துக் காக்கை கரைய "யார் வரப் போறாளோ, தெரியலே" என்று கமலா சொல்லி வாய் மூடுமுன் வாசலில் ஜட்கா வண்டியிலிருந்து சிதம்பரம் கெளரி அத்தை கழுத்தில் காசுமாலை பளபளக்க இறங்கிக் கொண்டிருந்தாள்.
"திடீர்னு அத்தை வந்திருக்காளே, என்ன விஷயமோ!" என்று எண்ணிக் கொண்ட கமலா "பாகீ! வாசல்ல யார் வந்திருக்கா பாரு" என்றாள்.
அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த பாலை அடக்கிவிட்டு ஓடிவந்த பாகீரதி அத்தையைக் கண்டதும் அகமும் முகமும் மலர "வாங்க அத்தை ! நேத்தெல்லாம் உங்க நினைப்புத்தான் எனக்கு" என்றாள்.
அத்தையை ஆர்வத்தோடு அணைத்துக் கட்டிக்கொண்டவள் மகிழ்ச்சி பொங்க "நீங்க வருவீங்கன்னு மனசிலே தோணிண்டே இருந்தது, அத்தை !" என்றாள்.
"இட்சிணி ஏதாவது சொல்லித்தா?"
அத்தையின் கையிலிருந்த பரண்டையையும் தாழம்பூவையும் வாங்கிக்கொண்ட கமலா “காக்கா கத்திண்டே இருந்தது!" என்றாள்.
"நீ எப்ப வந்தடி இங்க? அம்புலு எங்கே?" என்று கேட்டாள் அத்தை.
"தூங்கறது. நாலு நாளாச்சு வந்து ஊருக்குப் போகணும்னு சொல்லிண்டேதான் இருக்கேன். இதுக்குள்ள என்னென்னவோ குழப்பம் !"
"என்ன குழப்பம்?"
“என்னவோ! ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லே!"
அதைத் தெரிந்துகொள்வதில் அத்தை அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அப்புறம் நிதானமாக விசாரித்துக் கொள்ளலாம் என எண்ணி "அண்ணா எங்கே?" என்று கேட்டுக்கொண்டே பின்கட்டுப்