(Reading time: 18 - 35 minutes)

“பின்ன உன் மூஞ்சிய கண்ணாடியில பார்த்திருக்கியா நீ?” மீண்டும் அவன் சிரிக்க அவளுக்கு சுரீரென வலித்தது. பார்த்திருக்கிறாள், கருமை நிறம், சற்றுமுன் தள்ளிய பல் என தினமும் பார்க்கும் முகம்தான் அது. சட்டென பதிலடி கொடுக்கமுடியாமல் அமர்ந்திருந்தாள் அவள். அவன் தனது தோற்றத்தை குறை சொல்லுவான் என்று எதிர்ப்பார்க்கவில்லை அவள்.

“என் அம்மாவுக்கே உன்னை பிடிக்கல. ப்ரண்ட்ஸ் வேற உன்கூட நான் தனியா வந்தா கலாய்க்கிறானுங்க தெரியுமா? ஏதோ நீ தனியா இருக்கியேனு நானும் பேசிட்டு இருக்கேன். அதுமட்டும் இல்ல, என்னை தேடி வர அழகான பொண்ணுங்க எல்லாம் ஒன்னும் கல்யாணம் பண்ணவங்களா இருக்காங்க, இல்லைன்னா கமிட் ஆகிடுறாங்க.லக்கே இல்லை எனக்கு”என்றான் அவன். அவன் சொன்ன முதல் வாக்கியத்திலேயே அதிர்ச்சிக்குள்ளானவளுக்கும் அதற்கு பிறகு அவன் சொன்னது எதுவுமே பெரிதாக தோணவில்லை.

“அம்மாவுக்கு என்னை பிடிக்கலனு சொன்னியே. ஏன் அப்படி சொன்ன?” உள்ளே போய்விட்டகுரலில் கேட்டாள் அவள். அவள் குரலில் தெரிந்த மாற்றத்தை கவனித்தவன் சற்று ஆறுதலாக பேசுவதாய் நினைத்துகொண்டு பதில் கூறினான்.

“அட லூசு. உன்னை பிடிக்கலனு இல்லடீ. நீ நல்ல பொண்ணுனு தெரியும் அவங்களுக்கு. ஆனா நம்ம ஜோடி பொறுத்தம் நல்லா இல்லனு ஃபீல் பண்ணாங்க.”

“ஜோ பொறுத்தமா?”

“உனக்கு எல்லாத்தையும் ஃபுல்லா சொல்லனுமா? சரி கேளு. எனக்கு என்னுடைய பெஸ்ட்டு ப்ரண்டைகல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை. அது அம்மாவுக்கும் தெரியும். அதனால நான் எந்த பொண்ணுகிட்ட பேசினாலும், ஃபோட்டோ காட்டு அவ என் மருமக மாதிரி இருக்காளானு பார்க்குறேன்னு சொல்லுவாங்க.”

“..”

“அப்படித்தான் உன் ஃபோட்டோவும் காட்டினேன். என்னைவிட நீ ரொம்ப குள்ளம், கலரும் கம்மி ஆச்சே.. அதை பாத்துட்டு இந்த பொண்ணு உனக்கு மேட்சாவே இல்லனு சொன்னாங்க!” இதெல்லாம் ஒரு விஷயமெ இல்லை என்பது போல பேசியவனை அருவருப்பாக பார்த்தாள் அவள்.

“என்ன பழக்கம் இது? இன்னொரு வீட்டு பொண்ணை எடை போடுறது? அதுவும் அம்மாவா அப்படி பண்ணாங்க?நம்பவே முடியல”

“ஹேய்.. எதுக்கு ஓவரா சீன் போடுற? உன்னபத்தி நல்லவிதமா பேசலனு காண்டாகாதே! இதெல்லாம் எப்பவுமே நடக்குறதுதானே? நான் எங்கம்மாவுக்கு ஒரேபையன். பார்க்கவும் ஹீரோ மாதிரி இருக்கேன். நல்லா சம்பாதிக்கிறேன். எனக்கு வரபோறவ எனக்கு சமமா இருக்கனும்னு நினைக்கிறது தப்பா?”

“இது ஒன்னும் புதுசா நடக்கலயே. காலம் காலமா அரேஞ்ச் மேரேஜ்ல இதுதானே பண்ணுறாங்க? பொண்ணு ஃபோட்டோல அவ நல்லவளா கெட்டவளான்னா எழுதி ஒட்டி இருக்கு? மூக்கு முழியுமா லட்சனமா இருக்காளானு தானே முதலில் பார்க்குறாங்க? அவ அழகா புடிச்சமாதிரி இருந்தால் தானே மத்ததை விசாரிக்கிறாங்க? எத்தனை பேரு பொண்ணு அழகா இல்லனு வேற பொண்ணை பார்க்கிறாங்க. அதெல்லாம் தப்பு இல்லையா? யாரோ தெரியாத குடும்பத்து பொண்ணை நிராகரிக்கிறது சரி, ஆனா பையன் கூட பழகுற பொண்ணு பார்க்கம் நல்லா இருக்காளானு யோசிக்கிறது தப்பா? நல்ல நியாயம்தான்”

“இது பாரு உனக்காக ஒரு அழகான பொண்ணை பார்க்குறது தப்பில்லை.. ஆனா மத்தவங்க வீட்டு பொண்ணை குறை சொல்லாதிங்க..உனக்கொரு தங்கச்சி இருந்தால்?”

“ஷபா ..காலம் காலமா இது ஒரு டைலாக் வெச்சுப்பீங்களே”என்று அவன் பதில் பேசும்போதெ அவனது செல்ஃபொன் அலறி அப்பேச்சினை குறுக்கிட்டது.

“ஓகேப்பா வரேன்” என்று  ஃபோனை வைத்தவன், தன்னருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவன் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த நேரமே தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகி இருந்தாள் அவள்.

“அப்பா வீட்டுக்கு கூப்பிடுறாரு..வா உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்.”

“தேவை இல்லை. ஒரு அழகான பையன் இப்படி  சுமாரான பொண்ணை கூட்டிட்டு போறான்னு ஊரே உன்ன பாத்து சிரிக்குமே”

“ஷபா.. எல்லாத்தையும் இமோஷனலா பாக்காம கொஞ்சம் ப்ராக்டிகலா இரு”

“ஹா.. இமோஷனலா பாக்காம? நீ பேசினது வேற யாருபத்தியோ இல்ல..என்னைப்பத்தி.. இப்படி கூட நான் ரியக்ட் பண்ணலனா எனக்கு சொரணையே இல்லைனு அர்த்தம்”

“இப்போ என்ன சொல்ல வர?”

“கண்டிப்பா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண நினைக்கல.உனக்கு நான் தேங்க்ஸ் தான் சொல்ல போறேன். என்னை பத்தி நீ என்ன நினைக்கிறன்னு நேரடியா சொல்லிட்டியே அதுவே பெரியசந்தோஷம். ஆனா ஒரு விஷயம் சொல்லு நீ எனக்காகவா என்னோட இருக்க?அவ்வளவு பெரிய தியாகியா நீ?”

“..”

“உனக்கு என்மேல அக்கறை இருக்கலாம். பட் அதுமட்டும் காரணமா இருக்கவே முடியாது. என்கிட்ட இருந்து கிடைக்கிற அன்பு, கரிசனம், இதையெல்லாம் நீ யூஸ் பண்ணிக்கிற .. உனக்கு தேவைப்படும்போது நான் அங்க இருக்கனும் அப்படித்தானே?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.