(Reading time: 20 - 40 minutes)

"ஓ அப்போ இனிமே லேட்டா தான் வர போறீங்களா ? வெரிகுட்,  நறுமுகை , என்னோட நெம்பரை அவங்களுக்கு கொடும்மா  ..” என்றுவிட்டு திரும்பியே பார்க்காமல் சென்றான் அவன்.

அவசியத்துக்கு மேல் ஒரு வினாடி கூட அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. பேசும்போது கூட கண்களைத் தவிர வேறு எங்குமே அவன் பார்வை செல்லவில்லை. அனாவசிய பேச்சுக்கள், தேவையில்லாத முகஸ்துதி போன்றவற்றிற்கே அதிகம் பழக்கப் பட்டிருந்த அவளுக்கு அவனது அலட்சியம் ஆச்சர்யமாக இருந்தது. ஏனோ அந்த நறுமுகையின் மேல் பொறாமையாக இருந்தது. அவளைமட்டும் ‘அம்மா’ என்று  அழைக்கிறான் , நா மட்டும் மேடம் ஹீம் எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். அவனைப் பார்த்து முழுசாக ஒரு நாள் ஆகவில்லை. ஆனால் அதற்குள் அவனிடம் உரிமை கொண்டாடும் தன் மனதை என்ன செய்வது என்று அவளுக்கே வியப்பாக இருந்தது.

மறுநாளிலிருந்து சரியாக ஒன்பது மணிக்கு ஆபீஸ் வர ஆரம்பித்தாள் அவள். ஒரு நாள் கூட லீவு எடுக்கவில்லை. வேலையில் அவ்வளோ அக்கறை என்று நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு கூடிய சீக்கிரமே அது அவன் மேல் உள்ள அக்கறை என்று புரியத் தொடங்கியது.

வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள்  ஓடிவிட்டன. அன்று ஏதோ ஒரு நம்பிக்கையில் "ஏன் சார் ..நா எப்படியும் உங்களைவிட சின்னவளாத்தானே இருப்பேன், என்னை ஏன் மேடம்னு கூப்பிடறீங்க , என்னையும் நறு மாதிரியே  வாம்மா போம்மான்னு கூப்பிடுங்களேன் " என்றாள்.

"ஏன் இப்போ நா மேடம்னு கூப்பிட்டா உங்களுக்கு  என்ன பிரச்சனை ?"  என்றவன் அவள் பேசாமல் நிற்கவும்   " ஓகே வர்ற ரக்ஷா பந்தனுக்கு, நீங்களும்  நறுமுகை மாதிரியே என் கையில் ராக்கி கட்டி அண்ணான்னு கூப்பிடுங்க  , நான்  என்னம்மான்னு கேக்கிறேன் ஓகேவா?" என்றான் . அவள்முகம் போன போக்கை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் அவனும் நறுமுகையும்  . ஓடியே வந்துவிட்டாள் அவள்.

அது ஒரு கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பனி என்பதால் சைட் விசிட் அடிக்கடி இருக்கும். ஒரு வாரமாகவே சைட் விசிட் போய் வந்ததால் அன்று காலை தலை தூக்க முடியாத காய்ச்சல் அவளுக்கு. என்றாலும் அவளுக்கு அன்று விடுப்பு எடுக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அவனைப் பாராமல் ஒரு நாள்கூட அவளால் இருக்க முடியாதே. எனவே கஷ்டப்பட்டு வேலைக்கு கிளம்பியவள் ஆபீசை அடைந்ததும்  தன் சீட்டிலேயே டெஸ்கில் தலை வைத்து படுத்துவிட்டாள். உள்ளே நுழைந்த அவனுக்கு அவளது செய்கை வித்தியாசமாக இருந்தது. முதல் நாள் ஏதோ ஒரு பார்ட்டிக்கு போவது பற்றி அவள் போனில் யாருடனோ பேசியது ஞாபகம் வந்தது. ‘ஓ அதனால் தான் இவ்வளோ அசதியா’ என்று எரிச்சலுடன் எண்ணியபடி தனது  பி ஏ வை அழைத்து  " நறுமுகை , இது என்ன ஆபீஸா இல்லை வீடா ...தூங்கணும்னா வீட்டுக்குப் போய் அந்த மேடத்தை தூங்க சொல்லு. யாராவது பாத்தா என்னை தப்பா நினைப்பாங்க" என்றபடி  அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

ஆனால் சற்று நேரத்தில் நறுமுகை வந்து "சார், அவுங்களுக்கு காய்ச்சல் அதிகமா இருக்கு. இந்த மாதிரி உடல்நிலையில் ஏன் ஆபீஸ் வந்தாங்கன்னு தெரியலை. " என்றாள்.

அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இந்த உடல்நிலையில் அவள் ஏன் வந்தாள் என்று அவனால் உணர  முடிந்தது. அவன் வகையில் அவளது மனநிலை அவனும் அறிந்துதான் இருந்தான். அதனாலேயே  அவன் அவளிடம் நல்லவிதமாக முகம் கொடுத்து பேசுவதே இல்லை. இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் இப்படி ஜுரத்திலும் கூட பிடிவாதமாக வந்து படுத்திருக்கிறாளே ,ஏன் இவள் என்னை இப்படி சங்கடப் படுத்துகிறாள் ' என்று எண்ணியபடி "நறு நீ கொஞ்சம் சீக்கிரமே பக்கத்தில் இருக்கும் நம்ம டாக்டரை கூட்டி வாம்மா.." என்றான்.  

நறுமுகை சென்ற பின் மெல்ல அவள் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தான் .  இதுவரை அவளை பேர் சொல்லி அழைக்காதவன் மெதுவாக "வர்ஷிதா ...என்னாச்சு , ஏன் உடம்புக்கு என்ன " என்றான் மென் குரலில்.

அவளிடம் அசைவு தெரிந்தது. "ம்...ம்ம்..” என்று முனகியவளால் மேற்கொண்டு பேச இயலவில்லை.

மெதுவாக அவளது தலையை வருடுவதற்காக  நீண்ட கைகளை சிரமத்துடன் கட்டுப் படுத்திக்க கொண்டான் ,' வேணாம் ..இது தப்பு. வீணாக ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்க்கக் கூடாது'. அதனால்தானே அவன் இத்தனை நாட்கள் அவளை நிமிர்த்து கூட பார்க்கவில்லை. அவன் நிமிர்ந்து பார்த்தாலும் பாராவிட்டாலும் அவள் மனதில் நேசம் ஆலமரமாய் வேரோடிவிட்டது அவனுக்கு  புரிந்தது. அவன் மீது கொண்ட ஆசையால் இந்த மூன்றே மாதங்களில் அழகாக தமிழ் பேச கற்றுக் கொண்டாளே.

அவனுக்கும் பாதிப்பு இல்லை என்று அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. சிறு குழந்தை போன்ற அவளது வெகுளித்தனம் , அவன் என்னதான் முகம் திருப்பினாலும் அவனையே சுற்றி சுற்றி வரும் தன்மை, இதையெல்லாம் விட, காசில்லாத  குழந்தை ஐஸ்க்ரீம் கடையை பார்ப்பது போல் அவனைப் பார்க்கும் பார்வை, இதெல்லாம் அவனையும் அடிமை கொண்டுவிடும் போல தான்  அவனுக்கு தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.