(Reading time: 20 - 40 minutes)

"ஓ..நீங்களா ..மேடம், ஆமாம், என் கல்யாண விஷயமா என் மாமா பொண்ணு சரிதாவைப் போய் பாக்கப்போறோம்..நீங்க இங்கே எல்லாத்தையும் பாத்துக்கோங்க...ஏதாவது டவுட்டுன்னா கால் பண்ணுங்க..நா சிவநேசன் சார் கிட்டே சொல்றேன் " என்றான்

" சா…சார் .. என்ன சார் திடீர்ன்னு ? “அவளுக்கு வார்த்தைகள் திக்கியது

“என்ன திடீர்ன்னு...ஓ என் கல்யாண விஷயத்தை சொல்றீங்களா? அது எல்லோருக்கும் தெரியுமே, நீங்க புதுசுன்னறதால உங்களுக்கு தெரியலை போல” என்றான் அலட்சியமாக.

“எனக்குத் தெரியாதுதான்”  என்றவள் “நீங்க நிஜமாவே நீங்க உங்க மாமா பொண்ணை விரும்பறீங்களா..." என்றாள் தயக்கத்துடன்.  

கண்களில் நீர் முட்டி நின்ற அவளின் கோலம் அவனை கொன்றது.அவன்தான் என்ன செய்வது , இன்னும் எத்தனை நாள்தான்  அவள் மனதில் ஆசையை வளர்ப்பது?

மனதை கல்லாக்கிக் கொண்டு " ஆமாம் , நான் எனக்கு இஷ்டமில்லாத பெண்ணை ஒருபோதும் மணக்க மாட்டேன் " என்றான் அவன்.

அவளால் நம்பவே முடியவில்லை. அழுது கொண்டே வெளியே ஓடியவள் அதன் பிறகு ஆபீசுக்கே வரவில்லை.

ஒரு வாரத்தில்  நறுமுகை அவனிடம் வந்து ,"முகிலண்ணா, நம்ம வர்ஷிதா வேலையை ரிசைன் பண்ணிட்டு சொந்த ஊருக்கு போகப்போறாளாம் ,தெரியுமா?" என்றாள்.

ஒரு நிமிடம் திகைத்துப் போனான் அவன். அவள் இப்படி   செய்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும் , அவனே சொந்தமில்லை என்று ஆனபின் அவனை இன்னொருத்தியுடைய உடமையாக பார்த்துக்கொண்டு இங்கேயே பணிபுரிவதை அவளது  பூமனம் நிச்சயமாக தாங்காது.

அவன் திகைத்து நிற்பதை பார்த்துவிட்டு” உங்களுக்கு ஏதாவது காரணம் தெரியுமா?" என்றாள்.

"தெரியாம   என்ன , நா  சரிதாவை  விரும்பறதா  அவகிட்டே  சொன்னேன் . அதை அவளால ஏத்துக்க முடியலை போல " என்றான்.

" ஏண்ணா பொய் சொன்னீங்க? நீங்க சரிதாவை பெரியவங்க சொன்னதாலதானே மணக்கப் போறதா சொன்னீங்க? "

"ஆமாம் ஆனா நா அதை சொன்னா வர்ஷா என்னை மறக்க மாட்டா.. என்னால எங்கம்மா பேச்சை மீறி வர்ஷாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது ,எனக்கு வேற வழி தெரியலை." என்றான் விரக்தியுடன்

அதன் பிறகு நறுமுகையும் ஒன்றும் பேசவில்லை. பத்து நாட்கள் லீவில் அவள் சொந்த ஊருக்கு போவதாகக் கூறி சென்றுவிட்டாள்

இன்றோடு ஆபீஸ் கொடுத்த கெடு முடிந்து அவனது வர்ஷா கிளம்புகிறாள். அவனிடம் சொல்லிவிட்டுப் போவாளா என்று தெரியவில்லை. சொல்லாமல் போய் விட்டால் நன்றாக இருக்கும்.

பைக்கை ஆபீசில் நிறுத்திவிட்டு இறங்கினான் முகிலன். 

போகும் வராந்தா நெடுக அவனது விழிகள் அவளைத் தேடின. ஆனால் அவளை காணவில்லை.சரிதான் நாம் நினைத்தது இந்த வகையில் பலித்துவிட்டது போல. நம்மிடம் சொல்லாமலேயே அவள் போய்விட்டாளோ?. சற்றே ஏமாற்றத்துடன் கதவைத் திறந்தவன் திகைத்தான். அங்கே அவன் அமரும் நாற்காலியருகில் மண்டியிட்டு அமர்ந்து நாற்காலில் முகம் புதைத்து விம்மிக் கொண்டிருந்தாள் அவள். சட்டென வெளியே வந்துவிட்ட அவன் விரல்களால் கதவை மெல்ல தட்டினான்.

அவள் வந்து கதவைத் திறக்க சற்று நேரம் ஆனது. அவனைக் கண்டதும் முகம் தாமரையாக மலர "சார் ..எங்கே நீங்க இன்னிக்கி லீவு போட்டுடுவீங்களோன்னு பயந்துட்டேன். நா இன்னியோட ஆபீஸ் வரமாட்டேன். தெரிஞ்சோ தெரியாமையோ உங்களை நா ரொம்ப தொல்லை பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி..இன்னையோட உங்களுக்கு அந்த தொல்லை முடியப்போகுது. அதனால இன்னிக்கி ஒரு நாள் மட்டும் நீங்க எனக்கே எனக்காக ஸ்பென்ட் பண்ண முடியுமா? சும்மா என் கூட பேசிக்கிட்டு இருந்தா போதும்  " என்றாள் கெஞ்சல் பார்வையுடன்.

‘வாழ்க்கை முழுதும் உன்னோடு ஸ்பென்ட் பண்ணத்தான் எனக்கும் ஆசை .ஆனால் அதுக்கெல்லாம் கொடுத்துவைத்திருக்க வேண்டாமா’  மனம் தாங்கமுடியாத பாரத்தில் தவிக்க ஒன்றுமே பேசாமல் திரும்பி நின்று ஜன்னலைப் பார்த்தான் அவன்.

அவனது மவுனத்தை தப்பாக புரிந்து கொண்ட அவள் "இட்ஸ் ஓகே சார்..நா எப்பவுமே அதிர்ஷ்டக்கட்டை . நா ஆசைப்பட்ட எதுவுமே எனக்கு கிடைக்காது. அதனால எனக்கு பெருசா ஏதும் வருத்தமில்லை. ஆனா… ஆனா உங்களை பாக்காமதான் எப்படி இருக்கப்போறேன்னு தெரியலை. அதைவிட செத்துப் போகலாம் போல இருக்கு "என்றவள் விசித்து அழ ஆரம்பித்தாள்.  

அவளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்த நேரம்...

"அதுக்கு அவசியமே இல்லை வர்ஷா.. இனிமே எப்பவுமே நீ முகிலனை விட்டு பிரியாம வாழப்போறே..." என்றது ஒரு குரல் . ஆம் அது சரிதாவின் குரல்தான். பின்னோடே நறுமுகை.

அறைக்குள் திடீரென வந்த இருவரையும் புரியாமல் பார்த்தாள் வர்ஷிதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.