(Reading time: 20 - 40 minutes)

நறுமுகை பத்து நிமிடங்களில் ஒரு டாக்டருடன் வந்துவிட அவளை பரிசோதித்த டாக்டர் "பயப்பட ஒண்ணுமில்லை மிஸ்டர் முகிலன், வேலைல ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணதால வந்த காய்ச்சல்தான். ஒரு நாலு நாள் ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாயிடும்" என்றபடி ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதத் தொடங்கினார் .

"டாக்டர் சார் எனக்கு  ரெஸ்ட் வேணாம். நாளைக்கே சரியாகரா மாதிரி மாத்திரை கொடுங்க, ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு " என்றாள் பலவீனமான குரலில்.

அப்போது உள்ளே நுழைந்த அவனது பாஸ்  சிவநேசன் "உங்க ட்ரைனிங் சூப்பர் முகிலன். லீவு போட அலையுறவங்களை பார்த்திருக்கேன். இவுங்க ஆபீஸ் வர ஆசைப்படறாங்களே?” என்று ஆச்சரிய பட்டார்.  டாக்டர் விடை பெற்று சென்றபின் ஆபீஸ் காரில் அவளை ட்ராப் பண்ண  சொல்லி நறுமுகையை அனுப்பினான் அவன்.  

அவள் அவனையே ஏக்கத்துடன் பார்ப்பதை பார்த்து "ஒன்னும் பயப்பட வேணாம் வர்ஷா , ரெண்டு நாளில் உனக்கு சரியாயிடும். எனக்கும் ரெண்டுநாள் மும்பையில் ஒரு ட்ரைனிங் இருக்கு. அதனால வேலை அஃபெக்ட் ஆயிடும்னு பயப்படாம ரெஸ்ட் எடு. டேக் கேர் " என்று அவளை அனுப்பிவைத்தான். அவன் இரண்டு நாள் ஆபீஸ் வரமாட்டான் என்பதை அறிந்த பிறகுதான் அவள் முகம் தெளிந்தது. 

அவள் சென்ற பிறகுதான் அவளை ஒருமையில் அழைத்தது அவனுக்கு உறைத்தது. என்ன மாதிரி பெண் இவள். என்னையே என் வழியிலிருந்து மாற்றிவிடுவாள் போலிருக்கிறதே? என்று எண்ணியவன் இதை இப்படியே வளரவிடக் கூடாது என்று முடிவு செய்தான்.

எம் டி சிவநேசன் இருந்த அறைக்கு சென்றான், அவரிடம் பலவிதமாக பேசி வர்ஷிதாவை வேறு பிரிவுக்கு மாற்றச் செய்தான். வேறு பிரிவு என்றால் அது இரண்டு தெரு தள்ளி இருந்தது. எப்படியும் இனி அடிக்கடி சந்திக்க முடியாது,. இனி எல்லாம் மறந்துவிடும் என்று எண்ணியபடி நிஜமாகவே மும்பை கிளம்பி சென்றான் அவன். ஆனால் எதற்காக இதெல்லாம் செய்தானோ அதுதான் நடக்கவில்லை. பத்துநாட்களுக்குப் பின் திரும்பி வந்தவன் அவள் தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை ஒரு அதிர்ச்சியுடன் பார்த்தான்.

அவனை கவனித்த அவள் அவன் பின்னாலேயே ஓடிசென்று  "சார்...நீங்க என்னை வேற செக்ஷனுக்கு மாத்தச் சொன்னதா சிவநேசன் சார் சொன்னாரு ... உங்க கிட்டே கன்பார்ம் பண்ணாம நான் வேற செக்ஷனுக்கு போகமாட்டேன்னு சொல்லிட்டேன் , ஏன் சார் ..நா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா..." என்றாள் அப்பாவியாய்.

‘நீ எந்த தப்பும் பண்ணவில்லை ...தப்பு பண்ணியது நான்தான். வேறு ஒருத்திக்கு நிச்சயிக்கப்பட்ட நான் உன்னிடம் மனதை பறிகொடுத்தது தவறுதானே ...அதை சொன்னால் நீ எப்படி தாங்கப்  போகிறாய்.. அதனால்தான்  உன்னை இப்போதே பிரிவது என்று முடிவுசெய்துவிட்டேன் ’ என்று நினைத்தபடி  பேசாமல் நின்றான் அவன்

அவன் அசையாமல் நிற்பதை பார்த்து "என்ன சார் நிஜமாவே நா எதாவது தப்பா பண்ணிட்டேனா? என்றாள் அவள் பதற்றத்துடன்.

" அப்படி எதுவும் இல்லை மேடம், நாலு செக்ஷனிலும் வேலை செய்தால் தான் உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் ..அதனாலதான் சொன்னேன்" என்றான் . 

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அவள் சென்றபின், கண்களை மூடி சேரில் சாய்ந்தான் அவன்

அதை கவனித்த நறுமுகை, “சார் நீங்க ஏன் வர்ஷாவை வேறு செக்சனுக்கு மாத்தினீங்க ? அவுங்க இல்லாமல்  ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றாள்.

“உனக்கு மட்டுமா ..எனக்கும் கஷ்டமாதான் இருக்கும்” என்று இயல்பாக சொல்லிவிட்டு அவளின் வியந்த பார்வையில் தலை குனிந்தான் அவன்.   

"நீங்க என்னசார் சொல்றீங்க? வர்ஷாவோட மனசு எனக்கு தெரியும். நீங்களும் அவளை விரும்பறதுன்னா அவகிட்டேயே சொல்லி இருக்கலாமே அவ ரொம்ப சந்தோஷப்படுவா " என்றாள் நறுமுகை.

"நறு..உன்னை என் தங்கச்சியா நெனைச்சுதான் இதை சொல்றேன். எனக்கு சின்ன வயசிலேயே என் மாமா பொண்ணோட கல்யாணம்  பிக்ஸ் ஆயிடுச்சி. இப்போ அவ பெங்களூர்ல படிச்சுக்கிட்டு இருக்கா. படிப்பு முடிஞ்சதும் முறைப்படி கல்யாணம். நா அவளை விரும்பறானோ இல்லையோ அதை பத்தி கவலை இல்லை. வீட்டுல அம்மா  எடுத்த முடிவு இது. இதை நா எப்படி மீறுவது? அதனாலதான் நா வர்ஷா கிட்டேர்ந்து விலகியே இருக்கேன். கொஞ்ச நாள்  என்னை பாக்காம இருந்தா அவ கொஞ்சம் கொஞ்சமா என்னை மறந்துடுவா. அப்புறம் எல்லாம் சரியாயிடும் "என்றான் அவன்.

ஆனால் பிரிந்திருந்தால் மறந்துவிடுவாள் என்று நினைத்ததற்கு மாறாக பிரிவே நேராதபடி ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அவனுடன்தான் முழுநேரமும் இருந்தாள் அவள். அவன் திட்டியும் பார்த்துவிட்டான், அவள் அசைவதாக இல்லை. எனவேதான் அவன் தன்னைப் பற்றி அவளிடம் சொல்லவேண்டியதாயிற்று.

அன்று காலை அவள் வந்ததை கவனித்துவிட்டு அவள் காதில் விழும்படி "நறுமுகை நெஸ்ட் வீக் பூரா நா வரமாட்டேன் , என் கல்யாண விஷயமா சரிதாவைப் பாக்க பெங்களூர் போறேன் ...என்னோட மெயில் படிச்சு நீயே பதில் அனுப்பிடு" என்றான். நறுமுகை அங்கே இல்லை என்று அவனுக்கு தெரியும்.  

சற்று நேரம் வர்ஷாவிடம் அசைவே இல்லை. அவன் சொன்னதை ஜீரணிக்க அவ்வளவு நேரம் தேவைப்பட்டது போலும் 

மெல்ல சுதாரித்துக்கொண்டு   "சார் நீங்க ஒரு வாரம் வரமாட்டீங்களா? " என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.