(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - பிரிவினை – அதுரா

pirivinai

"தாத்தா ! தாத்தா ! நம்மவங்க யாருக்கும் இனிமேல் மருத்துவ சேவை கிடையாதுன்னு அறிவிப்பு வந்திருக்கு.. இந்த செய்தியைப் பாருங்க" என்றவாறு அறையின் கீழ் அடுக்கில் படுத்திருந்த தன் தாத்தாவை எட்டிப்பார்த்தான் குமார்.

"எதிர்பார்த்தது தான்" என்று சலிப்பாக கீழிருந்து பதில் வந்தது. "நம்ம ஆளுங்கள முழுசா ஒளிச்சு கட்டுறவரைக்கும் ஓய மாட்டானுங்க.." என்றார் தாத்தா. 

"யாருக்காச்சும்  உடம்புக்கு முடியலைன்னா என்ன செய்வது தாத்தா?" என்றபடியே காலியாக இருந்த இடைப்பட்ட அடுக்கை கடந்து கீழே இறங்கி தன் தாத்தாவின் அருகில் வந்தான்.

"நாம தகுதி இல்லாதவங்கன்னு முடிவு பண்ணிட்டு தான் ஒன்னு ஒன்னா பன்றாங்க!" என்று பெருமூச்சு விட்டவாறு தொடர்ந்தார்.."

"நீ பிறக்குறதுக்கு இரண்டு வருஷம் முன்னால, நம்ம ஆளுங்க யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதுன்னு அறிவிச்சாங்க.. (பெருமூச்சு..) மீறி உன்ன பெத்துக்கிட்டதுனால தான் உன் அம்மாவையும் அப்பாவையும்.." அதற்கு மேல் அவருக்கு வார்த்தை  வரவில்லை. கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீர் அவரது வார்த்தைகளை கரைத்துவிட்டது. அறையின் காலியாக இருந்த பகுதியை நோக்கி இருவரது பார்வையும் சென்றது.

சற்று நேர அமைதி..

"நீ தான் நம் மக்களின் கடைசித் தலைமுறையாக இருப்பாய். உனக்கு இன்னும் என்ன என்ன கஷ்டம் கொடுக்க போறாங்களோன்னு நினைக்குறப்போ… என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியல குமாரு.." என்றவர் அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

மேலும் அமைதி..

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஆரம்பத்தில் இருந்தே நம்மை இப்படித்தான் நடத்துறாங்களா தாத்தா?" என்று வினவினான் குமார்.

தாத்தா புருவத்தை சுருக்கி சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு பேசலானார் "இல்லப்பா! முதலில் எதிர் காலம் நாமதான்னு தலையில தூக்கிவச்சு கொண்டாடினாங்க". குமார் அமைதியாக இருக்கவே மேலும் தொடர்ந்தார் "மனிதர்களால தங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வு இல்லாம இருக்க முடியாது. ஒரு பிரிவினை போச்சுன்னா, இவங்களே இன்னொன்ன உருவாக்கிடுவாங்க."

"நாம் என்ன பாவம் பண்ணினோம் தாத்தா.. நமக்கு சரியாக நிற்க கூட இடமில்லாத மிகச்சிறிய மூன்றடுக்கு அறை, மத்தவங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தனி அறை.. அவங்களுக்கு கஷ்டமே இல்லாம இரவில் வேலை, நமக்கு தாங்க  முடியாத பகல் வெயிலில்.. இப்போ மருத்துவமும் கிடையாதுன்னா.. இது ஓரவஞ்சனை.. நம் மக்கள் என்ன தான் செய்ய முடியும். "  என்று ஆவேசமாக பேசி முடித்தான் குமார்.

"எதுவும் செய்ய முடியாது குமாரு. நம் ஜீ.வி 4.1 இன மக்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாளைக்கு 40 மி.லி தண்ணீர் தேவை. மத்தவங்களுக்கு இதைவிட குறைவாகவே தேவை என்பதால் அவங்க தான் எதிர்காலத்துக்கு ஏத்தவங்கன்னு நினைக்கிறாங்க. மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய் பல நாள் ஆயிடுச்சு." என்று கூறிக்கொண்டே எழுந்தார்.

தான் எதிர்நோக்கி இருக்கும் இருண்ட எதிர்காலத்தை எண்ணி திகைத்து நின்றான் குமார். நாமும்தான்!

பின்குறிப்பு : ஜீ.வி - Genetic version

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.