(Reading time: 15 - 30 minutes)

 “ஓகே, ஆனால் அக்கா வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி டெக்ஸ்டைல் ஷோரூம் போயிட்டு போகலாம்...”

“வேண்டாம்... இன்னைக்கு ரொம்ப கூட்டமா இருக்கும்...”

அவளின் பதிலை கவனிக்காதவன் போல காரை ஸ்டார்ட் செய்தவன், கூட்ட நெரிசலில் நீந்தி ஜவுளிக் கடையின் அருகே நிறுத்தினான்...

எனக்கு இப்போ சாரீ வேண்டாம் என்ற அவளின் மறுப்பை சட்டை செய்யாமல் கூட்டத்தில் தேடி அவளுக்கு பிடித்த இளம் சிவப்பு சேலையுடன் அவள் முன் வந்து நின்றான்...

“உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் ஷான்ஸ்... உனக்கு பிடிச்ச கலரும் கூட...”

அவன் நீட்டிய சேலையை பார்த்து ‘வாவ்’ என்று வியக்காமல் இருக்க அவளால் முடியவில்லை. அவளுக்கு பிடித்த நிறம் என்பது மட்டுமல்லாமல் அதன் டிசைனும் ரொம்பவே அழகாக இருந்தது...

ஆனாலும் ‘கெத்தாக’ ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள் அவள்.

“பிடிச்சிருக்கா, பிடிக்கலையா?”

“உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு தானே எடுத்துட்டு வந்தீங்க... அப்புறம் என்ன கேள்வி... வாங்க போகலாம்...”

நான்கு வருட திருமண வாழ்வில், அவளின் இந்த பதிலுக்கு அர்த்தம் ‘எனக்கு பிடித்திருக்கிறது’ என்பதை உணர்ந்தவனாக பில் போடும் இடம் நோக்கி சென்றான் அரவிந்த்...

“அப்படியே இதுக்கும் பில் போடுங்க...”

அவன் சேலை தேர்வு செய்ய சென்றிருந்த நேரத்தில் அவள் அவனுக்காக எடுத்திருந்த மூன்று டீ-ஷர்ட்டுகளை அவன் பக்கமாக நீட்டினாள்.

எந்த கேள்வியும் கேட்காமல் அதை கையில் வாங்கிக் கொண்டு நடந்தான் அவன்...

“சார்... அரவிந்த் சார்...” என்ற அழைப்பு இருவரையுமே நின்று திரும்பி பார்க்க வைத்தது.

அங்கே ஒரு இளைஞன் மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தான்.

“சார், தீபாவளி பர்சேஸா சார்... நானும் இன்னைக்கு தான் சார் வந்தேன்... இவங்க என் அம்மா... இது என் மனைவி...”

அவன் சுட்டிக் காட்டிய பக்கம் இருந்த பெண்களை பார்த்து அரவிந்த், சாந்தி இருவருமே மரியாதை புன்னகை ஒன்றை கொடுத்தார்கள்.

“அம்மா, இவர் தான் என் முதலாளி... அது அவர் மனைவி... சார் கொடுத்த தீபாவளி போனஸில தான் நாம இன்னைக்கு இந்த ட்ரெஸ் எல்லாம் வாங்கினோம்... இது என்னோட சம்பளத்தில நாங்க கொண்டாடுற முதல் தீபாவளி சார்...”

அவன் பேச்சில் இருந்த பெருமை அனைவருக்குமே புரிந்தது.

“நீ இன்னும் நல்லா முன்னுக்கு வருவ சேது... அதுக்கு அப்புறம் தீபாவளின்னு மட்டும் இல்ல, இன்னும் நிறைய செய்யலாம்...! இப்போ சந்தோஷமா தீபாவளி கொண்டாடு...” என்றான் அரவிந்த்.

“எப்போவும் வர சம்பளம் வீட்டு செலவுக்கு, அது இதுன்னு போயிடும் சார்... நீங்க கொடுத்த போனஸ் எனக்கு ரொம்ப பெருசு... நன்றி சார்...”

“நன்றி எல்லாம் எதுக்கு... இதெல்லாம் ஒன்னுமில்லப்பா... மத்தபடியும் நான் செஞ்சது கம்மி... இந்த ஐடியாவை எனக்கு கொடுத்ததே என் மனைவி தான்...”

சாந்தி புரியாமல் கணவனை பார்த்து விழிக்க, அவன் புன்னகைத்தான்...

சரி, பிறகு கேட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்து அமைதியாக இருந்தாள்.

சேதுவும் அவனின் குடும்பமும் மீண்டும் இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு செல்ல, அரவிந்தும் சாந்தியும் வாங்கி இருந்த உடைகளுக்கு பணம் செலுத்தி வாங்கி வந்தார்கள்.

னந்தி வீட்டை நோக்கிய பயணம் அமைதியாகவே தொடங்கியது.

ஒரு சில நிமிடங்கள் அப்படியே செல்ல,

“ஷான்ஸ்...” என மனைவியை அழைத்தான் அரவிந்த்.

அவள் காது கேட்காதவளை போல எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“இதெல்லாம் அநியாயம்!!! நான் சொன்ன ஒரே ஒரு ‘ஷட்-அப்’க்கு நீ இவ்வளவு நேரம் பேசாம இருந்தா நீ இன்னைக்கு ஈவ்னிங் சொன்ன இரண்டு ஷட்-அப்க்கு நான் எவ்வளவு நாள் பேசாம இருக்கனும்...”

“இரண்டு தடவை எல்லாம் இல்ல, ஒரே ஒரு தடவை தான் சொன்னேன்...”

“ஷட் அப்ன்னு ஒரு தடவை சொன்ன, வாயை மூடுங்கன்னு ஒரு தடவை சொன்ன... இரண்டுக்கும் பாஷை மட்டும் தானே வித்தியாசம்...???”

“அப்படி பார்த்தா கூட, நான் என்ன உங்களை மாதிரி மூஞ்சில அடிக்குற மாதிரியா கத்தினேன்?”

“இல்ல தான்... சாரி டா... நீ தீபாவளி ப்ளான்ஸ் பத்தி பேசினப்போ தான் நம்ம கம்பெனில வேலை செய்றவங்களுக்கு போனஸ் கொடுக்கலாம்ன்னு தோணிச்சு... எல்லோருக்கிட்டேயும் போனஸ் தரோம்னு சொன்னப்புறம் திடீர்னு இரண்டு பெரிய செலவு... எப்படியாவது மேனேஜ் செய்திடலாம்னு பார்த்தா, ஒரு இன்வாய்ஸ்க்கு தீபாவளி லீவுக்கு அப்புறம் பணம் தரேன்னு சொல்லிட்டாங்க... அதான் கடைசி ஒரு வாரமா நானும் சங்கருமா ஏதேதோ அட்ஜஸ்ட்மேன்ட்ஸ் செய்து இன்னைக்கு போனஸ் கொடுத்தோம்... லாஸ்ட் மினிட்ல எப்படியோ சமாளிச்சிட்டோம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.