(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - உத்ரா - ரம்யா

coffeeWoman

ணி முன்று அரை ஆனதை சுவர் கடிகாரம் காட்டி கொண்டிருந்தது.சூடான தேனீர் கோப்பையுடன் உத்ரா ஜன்னல் அருகில் வந்து அம்ர்ந்தாள்.வீடு எங்கும் அமைதி.ஜன்னல் மழையை ரசித்த படி தேனீர் சுவைக்க தொடங்கினாள்.இந்த அமைதியும் தனிமையும் அவளுக்கு குறிஞ்சி மலர் போன்று தான்.குளிர்ந்த மழையில் சூடான தேனீர் அவள் தொண்டையை நனைத்ததும் நினைவு பறவை சிறகு விரிக்க தொடங்கியது.

வாழ்க்கையின் ஓட்டம் எத்தனை பெரியது.அந்த ஓட்டத்தில் தொலைத்து விட்ட சின்ன சின்ன சந்தோஷங்கள் எத்தனை.உட்கார நேரம் இல்லை.நேரம் இருந்தாலும் ஆயிரம் கவலையோடு கனத்த இதயம் மழை எப்படி ரசிக்கும்.வானம் விட்டு பூமி தொட விழுந்த துளியில் ஒன்றிரண்டு தப்பித்து அவள் முகம் நனைத்தது.இந்த மழை சாரல் தான் எத்தனை இனிமை.

சிறு வயதில் மழையில் நனைந்த நினைவுகள் எத்தனை வருடம் ஆனாலும் நெஞ்சு குழியில் தேங்கி நிற்கிறது.அன்று செல்லமாய் கோபித்து,அன்பாய் அணைத்து,முகம் துடைக்க அன்னை இருந்தாள்.அந்த அரவணைப்புக்கு இன்றும்,ஒரு தாய் ஆன பின்னும்,மனம் ஏங்குகிறது.

காலை எழுந்தது முதல் இரவு வரை பம்பரமாய் சுற்றி,பெருசுகள் பேச்சிற்கு முகம் கோணாமல்,சிறுசுகள் பேச்சிற்கு கோபம் கொள்ளாமல் வேலைகள் அணைத்தும் முடித்து,ஓயும் நேரத்தில் ஒன்றிரண்டு பாடல் கேட்டு கொண்டு பொழுதுகள் போகும்.

இயந்திரத்திற்கு ஒரு சில நாள் ஓய்வு வேண்டும்.இந்த மனித இயந்திரமும் அப்படி தான்.ஓய்வு எடுத்து தலை சாயும் போது ஒரு அன்னை மடி,தலை கோதும் அன்பு கரம் இவற்றிக்கு மனம் ஏங்குவது இயல்பு தானே.அது எத்தனை தூரம் சாத்தியம் என்பது தான் கேள்விக்குறி.கணவனுக்கும்,குழந்தைகளுக்கும் மடி ஒதுக்கிய பின் தான் எந்த மடியில் தலை சாய்க்க முடியும்.

அன்பான கணவன்,அழகான குழந்தைகள்,மதிப்பாக நடத்தும் மாமியார்,மாமனார்,ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைதாலும்,மனம் தாய் மடி தேடுகிறது.பொறுப்புக்கள் சுமக்கும் சுமைதாங்கி ஆன பின்,தன் சுமையை எங்கு ஏற்றி வைக்க முடியும்.எல்லாம் நிறைந்திருந்தும் ஏதோ ஒரு வெறுமை.சுயம் துலைந்ததாய் ஒரு உணர்வு.தொலைத்து விட்ட தன்னை தேடி திரிந்தாலும் முடியும் இடம் என்னவோ குடும்பம் தான்.முகவரி என்னவோ குடும்ப தலைவி தான்.இப்படியே எத்தனை வருடங்கள் உருண்டோடி விட்டன.

ஏக்க பெருமூச்சு வெளியேற,அவள் கண்கள் பனித்தன.

சுதந்திர பறவையாய் திரிந்த காலத்தில் கண்ட கனவுகள்,கொண்ட இலட்சியங்கள் எல்லாம் முகவரியின்றி முடிந்து போனதே.அந்த கனவுகளை மெய்ப்படுத்தவும்,இலட்சியங்களை எட்டி பிடிக்கவும் ஏதாவது செய்ய வேண்டுமே.தனக்கென்று ஒரு நேரம் ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும்.இனி தினமும் ஒரு சில மணி நேரம் இதற்க்கென்று ஒதுக்க வேண்டும்.’நான் யார்’ என்பதை மறுபடி தோண்டி எடுக்க வேண்டும்.தூங்கும் எண்ணத்தையும்.துரு பிடித்த பேனாவையும் தூசி தட்ட வேண்டும்.செயலில் இரங்க வேண்டும்.

எண்ண அலைகளின் ஓட்தத்தை வாசலில் ஒரு குரல் கலைத்தது.

“அம்மா அம்மா,இங்கே பார்”,பள்ளியில் பெற்ற பரிசுடன் துள்ளி ஓடி வந்தாள் மீரா.தேனீர் கோப்பையை கீழே வைத்து விட்டு கன்று தேடி ஓடும் ஒரு தாய் பசுவாய் ஓடினாள் உத்ரா.சில மணி நேரங்களில் அந்த வீட்டில் சத்தங்கள் சூழ்ந்தன.அவற்றுள் சுழல தொடங்கிகாள் அவள்.

தேனீர் கோப்பையோடு அவள் எண்ணங்களும் ,கனவுகளும்,இலட்சியங்களும் ஜன்னல் ஓரத்தில் மழை சாரலில் ஆறிக்கொண்டிருந்தன.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.