(Reading time: 15 - 30 minutes)

 பார்ட்டியில், அவள் ஒரு விஷயத்தை கவனித்தாள். அமெரிக்கர்கள் எல்லோரும் அளவோடு மது அருந்திவிட்டு, நேரத்தோடு வீடு திரும்பிவிடுவார்கள். பார்ட்டியிலும், நாகரிகமாக நடந்துகொள்வார்கள். 

 கொஞ்ச நேரம் சந்தோஷமாக சிரித்துப் பேசி மகிழ்வதற்காகவே வருவார்கள், பார்ட்டிக்கு! மது அருந்துவதற்காக வருவதில்லை!

 கோதை கவனித்தவரையில், இந்தியர்கள் பொதுவாக குடித்து கும்மாளம் போடவே பார்ட்டிக்கு வருகிறார்கள். அவர்களை சொல்லி குற்றம் இல்லை! பெற்றோர், சுற்றம், நண்பர்கள், எல்லோரையும் பிரிந்து அயல்நாட்டில் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. அதனால், ஒரு மாறுதலாக பார்ட்டியில் குடித்து தங்கள் துயரை மறக்கிறார்கள். அதற்காக, தங்களையே மறக்கவேண்டாம், அவர்களிடம் அதை யார் சொல்வது?

 அந்த வாரக் கடைசியில், ஞாயிறன்று, கோதை வழக்கம்போல, மீனாட்சி கோவிலுக்கு சென்றிருந்தபோது, அங்கே தற்செயலாக, தனது தூரத்து உறவினர், ரமேஷை சந்தித்தாள்.

 ரமேஷ் அங்கே பல ஆண்டுகளாக இருப்பவர். மனைவி, குழந்தைகளுடன் வசிப்பவர். அவருக்கு கோதை, நன்கு வீணை வாசிப்பாள் என்பது தெரியும். அவர்மூலமாக, பாரதி கலை மன்றத்தில், கோதையின் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடாகியது.

 அந்த நிகழ்ச்சியில், கோதை தன் ஆசைதீர, இரண்டு மணி நேரம் வீணை வாசித்தாள். எல்லோரும் அவளை பாராட்டினர். 

 அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த, மீனாட்சி கோவில் ட்ரஸ்டி ஒருவர், அவள் கோவில் திருவிழா ஒன்றில் வாசிக்கவும் ஏற்பாடு செய்தார்.

 மீனாட்சிக்கு அது ஒரு பெரிய வாழ்க்கை திருப்பமாக, தன் பல வருட ஆசைகள் நிறைவேறப் போவதாகவும் கற்பனையில் மிதந்தாள்!

 'மனிதன் நினைக்கிறான், இறைவன் கலைக்கிறான்' என்பதுபோல, கோதையின் வாழ்வில் சூறாவளியாகப் புகுந்தான், மாதவன்!

 மாதவன் சென்னையை சேரந்தவன், ஹ்யூஸ்டன் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனுடைய நாடக குழுவின்மூலம், பிரபலமானவன்! அவனை தெரியாதவர்களே கிடையாது, அங்கே! 

 கோதையின் வீணை நிகழ்ச்சி, பாரதி கலை மன்றத்தில் நடந்து முடிந்து, பாராட்டுக்கள் ஓய்ந்தபிறகு, கோதை வீணையுடன் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது, மாதவன் அவளுக்கு நிறைய உதவி செய்தான். வீணையின் உறையை போடுவதற்கு கை கொடுத்தான்.

 உதவி செய்துகொண்டே, " மேடம்! நீங்க வாசித்ததிலேயே, அந்த ராகமாலிகை, அதுதான் பாபநாசம் சிவன் பாடல் 'கற்பகவல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன்' பெஸ்ட்! அதிலும், முதல் சரணம் ஆனந்தபைரவியிலே முடிந்து, அடுத்த சரணம் கல்யாணியிலே வாசித்தபோது என்னையே மறந்துட்டேன், எல்லாத்துக்கும் டாப்பா, கடைசி சரணம் ரஞ்சனி ராகத்திலே வாசித்தது! மேடம்! உங்களுடைய வீணை வாசிப்பை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு............"

 " ரொம்ப சந்தோஷம்! மிகுந்த நன்றி! சினிமா பாட்டை ரசிக்கிற இந்தக் காலத்திலே, கர்நாடக இசையை, அதிலும் வீணை வாசிப்பை புரிஞ்சு ரசிக்கிற உங்களை பார்க்கிறபோது, பிரமிப்பாயிருக்கு!"

 " அப்படி சொல்லாதீங்க, மேடம்........"

 " கோதைன்னு பெயர் சொல்லியே கூப்பிடலாம்........"

 " தேங்க்ஸ், கோதை! இந்தியாவிலே பாரம்பரிய கலைகள், சங்கீதம், நாடகம், நசித்துப்போய் சினிமா மோகம் தலைவிரித்தாடலாம். ஆனா, வெளிநாட்டிலே வாழ்கிற இந்தியர்கள் இன்னமும் அவைகளை போற்றி பாதுகாக்கிறார்கள். குறிப்பா, இந்த ஊரிலே வாழ்கிற இருநூறு தமிழ் குடும்பங்கள், நூறு தெலுங்கு குடும்பங்கள், அதுபோல மலையாளிகள், கன்னடக்காரன்கள், ஏன் வட இந்தியர்கள்கூட ஒற்றுமையா கூடி, நிகழ்ச்சிகள் அப்பப்போ நடத்தி, இந்தியாவிலிருந்து கூட பிரபல கலைஞர்களை அழைத்து, ஏதோ எங்களால் முடிந்த அளவு நம்ம பாரம்பரிய கலைகளை மறக்காம இருக்க, முயற்சிக்கிறோம். இப்ப நீங்களும் வந்திருக்கீங்க, நாம் எல்லோருமா சேர்ந்து பாடுபடுவோம், சரியா?"

 " கட்டாயமா! உங்க பேரு?"

 " மாதவன்!"

 " ஆகா! ஶ்ரீமன் நாராயணன் பேரு! மீண்டும் சந்திப்போம்! நான் வரேன்!"

 " கோதை! நீங்க, தப்பா நினைக்கலேன்னா, இன்று நீங்க டின்னர் என்னோடத்தான்! உங்க திறமையை பாராட்டும் ஒரு சிறிய டோக்கனா, நீங்க ஏற்றுக்கணும்!"

 கோதை தயங்கினாள். அப்படி வேற்றுமனிதரோடு, தனியாக டின்னர் சாப்பிட இதுவரை அவள் சென்றதில்லை!

 " கோதை! நானும் உங்களோட உங்க வீட்டுக்கு வரேன்வீணையை வீட்டிலே வைச்சிட்டு, உங்க கூட வீட்டிலே இருக்கிறவங்களையும் அழைச்சிகிட்டு, டின்னருக்கு நல்ல ஓட்டலா பார்த்து போவோம்! உங்களுக்கு தெரியுமோ? இந்த ஊரிலே, சரவணபவன், அடையாறு ஆனந்தபவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கிராண்ட் ஸ்வீட்ஸ் எல்லாம் வந்தாச்சு! உங்களுக்கு எது பிடிக்கிறதோ, அங்கு போவோம்..........."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.