(Reading time: 15 - 30 minutes)

 ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேடையிலே ராணி! ஆனால், ஒவ்வொரு நாளும் அவளும் மாதவனும் ராஜா-ராணியாகவே வாழ்ந்தார்கள். அவர்களின் உறவு ஊரறிந்த ரகசியமாகிவிட்டது.

 மாதவன் அவளிடம் தனது திட்டத்தை நம்பும்படியாக விளக்கினான். 

 வருகிற டிசம்பர் மாத லீவில் இருவரும் சென்னை போய், தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து, அவர்கள் சம்மத்த்துடன், திருமணமும் புரிந்துகொண்டு, அமெரிக்கா திரும்புவதென ப்ளானைச் சொல்லி கோதையை நம்பவைத்தான்.

 பேதை! அவனை முழுவதும் நம்பி தன்னையே பறிகொடுத்தாள்.

 திடுமென ஒருநாள் மாதவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்தான்.

 " கோதை! எனக்கு லாட்டரியில மில்லியன் டாலர் பரிசு விழுந்திருக்கு! மில்லியன்னா, பத்து லட்சம், ஒரு டாலர் இன்றைய விலையிலே எழுபது ரூபாய்! ஏழு கோடி ரூபாய்!"

 " மாது! ரொம்ப சந்தோஷமாயிருக்கு! நம்ம கல்யாணத்துக்கு முன்பே, அதிர்ஷ்டம் வர ஆரம்பமாயிடுத்து............."

 " நோநோ, கோதை! நான் சொல்கிற லாட்டரி, டர்பி லாட்டரி இல்லே! இந்த லாட்டரி வானத்திலிருந்து பணமா கொட்டுகிற லாட்டரி! எனக்கு அந்த மில்லியன் டாலர் கிடைக்க, காரணமே நீதான்! உன்னை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன், ஐ லவ் யூ, கோதை!"

 " என்ன சொல்றே, மாது? புதிர் போடாதே! விவரமா சொல்லு!"

 " சொல்றேன்! சொல்லத்தானே ஓடிவந்திருக்கேன்! நீயும் நானும் நெருங்கிப் பழகறது, ஊரறிந்த விஷயம் இல்லையா? அதுவும், விரைவிலேயே, கல்யாணம் பண்ணிக்கப் போகிற செய்தியும் ஊரறிந்தது இல்லையா? இது இந்த ஊர் பிரபல ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஐம்பது வருஷமா இங்க இருக்கிறவர், மல்டிமில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதி, தமிழர் பெயர் லோகநாதனின் மகள் காதிலும் விழுந்திருக்கு. அவளுக்கு ரொம்பநாளா என்மீது ஒரு கண்ணாம், எனக்கு இத்தனை நாள் தெரியாமல் போயிடுத்து!..........."

 கோதை அதிர்ச்சியில் உறைந்து போனாள். 

 " கோதை! நாம கல்யாணம் பண்ணிக்கப்போற செய்தி அவளுக்கு தெரிந்தவுடனே, அவ அப்பாவிடம் தன் ஆசையை சொல்லியிருக்கா! டாக்டருக்கு அவ ஒன்லி டாட்டர்! 

 அவர் உடனே என்னை கூப்பிட்டார். அவர், ஏற்கெனவே என் நாடகங்களுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். என்னை அவருக்கு நல்லா தெரியும்!

 சுற்றி வளைத்து பேசாம, நேரிடையா கேட்டார், 'நீ கோதையை மறந்துடணும், அவளைத் தேடி அவ வீட்டுக்கு போவதை நிறுத்திடணும், மாறாக, என் மகளோடு நெருங்கிப் பழகணும், ஆறு மாதங்கள்! இந்த ஆறு மாதங்களிலே, அவளுக்கு உன்னையும் உனக்கு அவளையும் பிடித்துப் போய்விட்டால், ஏழாவது மாதம் நீ என் மாப்பிள்ளை! என் மல்டி மில்லியன் சொத்துக்களுக்கு நீதான் வாரிசு! இப்பவே பதில் சொல்லணும், எஸ் ஆர் நோ!'

 எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு, 'நோ' சொல்றதுக்கு! அவர் ஒரு பக்கா ஜெண்டில்மென்! உடனே என் பெயருக்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டார். இப்ப நான் இங்கே வந்ததுக்கு அவர் பர்மிஷன் கொடுத்திருக்கிறார், 'ஃபேர்வெல் சொல்லிட்டு வா'ன்னு அனுப்பியிருக்கிறார்.

 கோதை! எனக்கு இவ்வளவு பணம் கிடைத்தது உனக்கு சந்தோஷம் இல்லையா? ஏன் சோகமாயிருக்கே?"

 " ராஸ்கல்! உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? பணம்தான் முக்கியமா? என்னோட பழகினதெல்லாம் பொய்யா?"

 " கோதை! பணத்துக்காகத்தானே, ஊரைவிட்டு, இல்லை, நாடுவிட்டு நாடு வந்திருக்கிறோம். இதிலே, வேஷம் போடுவானேன்? ஆமாம், எனக்கு உன்னைவிட பணம்தான் முக்கியம்! நாமென்ன ரோமியோ ஜூலியட் காதலா பண்ணினோம்? உன்னை கர்ப்பமாக்கினேனா, இல்லையே! 'லிவிங் டுகெதர்' இப்ப உலகத்திலே எல்லா நாடுகளிலும் சகஜம்! வேணுன்னா, உனக்கு ஒரு பத்தாயிரம் டாலர் தரேன். பை!"

 கோதை சிலையாக எத்தனை நேரம் அமர்ந்திருந்தாள் என அவளுக்கே தெரியாது!

 "கோதை!" என அவளைத் தொட்டு ஒருத்தி உலுக்கியபின்தான், சுயநினைவு பெற்றாள்.

 எதிரே, யாரோ ஒரு அந்நிய பெண்மணி, இதுவரை சந்திக்காதவள், நிற்பதைக்கண்டு எழுந்திருக்க முயன்றாள்.

 " கோதை! நீ இன்று இருக்கிறாயே, இந்த நிலைமைக்கு சில மாதங்கள் முன்பு தள்ளப்பட்டவள், நான், இதே அயோக்கியன் மாதவனால்! நான்தான், உனக்கு முன்பு, நாடகத்தில் ராணியாக நடித்தவள்! பெயர் பூர்ணிமா!"

 " நீங்க, நியூயார்க் போயிட்டதாக சொன்னானே........"

 " அவன் உடம்பு முழுவதும் சூது, பொய், பித்தலாட்டம், ஏமாற்றுவேலைதான்! சமயத்திற்கு தகுந்தாற்போல, எந்தப் பொய் வேண்டுமானாலும் சொல்வான்! அவன் ஒரு பொம்பளை பொறுக்கி! ஊரைவிட்டு ஊர் வந்திருக்குற நம்மைப்போல அப்பாவிப் பெண்கள்தான் அவன் டார்கெட்! சுலபமா ஏமாத்துவான். நம்மால் அவனை ஒண்ணும் செய்யமுடியாது. தாலியா கட்டியிருக்கான்? இந்த ஊரிலே ஆண்-பெண் உறவு பன்னிரண்டு வயதிலேயே துவங்கி, மாறி மாறி உறவு வைச்சுக்கிற கலாசாரம். நமக்குத்தான் புதுசு! தாங்கிக்கமுடியாம, குடிச்சு சீரழியறோம்.............."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.