(Reading time: 17 - 34 minutes)

 " ஆமாம், பெரிய அரண்மனை! இதை சுற்றி வேற காட்டணுமா? அதெல்லாம் என்னாலே முடியாது, வேணுன்னா, நீயும் அம்மாவுமா அதை செய்யுங்க! நான் தூங்கப்போறேன், ராத்திரி ஃபங்ஷன் இருக்குல்லே......."

 " லீலா! திருப்பி திருப்பி சொல்றியே, ராத்திரி ஃபங்ஷன்னு, அதென்னது?......."

 "ச்சீ, போடா! தெரியாதமாதிரி கேட்கறே? அதையும் என் அப்பா, அம்மாவிடமே கேட்டு தெரிஞ்சிக்கோ! நான் தூங்கப்போறேன்...."

 அவள் தன் அறைக்குச் சென்று கதவை தாளிட்டுக் கொண்டதும், மூவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

 " மாப்ளே! உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். அவ சொல்லுக்கு மறுசொல் பேசினா, கையிலே கிடைச்சதை எடுத்து எங்கமேலே வீசிடுவா, பயங்கரமான சைக்கோ! சரி, வாங்க, நம்ம ரூமுக்குப் போய் பேசுவோம்............"

 அவர்கள் மூவரும் சௌகரியமாக அமர்ந்ததும், லீலாவின் தந்தை பேசினார்.

 " மாப்ளே! எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி பத்து வருஷம் கழித்து விரதமிருந்து, கோவில்களுக்குப் படையெடுத்து, ஹோம பூஜையெல்லாம் பண்ணினபிறகு பிறந்த ஒத்தப்புள்ளை, லீலா!

 அதனாலே, அவ கேட்டதெல்லாம் செய்வோம், இஷ்டப்படறதை வாங்கித் தருவோம், படாடோபமா வளர்த்தோம். அவளும் ரொம்ப புத்திசாலி! பள்ளிக்கூடத்திலே எல்லா வகுப்பிலேயும் முதல் மார்க் வாங்கி, காலேஜ் சேர்ந்தாள்.

 அவள் ஆசைப்பட்டாளே என்பதற்காக, ஹாஸ்டலில் சேர்த்தோம். நாங்கள் வார இறுதி விடுமுறை நாட்களில்தான் சந்திப்போம், அதுவும்ஓரிரண்டு மணி நேரம்!

 அவள் படிப்பில் மிக்க ஆர்வமுள்ளவள், நன்றாகப் படித்து சாதனைகள் புரிவாள் என நம்பிக்கையுடன் இருந்தபோதுதான், பேரிடியாக அந்த செய்தி வந்தது!

 அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணிபுரிந்த ஒரு இளைஞன், எப்படியோ லீலாவை வசியம் செய்து தன் முழு ஆளுமையில் அடக்கி வைத்திருந்தான். அவன் சொன்னபடியெல்லாம் செய்து, கேட்டதெல்லாம் தந்து, இரவுபகல் பாராமல் அவனுடன் ஊர்சுற்றி தன் வாழ்வை முற்றிலும் பாழாக்கிக் கொண்டாள். 

 இந்த விஷயம் எங்களுக்கு தெரியும்போது, நிலைமை முற்றிவிட்டதால், வேறுவழியின்றி, அவன் காலில் விழுந்து லீலாவை மணந்துகொள்ளச் சொன்னோம். அந்த அயோக்கியன் பேசிய அந்த ஒரு சொல்லைக் கேட்டபிறகுதான் லீலா நிலை குலைந்து மனம் பேதலித்து சைக்கோவானாள்.

 " அப்படி என்ன சொன்னான்?"

 " 'உங்க பொண்ணு என்னைப்போல பல பேருடன் பழகினாள், நான் எப்படி அவளை மனைவியாக ஏற்கமுடியும்?' என்று வாய் கூசாமல் பொய் பேசி நழுவினான்.

 லீலா சூதுவாது தெரியாமல் வளர்ந்த பெண். எல்லோரையும் சுலபமாக நம்புவாள். அப்படித்தான் அந்த அயோக்கியனையும் நம்பி வெகுதூரம் தொலைந்துவிட்டாள்.

 அதனால் அந்த ஒரு சொல்லின் அதிர்ச்சியில், அவளுக்கு எல்லோர்மீதும் ஒரு கோபம், வெறுப்பு, எரிச்சல்! அதன் விளைவாகத்தான் அவள் இன்று இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள்.

 மாப்ளே! உங்களிடமிருந்து இந்த உண்மைகளை மறைத்து லீலாவை உங்கள் தலையில் கட்டியது, அயோக்கியத்தனம், நயவஞ்சகம், துரோகம்! எனக்கும் லீலாவை ஏமாற்றிய அந்த அயோக்கியனுக்கும் என்ன வித்தியாசம்?

 இந்த நிமிடமே நீங்க லீலாவை டைவோர்ஸ் செய்தால்கூட நான் அதிலுள்ள நியாயத்தை உரக்க ஊருக்கு சொல்வேன். 

 எங்கள் முகத்தில் காரித் துப்பினாலும், ஏற்றுக்கொள்வேன். ஏன்னா, நாங்கள் உங்கள் வாழ்க்கையையே ஏதோ ஒரு பலவீனமான நேரத்தில், எங்கள் மகள்மீதுள்ள பாசத்தில், பாழாக்கிவிட்டோம். எங்களுக்கு மன்னிப்பே கிடையாது........."

 " வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ்! இந்த பிதற்றலை நிறுத்துங்க! அப்பா! நீங்களென்ன கடவுள்னு நினைப்பா? நான் அதை செய்தேன், இதை செய்தேன்னு புலம்பறீங்களே, உங்களாலே கடவுள் சம்மதமில்லாம, ஒரு துரும்பைக்கூட அசைக்கமுடியாது! உங்களால் மட்டுமல்ல, எந்த மனிதனாலும், முடியாது. கடவுளை, கவிச் சக்கரவர்த்தி கம்பன், 'அலகிலா விளையாட்டுடையான்'னு பாடியிருக்கான்.

 வீட்டோடு வாழ்ந்த சின்னப் பெண்ணை ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஆசைப்பட வைத்தது, அந்த இளைஞனோட பழகவைத்தது, கடைசியில் அவன் அப்படியொரு அபாண்டமான பொய் சொன்னது, உங்கள் மகள் சைக்கோவானது, இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து அவளை என் மனைவியாக்கினது, சில மணி நேரத்திலேயே மனம் வெடித்து இப்போது நடந்ததை விவரமாக ஒப்புக்கொண்டது எல்லாமே ஆண்டவனின் விளையாட்டு! நீங்களோ, நானோ, அந்த இளைஞனோ, லீலாவோ யாருமே இதற்கு பொறுப்பில்லை! 

 நான் லீலாவை கவனிச்சுக்கிறேன். நீங்க அவளிடம் எதையும் உளறிடாதீங்க! என்னோடு சேர்ந்து நீங்களும் நடக்கப்போறதை வேடிக்கை பாருங்க! குறிப்பா எங்க குடும்பத்திலே யாருக்கும் இது தெரியவேண்டாம்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.