(Reading time: 17 - 34 minutes)

 " சரி, மாப்ளே! நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க! இந்த ரூமிலே படுத்துக்குங்க! இந்த ரூமிலேதான் லீலா எப்பவும் இருப்பா, சில நேரம்தான் அந்த ரூமுக்கு போவா!" என்று விளக்கியவாறு தாமுவை அந்த அறைக்குள் விட்டுவிட்டு அறைக் கதவை சாத்திக்கொண்டு வெளியேறினார்.

 அவர் சென்றதும், தாமு அந்த அறையை நோட்டம் விட்டான். லீலாவின் பாட புத்தகங்கள் நிறைய அடுக்கி அழகாக வைக்கப்பட்டிருந்தது. பார்க்க, கண்கொள்ளா காட்சியாக இருந்தது!

 பாவம்! இவ்வளவு நல்ல பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படவேண்டுமா என மனதிற்குள் வருந்தியவாறே, மேலும் நோட்டம் விட்டான். 

 இன்னொரு பக்கத்தில், எழுதும் நோட்டுப் புத்தகங்களும், டைரிகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அழகு நேர்த்தியாயிருந்தது!

 நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் பாட சம்பந்தமாக இருக்கவே, டைரிகளை எடுத்துப் பார்த்தான்!

 பிறருடைய டைரியை படிப்பது அநாகரிகம் என்று அறிவு எச்சரிக்கவே, மூடிவைத்துவிட்டு நகர்ந்தான். 'தொப்'பென ஒரு புகைப்படமும் ஒரு கடிதமும் கீழே விழுந்தன!

 புகைப்படத்தில் ஒரு இளைஞன்! இவன்தான் அந்த அவனோ

 கடிதம் கீழே விழுந்தபோது, மடிப்புகள் பிரிந்து, திறந்திருந்தது. இயற்கையாக பார்வை கடித்த்தில் விழுந்தது!

 'டியர் தாமு!' என்று கடிதம் துவங்கியிருந்தது!

 தாமுவுக்கு பேரதிர்ச்சி!

 லீலா தனக்கு கடிதம் எழுதிவைத்திருக்கிறாளா!

 நம்பவே முடியவில்லையே!

இந்த வீட்டில் யார் சைக்கோ? லீலாவா, மற்றவர்களா?

 சரி, கடித்த்தில் என்னதான் எழுதியிருக்கிறாள், என்ற ஆவலுடன் அதை கையில் எடுத்து, படித்தான்.

 " டியர் தாமு!

 டியர் என்பது பொதுவான மரியாதையை அன்பை குறிக்கும் சொல், என்ற பொருளில் உபயோகிக்கிறேன். இதிலே, பிரியமோ, காதலோ, கத்திரிக்காயோ எதுவுமில்லை என்பதை முதற்கண் தெளிவுபடுத்துகிறேன்........."

 திடீரென, சம்பந்தமேயில்லாமல், தாமுவுக்கு கடித்த்தின் தேதியை பார்க்கத் தோன்றியது! கடந்தமாதம் 15 ந்தேதி!

 ஓ! கல்யாணப் பேச்சு தொடங்கும்போதே எழுதியிருக்கிறாள்.

 " தாமு! இத்துடன் இருக்கும் புகைப்படத்தில் உள்ள இளைஞன் வசந்த் என்பவனை காதலித்து, அவனை முழுவதுமாக நம்பி, நான் அவனுடன் மிகவும் அதிகமாக நெருங்கிப் பழகி, என்னை பறிகொடுத்த நிலையில், அவன் என்னை நிராகரித்ததோடு, என் நடத்தைமீது களங்கமும் கற்பித்துவிட்டான்.

 எனக்கு அந்த பேரதிர்ச்சியிலிருந்து விடுபட, நெடுநாள்ஆயிற்று. 

 அதிர்ச்சியிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்று பெற்றோருக்கு தெரிந்துவிட்டால், அவர்கள் வேறு ஒருவனுக்கு என்னை மணமுடிக்க ஏற்பாடு செய்து விடுவார்களோ எனும் பயத்தில், அதை தடுக்கவே, இன்னமும் சைக்கோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறேன்.

 ஆனால், பெற்றோர் என் சோக்க்கதையை முற்றிலும் மறைத்து, என்னை உன் மனைவியாக்கப் பார்க்கிறார்கள்.

 நான் ஒருவனுடன் என் ஒழுக்கத்தை நெறியை கற்பை இழந்தபிறகு, அதை மறைத்து இன்னொருவனை ஏமாற்றி அவனுக்கு மனைவியாகி, பிறகு என்றோ ஒருநாள் அது அவனுக்கு தெரியவந்தால்........? அப்பப்பா! அவன் வாழ்வு நரகம்தான்!

 அதனால், என் பெற்றோருக்கு தெரியாமல் இதை எழுதுகிறேன்,எப்படியாவது இந்தக் கடிதம் உன் கையில் கிடைக்க வழி செய்கிறேன்.

 தாமு! தயவுசெய்து இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காதே! உன் வாழ்வு நரகமாகிவிடும். எதையாவது காரணம் காட்டி தப்பித்துவிடு!

 வேறொரு நல்ல, ஒழுக்கமான பெண்ணை மணந்து இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ எனது பிரார்த்தனைகள்!

லீலா"

 கடித்த்தை படித்து முடித்ததும் தாமுவுக்கு உடம்பெல்லாம்வியர்த்துக் கொட்டியது!

 இறைவா! இப்படி ஒரு நல்ல, மனசாட்சியின்படி வாழும் பெண்ணை, நயவஞ்சகமாக சீரழிக்க எப்படித்தான் அந்த கிராதகனுக்கு மனம் வந்ததோ! சுயநலத்துக்காக, பெற்ற தாய் தந்தையரையே விற்றுவிடுவார்களோ?

 இறைவா! நீ இவ்வளவு விரைவாக என் உதவிக்கு ஓடிவருவாய் என நான் நினைக்கவேயில்லை!

 பகவத் கீதையில், இறைவா!, நீ கூறியிருப்பதாக சொல்வார்கள்: 'என்னிடம் சரணாகதி அடைந்தவனை காப்பாற்ற ஓடோடி வருவேன்' என நீசொல்லியிருப்பதை நீ நிரூபித்துவிட்டாய்! ஆம், நான்மனப்பூர்வமாக நம்புகிறேன், 'அவன்ன்றி ஓரணுவும் அசையாது'! 

 ஆனால், வேறொரு முடிச்சு விழுந்துவிட்டதே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.