(Reading time: 17 - 34 minutes)

 ஆனால், தாமு! நீ ரொம்ப நல்லவன்! உன் வாழ்க்கை என்னால் சீரழியக்கூடாது. இப்போதே விடுதலை பத்திரம் கையெழுத்திட்டு தருகிறேன். நீ வேறு ஒரு ஒழுக்கமான பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு, சந்தோஷமாக வாழணும்!

 இல்லேன்னா, குற்ற உணர்ச்சியோடு, நான் தினமும் அணுஅணுவாகச் செத்து மடிவேன். ப்ளீஸ்! இங்கிருந்து உடனே ஒரு வக்கீலைப் போய் பார்த்து, விடுதலைப் பத்திரம் எழுதி எடுத்து வா! நான் அதில் கையொப்பம் செய்து தருகிறேன். உடனே போ!"

 தாமுவின் கையைப் பிடித்து தரதரவென இழுத்து அவனை அறைக்கு வெளியே விட்டு, "போ!" என விரட்டினாள்.

 இதை பார்த்துக்கொண்டே, லீலாவின் பெற்றோரும் காபியுடன் அங்கு வந்தனர்.

 " லீலா! என்ன செய்யறே? ஏன் அவரை விரட்டறே? உனக்கென்ன பித்துப் பிடித்துவிட்டதா?"

 " பித்தம் தெளிந்துவிட்டதப்பா! பாவம்! ஒரு அப்பாவியின் நீண்ட வாழ்க்கை நாசமாவதற்கு நாம் காரணமாக இருக்கக்கூடாதப்பா! கெட்டுப்போன என்னுடன் அவன் எப்படிப்பா வாழமுடியும்? வேண்டாம்ப்பா! நான் சாகிற வரையில், தன்னந்தனியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்........"

 லீலாவின் பெற்றோர், மகள் தெளிவாக, விவேகமாக, பேசுவது கேட்டு மலைத்து நின்றனர்!

 அதெப்படி சற்றுமுன் வரை, சைக்கோவாக இருந்தவள், திடுமென நார்மலாக பேசுகிறாள் எனப் புரியாமல் திகைத்தனர்.

 ஒருபுறம் அவள் குணமாகிவிட்டாள் என்று மகிழ்ச்சியாயிருந்தாலும், மறுபுறம் தாமுவை ஏன் விரட்டுகிறாள் என புரியாமல் விழித்தனர்!

 " இறைவா! இப்படிப்பட்ட தூய்மையான உள்ளங்களை எனக்குத் தந்த உன் கருணையை எப்படி புகழ்வேன்!

 லீலா! வாழ்க்கையிலே தவறு செய்யாதவர்களே இன்றல்ல, நேற்றல்ல, எந்தக் காலத்திலும் கிடையாது. ராமாயணத்திலே, கல்லாக கிடந்த அகலிகைக்கு சாப விமோசனம் தந்தார், ராமர்! ஏன்? அகலிகையை இந்திரன் ஏமாற்றிய உண்மை தெரிந்ததால்!

 அதுபோல, வசந்த்தை நம்பி நீ மோசம் போய்விட்டாய். அது உன் தவறு என்று சொல்வதைவிட, ஒரு விபத்தென்று சொல்லலாம்.

 ஆண்கள் பெண்களை இப்படி ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள், பெண்கள் வாழ்விழந்து செத்து மடிய வேண்டியதுதானா?

 இல்லை! இதற்கொரு முடிவு கட்டித்தீரணும்! ஆண் இனத்தில் ஒருவன் செய்த பிழைக்கு, அதே இனத்தில் இன்னொருவன் முன்வந்து பிராயச்சித்தம் செய்வதுதான் தர்மம்!

 என் மனதில், இதயத்தில், உள்ளத்தில், நிறைந்து தளும்பி வழிவது, உன் நல்ல மனம்! என் வாழ்வு, உன் எண்ணப்படி, சீரழியக்கூடாதென்று நீ எத்தனை முயற்சி செய்திருக்கிறாய் என்பதை நினைக்கும்போது, வசந்துடன் நீ பழகிய குப்பை காத தூரம் பறந்து காற்றில் கரைந்துவிட்டது.

 முக்கியமாக, நான் நம்புகிற ஒரு சத்தியத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன், ஒழுக்கம் என்பது மனம் சம்பந்தப்பட்டது, உடல் சம்பந்தப்பட்டதல்ல!

 நாட்டில் இன்று பல பெண்கள் பலவந்தமாக காமுகர்களால் கற்பழிக்கப்படுகிறார்கள். உங்கள் கருத்துப்படி, அந்த அபலைகளுக்கு வாழ்வு உதயமாகுமுன்பே, அஸ்தனமாகிவிட்டதா? 

 ஆணுக்கு ஒரு நீதிபெண்ணுக்கு ஒரு நீதியா? ஆண்கள் இரு தாரம் மணந்துகொள்வதை ஏற்றுக்கொள்கிற சமுதாயம், அந்த ஆணை ஏன் கற்பிழந்தவனாக கருதுவதில்லை?

 " கற்புநிலை என்று சொல்லவந்தார், அதனை இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்!" என்றான், புரட்சிக் கவிஞன் பாரதி! அவன் நான்கு வேதங்கள் கற்று தேர்ந்தவன்! பல மொழிகள் அறிந்தவன். இந்தியா முழுவதும் கண்டவன். எனக்கு அவனே குரு! அவன் சொல்லிவிட்டான், 'பாண்டியா! பலே! லீலாவை மனப்பூர்வமாக மனைவியாக ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக நூறாண்டு வாழ்ந்துகாட்டு! நீ ஆணினத்துக்கே, ஒரு முன் உதாரணமாக இரு! பலே, பாண்டியா!" 

 ஆவேசம் வந்தவன்போல், தாமு பேசுவதைக் கேட்ட மூவரும், தங்களுக்கு, விசுவரூப தரிசனமே கிடைத்தது போல, உளம் குளிர்ந்து அவன் காலடியில் விழுந்து வணங்கினர். அவர்கள் எதிரே நின்றிருந்தது, தாமுவல்ல; தரணியாளும் தாமோதரன்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.