(Reading time: 16 - 31 minutes)

 விமலா ரொம்ப தெளிவாக இருக்கிறாள் என்று தெரிந்ததால், அதை அப்படியே நிறுத்திக்கொண்டேன்.

 சிறிது நேரத்தில், விமலா ஆபீஸ் கிளம்பினாள். 

 " இன்று உங்களுக்கு ஆபீஸ் கிடையாதா? நீங்க லீவ் போட்டிருக்கீங்களா?"

 என் மனைவியின் குரல் கேட்டதும்தான், சுயநினைவுக்கு வந்து, அவசரமாக ஆபீஸ்கிளம்பினேன்.

 " இப்படியே, அப்பாவும் பொண்ணும் ஆபீஸ் போறதும் வரதுமாவே இருந்தா, இந்த வீட்டிலே கல்யாணம், காட்சின்னு நல்லது எப்போ, எப்படி நடக்கும்?"

 " ரமா! விமலாவுக்கு என்ன வயசு?"

 " நம்ம கல்யாணமான மறு வருஷமே பிறந்துட்டா!" 

 " நமக்கு எந்த வருஷம் கல்யாணமாச்சு?"

 " உம்? விமலா பிறக்கிறதுக்கு, ஒரு வருஷம் முன்பு!"

 " ரமா! நீ ரொம்ப கோபமாயிருக்கே, நான் ஆபீஸ் போய்வந்தபிறகு இதைப்பற்றி தீவிரமா உட்கார்ந்து பேசுவோம், ஓ.கே?"

 " உங்களைச் சொல்லி குற்றமில்லை, எல்லாத்துக்கும் வேளை வரணும்னு பெரியவங்க சொல்றாப்போல, விமலாவுக்கு குருபலன் எப்போ வருதோ, அப்பத்தானே கல்யாணம் நடக்கும்!"

 " யு ஆர் வெரி கரெக்ட்!" என்று அவள் கன்னத்தில் செல்லமாக தட்டிவிட்டு, ஆபீஸ்க்கு பறந்தேன்.

 நான் என் சீட்டில் அமர்வதற்கும், பியூன் வந்து, "மேனேஜர் உங்களை வரச்சொன்னார்"னு சொல்வதற்கும் சரியாக இருந்தது.

 இப்பத்தான் ஆபீஸ் வந்திருக்கேன், அப்படியென்ன அவசரமோ? வழக்கமாக, மேனேஜர் எனக்குப் பிறகுதான் ஆபீஸ் வருவார். இன்று எனக்கு முன்பு வந்துள்ளதோடு, கூப்பிடுகிறாரே அவசரமாக, என்னவாக இருக்கும்?

 ஒருவேளை அவருக்கு ரொம்ப நாளா வேற ஊருக்கு மாற்றலாகப் போகுதுன்னு வதந்தி பரவியிருக்கு, ஒருவேளை மாற்றல் ஆர்டர் வந்திருக்குமோ?

 திடீரென எனக்கு ஞாபகம் வந்தது. எனக்கு பதவி உயர்வு கிடைக்க உரிய நேரம் வந்துவிட்டது. ஒருவேளை, பிரமோஷன் ஆர்டர் கொடுக்கத்தான் கூப்பிடுகிறாரோ?

 இதிலே ஒரு சிக்கல் என்னென்னா, பிரமோஷன் ஆச்சுன்னா, இந்த ஊரிலிருந்து வேற ஊருக்கு தூக்கிடுவாங்க, எனக்கோ இந்த ஊரைவிட்டு போக, மனமில்லை. 

 பல சிந்தனைகளோடு, மேனேஜர் அறைக்குள் நுழைந்தேன்.

 " குட் மார்னிங், சார்! கூப்பிட்டீங்களா?"

 " மகாதேவன்! முதல்லே உட்கார்! இப்பத்தான் ஆபீஸ் வந்திருக்கே, களைப்பாயிருக்கும், சூடா இந்த காபியை குடி!"

 " என்ன சார்! என்னிக்கோ ஒருநாள் லேட்டா வந்தா, இப்படி கிண்டல் பண்றீங்க! சாரி, சார்! இனிமேல், லேட்டா வரமாட்டேன்."

 " மகாதேவன்! இந்த ஆபீஸை விடுய்யா! நானும் லேட்டாதான் வருவேன், அதனாலென்ன, நம்ம வேலையை நாமதானே செய்யறோம்! அப்புறமென்ன? நான் இன்று சீக்கிரமா வந்ததற்கும், உன்னை உடனே அழைத்ததற்கும் ஒரு நல்ல காரணம் இருக்குய்யா! என் மனைவிதான் உன்னை உடனே பார்த்து பேசி, நல்லபடியா முடித்து, போன் பண்ணச் சொல்லியிருக்கா........."

 " என்ன சார், சொல்றீங்க? புரியலையே!"

 " ஏன்யா! உனக்கு சொந்த ஊர் நன்னிலம் பக்கத்திலே இருக்கிற பூந்தோட்டமா?"

 " ஆமாம், ஆனா பள்ளிக்கூடம் படித்து முடித்தபிறகு, அந்தப் பக்கமே போனதில்லே, நினைத்துக்கூடப் பார்க்கிறதில்லே, ஆமாம்! உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்களும் அந்த ஊரா?"

 " அதெல்லாம் பிறகு சொல்றேன். உன் மனைவி பெயர் ரமாவா? அவங்க அம்மா பெயர் கற்பகமா?"

 "எனக்கே எங்க மாமியார் பெயர் மறந்துபோச்சு, நீங்க கரெக்ட்டா சொல்றீங்க! உங்க வீட்டுக்கு பூந்தோட்டத்திலிருந்து யாராவது விருந்தாளி வந்திருக்காங்களா, அவங்க சொன்னாங்களா?"

 " அதெல்லாம் பிறகு சொல்றேன். உம்.....உன் மகள் பெயர், விமலாவா? கராத்தேயிலே ப்ளேக் பெல்ட் வாங்கியிருக்காளாமே, எங்கிட்ட சொல்லவேயில்லே?"

 " முதல் முறையா, இன்றுதான், சார்!, நீங்க என் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கிறீங்க!"

 " ஆமாமில்லே......."

 " அதென்ன சார்! ஆமாம், இல்லைனு சேர்த்து சொல்றீங்க?"

 " அதை விடப்பா! உன் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணுகிற உத்தேசம் இருக்கா, இல்லையா? ரிடையராவதற்கு முன்பு பண்ணினா, நல்லது, ஏன்னா பணம் புரட்ட சௌகரியமாயிருக்கும்.........."

 " அதெல்லாம் அந்தக் காலம்!"

 " ஏன், இப்பல்லாம் பணம் புரட்டமுடியாதுங்கிறயா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.