(Reading time: 16 - 31 minutes)

 " பணம் புரட்டவேண்டிய அவசியமே இருக்காது, ஏன்னா, ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்து பதிவுத் திருமணம் முடித்துக்கொண்டு, பெற்றவங்களிடம் ஆசிர்வாதம் வாங்கிகிட்டு, தனிக்குடித்தனம் போயிடறாங்க......."

 " யோவ் மகாதேவன்! நீ ரொம்ப கெட்டிக்காரன்யா! என்னை என் வார்த்தைகளே வைத்தே, மடக்கிடறே, சரி, நேரடியாவே சொல்றேன், இத பார்! என் ஒரே மகன் எம். ஆர்க். படித்துவிட்டு, பெரிய பெரிய கட்டிடங்கள் கட்ட உதவி செய்து நிறைய சம்பாதிக்கிறான். என் மனைவி சொல்றா, உன் மகளுக்கும் அவனுக்கும் கல்யாணத்தைப் பண்ணிவைப்போம், நம்ம ஊர்க்காரங்க, பழக்கவழக்கம் எல்லாம் ஒண்ணுதான், ஜாதகம் பார்க்கவேண்டாம், கடவுள்மீது நம்பிக்கை வைத்து கல்யாணத்தை நடத்திவிடுவோம்னு சொல்றா! என் பையனுக்கு முப்பது வயசாயிடுத்து, உடனடியா முடிச்சிடுவோம், என்ன சொல்றே?"

 " கரும்பு தின்னக் கூலியா சார்? ஆமாம், என் மகள் கராத்தேயிலே ப்ளேக் பெல்ட் வாங்கினதைப்பற்றி ஏன் கேட்டீங்க?"

 " மகாதேவன்! நிஜமாவே நீ பெரிய புத்திசாலிய்யா! கரெக்டா கேட்டுவிட்டே! என் மனைவிக்கு இந்த விஷயம் காதிலே விழுந்தவுடனேயே, தீர்மானம் செய்துட்டா, உன் மகள்தான் தன் மருமகள்னு!"

 " உங்க மனைவிக்கு கராத்தே பிடிக்குமா, தெரியுமா?"

 " என் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்காம விடமாட்டியே, சரி, சொல்லிடறேன்! என் மகன் கொஞ்சம் பயந்த சுபாவம்! அவன் தொழிலிலே, நல்லவங்களைவிட ரௌடிங்க அதிகம்! அவங்க பயமுறுத்தி இவனிடம் நிறைய பணத்தை பிடுங்கறாங்க! அதை தடுத்து நிறுத்தவே, கராத்தே வீராங்கனையை அவனுக்கு கட்டிவைக்க அவசரப்படுத்தறா, சரின்னு சொல்லுய்யா!"

 " அதெப்படி சார்! பிள்ளையும் பெண்ணும் சம்மதிக்காம நாம முடிவு செய்யமுடியும்?........."

 " நான்தான் சொன்னேனே, என் பிள்ளை பயந்த சுபாவம்! நாங்க சொன்னால், மறுபேச்சு பேசமாட்டான்! நீதான், உன் மகளை சம்மதிக்க வைக்கணும்! வா, என் காரிலேயே உங்க வீட்டுக்கு போய் முதல்லே உன் மனைவி சம்மத்த்தை தெரிஞ்சிண்டு, பிறகு உன் மகளையும் பார்த்து பேசி சம்மதிக்கவைப்போம், கிளம்பு!"

 என்னால் அவருடைய விருப்பத்தை தட்டிக்கழிக்க முடியாமல், நடப்பது நடக்கட்டும் என்று அவருடன் கிளம்பினேன்.

 அவருடைய மகிழ்ச்சி எவரெஸ்டை தொட்டது, ரமாவின் சம்மதம் உடனே கிடைத்ததும்!

 " அம்மா! வேளை வந்துடுத்துன்னா, மின்னல் வேகத்திலே, காரியங்கள் நடக்கும்னு சொல்வாங்க! அதை இப்ப கண்கூடா பார்க்கிறேன்...நாங்க இப்பவே போய், உங்க மகளை, அவ ஆபீஸிலேயே பார்த்து, பேசி நல்ல முடிவோட வரோம், நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்குங்க!"

 எனக்கென்னவோ, மேனேஜர் ரொம்ப அவசரப்படறாருன்னு தோன்றியது. அவர் ஆசையை கெடுப்பானேன்னு, பேசாமல் அவருடன் சென்றேன்.

 அவரை என் மகளுக்கு அறிமுகம் செய்துவைத்தேன். 

 " விமலா! ஒரு முக்கியமான விஷயமா, உன்னுடன் கலந்துபேசி இப்பவே முடிவெடுக்க வந்திருக்கோம்..."

 " சாரி, அங்கிள்! இப்ப எனக்கு 'மூட்' இல்லே, நேரமும் இல்லே! ஈவினிங், அப்பா, அம்மாவுடன் நானே உங்க வீட்டுக்கு வந்து உங்க எல்லோருடனும் பேசறேன், மன்னிச்சுக்குங்க, ப்ளீஸ்!"

 மேனேஜர், வேறுவழியின்றி, புறப்பட்டார், என்னுடன்.

 " சார்! உங்க அவசரத்துக்கு நான் மதிப்பு தரலாம், எல்லாரும் தரமாட்டாங்க! அவங்க அவங்களுக்கு வேறவேற அவசரம்! கோவிச்சுக்காதீங்க! உங்க மனைவி சொல்லிட்டாள்னு நீங்க அவசரப்படலாம், உங்களுக்கு மரியாதை தருவதற்காக, நானும் ஒத்துழைக்கலாம், ஆனா என் மகள் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டா பேசறவ! கரெக்டா சொல்லிட்டா, பணிவோட! மேனேஜர் சார்! ஆனாலும், உங்க முயற்சிக்கு ஒரு வெற்றி கிடைச்சிருக்கு............."

 " ஆமாம்யா! இன்று மாலை, உன் மகள், உங்களோட எங்க வீட்டுக்கு வந்து எங்க எல்லோருடனும் பேச சம்மதிச்சிருக்கா........."

 " நான் நேரடியா அவளை வரியான்னு கேட்டிருந்தால்கூட, அவள் சம்மதிச்சிருப்பாளாங்கறது, சந்தேகம். நல்ல சூசகமா படுது. சந்தோஷமா இருங்க! உடனே உங்க மனைவிக்கு போனிலே நடந்ததை சொல்லி, இன்று மாலை, நிச்சயதார்த்தமே நடத்த தயாராக இருக்கச் சொல்லுங்க! அப்படியே உங்க மகனுக்கும், தகவல் சொல்லி, வீட்டிலே இருக்கச் சொல்லுங்க!"

 " மகாதேவன்! ஒண்ணு செய்வோம்! உன்னை ஆபீஸிலே டிராப் பண்ணிட்டு, நான் வீட்டுக்கு போயிடறேன். ஈவினிங், நம்ம வீட்டிலே மீட் பண்ணுவோம்!"

 எனக்கு மனதுக்குள்ளே ஒரு நெருடல்! ஒருவேளை, விமலா மேனேஜரை சமாதானமாக அனுப்புவதற்காக அப்படி சொல்லிவிட்டு, மாலை வீடு வந்து என்னிடமிருந்து எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டபிறகு, மறுத்துவிடுவாளோ!

 மாலை சற்று சீக்கிரமாகவே, வீடு திரும்பி, ரமாவையும் தயார் நிலையில் இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளுக்கும் வாசலுக்குமாக, விமலாவின் வருகைக்காக தவித்துக்கொண்டிருந்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.