எழுதிக்கொண்டிருந்தனர், சுமதி உட்பட!
ராஜாவுக்கு தலைகுனிவாகிவிட்டது! அவனும் ஏதோ விடை தெரிந்ததுபோல், மனதுக்கு தோன்றியதை பக்கம் பக்கமாக எழுதி நிரப்பிவிட்டு போலியாக சிரித்துக்கொண்டு வெளியே வந்தான்.
" ராஜா! நான் நல்லா விடை எழுதியிருக்கேன், நமக்கு எல்லாம் தெரிந்த வினாக்கள்தானே, நீ எப்படி? உன் சிரிப்பை பார்த்தால், நீயும் என்னைப்போல், நன்றாக எழுதியிருப்பாய் என நம்பறேன், வா! முதலில் பேராசிரியர் வீட்டுக்கு போகலாம். அவரிடம் இந்த சந்தோஷமான விஷயத்தை கூறிவிட்டு, அவரை நம் வேலைக்கு தைரியமாக ஏற்பாடு செய்யச் சொல்லலாம்........"
பேராசிரியரிடம் இருவர் சார்பிலும், சுமதியே பேசினாள். அவருக்கும் மகிழ்ச்சி!
சுமதி வெற்றியை கொண்டாட ராஜாவிடம் யோசனை கேட்டாள். கல்லூரி வளாகத்தின் உள்ளே, நூல் நிலய கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருப்போமா எனக் கேட்டாள்.
சிறிது யோசித்துவிட்டு, ராஜா உற்சாகமாக தலையசைத்தான். இருவரும் மொட்டை மாடியில் அமர்ந்தபோது, சுமதிதான் அதிகம் பேசினாள்.
"ராஜா! பேராசிரியர் சிபாரிசிலே, நம் இருவருக்குமே ஒரே கம்பெனியிலே வேலை கிடைத்தால், ஜாலியாயிருக்குமில்லே! ஒண்ணா படிச்சோம், ஒண்ணா வேலை செய்வோம், .......ஒண்ணா வாழ்க்கையிலும் ............"
ராஜாவினால் இனியும் நடிக்கமுடியாமல், கன்னங்களில் பொலபொலவென கண்ணீர் ஓட, சுமதியிடம் உண்மையை ஒப்புக்கொண்டான்!
சுமதிக்கும் ஏமாற்றமாக இருந்தது. என்ன செய்வதென புரியவில்லை!
" சுமதி! நான் தேர்வில் தேறாவிட்டால், என் தந்தையின் திடீர் மரணத்துக்கு நான் காரணமாகிவிடுவேன். என் தவறுக்கு அவர் பலியாகி, நான் உயிரோடிருந்தால், அது அநீதீ, துரோகம்! அதனால், .........."
சுமதி அவனை மேலும் பேசவிடாமல், அவன் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தாள்!
பொறி கலங்கிப் போனான், ராஜா!
" என்ன பேச்சு இது? நீ தற்கொலை செய்துகொண்டால்மட்டும், உன் தந்தை உயிரோடிருப்பாரா? அவரோடு சேர்ந்து, உன் தாயும் அல்லவா தங்கள் முடிவை தேடிக்கொள்வாள். பிறகு, உன் கூடப்பிறந்தவர்கள் கதி? இனி இந்தமாதிரி பேசாதே!"