முனிவன் கூனிக் குறுகி நின்றான். அதலபாதாளத்தில் வீழ்ந்து புரள்வதாய் உழன்றான்.
ஒரு பொறி தட்டிற்று.
மோகம் என்பது ஒருவாசல் தான். கண்ணையும் கருத்தையும் பறிக்கும் அலங்காரமான மாயாவாசல். அந்த வாசலை ஒருதரம் நிதானமாக கடந்துவிட்டால் அதற்குமப்பால் பெரும் அதிசயங்கள் ஒன்றும் நிகழக்காத்திருக்கவில்லை, என முனிவன் உணர்ந்தான். மேகவாசலைக்கடக்கும் தருணத்தில் ஏற்படும் கணநேரச் சிலிப்புக்காக, ஆண்டாண்டு காலமாக கட்டி வளர்த்த தனது தேஜஸை இழந்து விட்டோமே எனக்கலங்கினான்.
வசிஷ்டனின் பா¢காசத்துக்கு ஆளாவோமே எனவெண்ணி ஏங்கினான்.
முனிவன் மேனகையை கடைசித் தடவையாக அழைத்தான். அவனது குரலில் வழமைக்கு மாறான ஏதோ ஒன்று இருந்தது.
மேனகை அஞ்சினாள். சாபத்தை எதிர்கொள்ள, நடுங்கும் இதழ்களுடன் காத்து நின்றாள்.
முனிவனோ, ஒரு சிசுவை ஏந்துதல் போன்று அவளை மென்மையாகத் தழுவி நேத்திரங்களிலும், நுதலிலும் முதத்தமிட்டான்.
"போய் வா மேனகா!...ஞானத்தின் வாசற்கதவை நீ எனக்காகத் திறந்து விட்டாய்!!"
மேனகையை அழைத்துச் செல்ல மின்னல்கள் இறங்க ஆரம்பித்தன.
ஸ்வாமி...தங்களது குழந்தை....?"
"குழந்தை என்னுடையதல்ல பெண்ணே....அது பூமியின் புத்திரன்..... பூமி அவனைக் காக்கட்டும்." என்று மிகத்தெளிவுடன் பதில் சொன்னான் விசுவாமித்திரன்.