அழுகை முட்டினாலும் அடக்கிக் கொண்டான். அம்மாவிடம் போய்ப் பேச பயமும் தயக்கமும் இருந்தது. ஆனால் இங்கு நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருந்தது. பயமும் தயக்கமும் இருந்து பயனில்லை.
அம்மாவின் படுக்கையை நோக்கிப் போனான். திரும்பிப் படுத்திருந்தாள். அவளுடைய கலைந்த, அழுக்கடைந்த கூந்தல் தாறுமாறாகக் கிடந்தது. அவளுடைய கைலி கலைந்து தளர்ந்து கிடந்தது.
அவள் முதுகைத் தொட்டு "அம்மா!" என்றான்.
மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். கைலியைச் சரி செய்து கொண்டாள்.
"உடம்புக்கு என்ன செய்யிது?" அழுகை மீண்டும் முட்டிக் கொண்டு வந்தது.
பேசாமல் இருந்தாள். வெறுமையான விழிகளால் அவனைப் பார்த்தாள்.
"சொல்லும்மா! நான் வேணா காடி பிடிச்சி ஒன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகட்டா?" என்று கேட்டான்.
சிரமத்துடன் வாய் திறந்தாள்: "வேண்டாம் முத்தையா! என் ஒடம்புக்கு ஒண்ணும் இல்ல!"
"அப்படின்னா ஏன் இப்படி இருக்கிற? ஏன் சாப்பிடாம இருக்கிற?"
மீண்டும் பேச்சில்லை.
"சொல்லும்மா!" என்றான்.
"சாப்பிட்டு இந்த ஒடம்ப வளத்து என்ன பிரயோசனம் முத்தையா? நம்ப மாதிரி ஏழைங்களுக்கு என்ன எதிர்காலம் இருக்குது?"
அவனுக்கு இதில் ஏதோ ஒரு வகையில் தான் சம்பந்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது.