போச்சின்னா ஒன்னயும் கொன்னுட்டு நானும் செத்துப் போவேண்டா!"
கேசவன் அவனைப் பிடித்துத் தள்ளினான். முத்தையா சட்டையை விடவில்லை. இருவரும் தார் ரோட்டில் விழுந்து புரண்டார்கள். முத்தையா கேசவனின் முகத்தில் குத்தினான். கேசவன் திருப்பிக் குத்தினான். முத்தையா விழுந்த இடத்தில் தலையில் பட்டு கொஞ்சமாக ரத்தம் வழிந்தது.
சீனர்கள் அங்காடிக் கடையிலிருந்து ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்க ஓடிவந்தது. கேசவன் முத்தையாவை ஓர் ஓரமாகத் தள்ளினான். அங்கிருந்து ஓடி தன் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பினான். ஏதோ ஒரு பக்கம் தலை தெறிக்க ஓட்டி மறைந்து போனான்.
முத்தையா மெதுவாக எழுந்தான். கூடியிருந்த சிறிய கூட்டத்தைப் பார்த்தான். தலையில் கை வைத்து ரத்தத்தைப் பார்த்தான். தலையும் குத்துப் பட்ட முகமும் "விண்விண்"னென்று வலித்தன. ஆனால் அதைவிட மனம்தான் அதிகமாக ரணப்பட்டுக் கசிந்திருந்தது. இந்த அயோக்கிய நண்பனின் உறவால் அம்மாவையே இழந்து விடுவோமோ என்ற திகில் வந்து படர்ந்தது. அவமானமும் ஏமாற்றமும் மனதை அழுத்த குனிந்தவாறே சோர்ந்து போய் தன் சைக்கிளை நோக்கி நடந்தான்.
*** *** ***
தன்னைக் கட்டிப்பிடித்துத் தேம்பித் தேம்பி அழுகின்ற மகனைப் பஞ்சடைந்த கண்களுக்கூடே பார்த்தாள் பார்வதி. அவன் தலையைத் தடவியபோது அந்த ரத்தம் கையில் பிசுக்கென்று ஒட்டியது.
"ஐயோ, இது என்ன ஐயா?" என்று கேட்டாள்.
"அம்மா! அவன் ரொம்ப கெட்ட ராஸ்கலும்மா! அயோக்கியன். நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் வர முடியாதுன்னு சொல்லிட்டாம்மா! என்னப் பிடிச்சி தள்ளிட்டு ஓடிட்டாம்மா! அம்மா! அவன் வேணாம்மா! நான் ஒன் மகன் இல்லியா? நான் சொல்றதக் கேளு! இனி ஜென்மத்துக்கும் நான் அவனோட சேரமாட்டேன். இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்மா? சொல்லும்மா?"