பார்வதி நீண்ட நேரம் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். சோகம் கப்பியிருந்த கண்களில் இரக்க நீர் சுரக்க ஆரம்பித்திருந்தது. அப்புறம் தலையைத் திருப்பி பக்கத்தில் அழுதவாறே நின்றிருந்த மகளைக் கூப்பிட்டாள். மீனா அருகில் வந்ததும் "சாப்பிட ஏதாச்சும் இருக்கா மீனா?" என்று கேட்டாள்.
"அடுத்த ஊட்டு அம்மா கொஞ்சம் கஞ்சி வச்சிக் குடுத்திருக்காங்க!" என்றாள் மீனா.
"அதக் கொஞ்சம் எடுத்திட்டு வா!"
மீனா ஓடி ஒரு சிறிய பாத்திரத்தில் கஞ்சி ஊற்றி அதில் ஒரு கரண்டியையும் போட்டுக் கொண்டு வந்தாள்.
"முத்தையா! கொஞ்சம் எடுத்து வாயில ஊட்டுப்பா!" என்றாள்.
முத்தையாவின் கரங்கள் வெடவெடவென்று நடுங்கின. கரண்டியிலிருந்து கொஞ்சம் கஞ்சி அம்மாவின் மார்பில் ரவிக்கை மேல் விழுந்தது. துடைக்க முயன்றான்.
"பரவால்ல! அப்புறம் தொடச்சிக்கலாம்!" என்றாள். அவள் வாயைத் திறந்து முத்தையா ஊற்றிய கஞ்சியைக் கொஞ்சமாகக் குடித்தாள். "போதும்!" என்றாள். சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள். கைலியைச் சரிப்படுத்தினாள்.
"முத்தையா, நான் மெதுவா குடிச்சிக்கிறேன். நீ மீனாவையும் கூட்டிக்கிட்டு கிளினிக் போய் காயத்தக் காமிச்சிட்டு வாப்பா" என்றாள். தலைமாட்டிலிருந்து 20 ரிங்கிட்டை எடுத்துக் கொடுத்தாள்.
அவன் முகத்தில் தெளிவு வந்திருந்தது. மலர்ச்சி வந்திருந்தது! "நீ மொதல்ல சாப்பிட்டு முடிம்மா. நான் மெதுவா போறேன். மீனாவையும் கூட்டிட்டுப் போனா உன்ன யார் பாத்துக்குவாங்க?" என்றான்.