“என்ன இது? நீங்களும் இப்படி இருந்தால் அப்புறம் அவளை எப்படி சரி செய்றது... நீங்க தைரியமா இருக்கனும்...”
மகனை நாட்டிற்காக பறி கொடுத்திருந்த போதும் மருமகளுக்காக கடந்த சில நாட்களாக மனதை தேற்றிக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள் கிரிஜா.
துஷ்யந்தின் இறுதி ஊர்வலத்திற்கு பிறகு அந்த அறையினுள் சென்ற மித்ரா வெளியில் வரவே இல்லை...
சாக போகிறேன் என்று அழுதவளை, வயிற்றில் இருக்கும் குழந்தையை நினைவுபடுத்தி தான் அடக்க வேண்டி இருந்தது...
ராணுவ மேலதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அரசு துறையில் இருந்து வருபவர்கள் என்று பல பல பேர் வந்து வருத்தத்தை பகிர்ந்துக் கொண்ட போதும் மித்ரா வெளியில் வரவே இல்லை...
மகனும், மருமகளும் மூன்று வருடமாக வாழ்ந்த அன்னியோன்ய வாழ்வை பற்றி அறிந்திருந்தவள் என்பதால் கிரிஜாவால் மித்ராவின் மனநிலையை உணர முடிந்தது...
மித்ராவிற்கு கணவன் என்றால் அவளுக்கு அவன் அவள் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற மகனல்லவா! ஆனாலும் மருமகளை இப்படியே விட்டு விட கூடாது என முடிவு செய்து தன் மன வருத்தத்தை மறைத்து மித்ராவை தேற்ற முயன்றுக் கொண்டிருந்தாள்...
கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு பின் வெளிச்சத்தை கண்ட மித்ராவின் கண்கள் கூசியது...
“இப்படி தான் கொஞ்சம் எழுந்து நட மித்ரா... குழந்தையை பத்தி இனி யோசிக்கனும்ல...”
கிரிஜாவின் பேச்சு காதில் விழுந்தது...