“இருபது ரூபா...”
கையில் இருந்த இருபது ரூபாய் நோட்டை கொடுத்து தாயம்மா கொடுத்த காய்கறிகளை வாங்கிக் கொண்டாள்.
“என்ன தாயம்மா நீ முருங்கை கீரை புதுசா இருக்கு அதை கொடுக்க கூடாதா? பிள்ளைத்தாச்சிக்கு அது ரொம்ப நல்லதாச்சே!”
மலையாள வாசனையோடு தமிழ் பேசியவள் மித்ராவை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்.
“ஆமாம்மா நல்லது... இதை வாங்கிக்கோ... “
“இல்லை இருபது ரூபா தான் எடுத்துட்டு வந்தேன்... நாளைக்கு வாங்கிக்குறேன்...”
“என்ன பொண்ணும்மா நீ? ரொம்ப சுய மரியாதை பார்ப்பவளாச்சேன்னு தான் கண்டுக்காத மாதிரி இருந்தேன்.. இந்த கீரை என்ன வெறும் அஞ்சு ரூபா! உன் புருஷன் எங்க ஊரு வீரன்ம்மா! தினமும் கீரை எடுத்துட்டு வரேன், அம்மாக்கிட்ட சூப் மாதிரி தண்ணில போட்டு கொடுக்க சொல்லு. காலையிலே குடிச்சா ரொம்ப நல்லது... நீ மகராசியா இருப்ப வருத்தப் படாதே!”
“தேங்க்ஸ்...”
உடைந்த குரலில் சொல்லிவிட்டு நடந்தாள் மித்ரா.
அவளுடனே நடந்து வந்தாள் தாயம்மாவிடம் மலையாள வாசனையுடன் பேசியவள்...
“நான் உங்க அடுத்த பிளாட் தான். பேரு மஞ்சு”
“ம்ம்ம்...”