(Reading time: 8 - 16 minutes)

காதல், வீரம், மாண்பு - கலைவாணி

ய்யா தொர, வெரசா கெளம்புய்யா நா மில்லுக்குப் போவயில உன்னய பள்ளிக்கொடத்துல விட்டுட்டு போறேன்’, என்று பேரன் ராஜதுரையிடம் கூறிக்கொண்டே தன் டிவிஎஸ் எக்ஸெல்-ஐ எடுத்தார் சீனிக்கண்ணு.

‘தாத்தா எனக்கு மொனக்கடையில தேனுமிட்டாய் வாங்கித் தரியா?’, என்று பையை எடுத்துக்கொண்டு வண்டியை நோக்கி வந்தவன் ‘சத்தயிரு தாத்தா’ என்று கொல்லைப்புறம் ஓடினான்.

‘தம்பி மணியாவுது இங்கன எங்க ஓடுறவ’, என்று தன் தாய் அன்னலட்சுமி அதட்டியது எல்லாம் ராஜதுரையின் காதில் விழவேயில்லை.

jallikattu‘நம்ம கருப்ப பாத்துட்டு வந்தேன் தாத்தா’ என்று சிரித்தபடி வண்டியில் ஏறிய பேரனின் உற்சாகம் மூத்தவரையும் தொற்றிக்கொண்டது.

ங்காளி எப்படே கல்யாண சாப்பாடு போடபோற?’ என்ற சுந்தரத்தின் கேள்விக்கு ‘போட்டிய நடத்த சொல்லிப்புட்டா.. அடுத்த மாசமே கல்யாணந்தான் பங்காளி’ என்று பதிலளித்தான் வீரபாண்டி.

‘சரிதாம்ய்யா, போட்டிய நடத்தபுடாதுனு இவைங்க பண்ற அலப்பறையில உன்ன மாரி எத்தன பயலுக கல்யாணத்த தள்ளி வச்சுட்டு இருக்கீக ஹம்ம்..’, என்றான் அவன்.

‘என்ன பங்காளி பண்றது இத்தன வருசமா இதான் வழக்கம் இப்ப திடுதிப்புனு மாத்திகிடுத முடியுமா என்ன?’ என்றான் வீரபாண்டி.

‘அந்த முனியப்பசாமி தான் ஒரு நல்லவழி காட்டணும்!! சரி நா வாரேன் பாண்டி’ என்றபடி அவன் சென்றுவிட்டான்.

ய்! ராஜதொர இந்த பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு கிடையாதாம்ல எங்க மாமா சொன்னாக’ என்று சோகமாய் சொன்னான் முத்து.

‘இல்ல முத்து இந்த வருசம் எப்டியாச்சும் ஜல்லிக்கட்டு நடக்குனும்னு எங்க அப்பாவும் தாத்தாவும் சொன்னாக.. எங்க கருப்புக்கூட இந்த வருச போட்டியில கலந்துக்க போவுதுல!’ என்று தன் வீட்டுக்காளை ஜல்லிகட்டிற்கு தயாராகி வருவதை கண்களில் ஆசையுடன் பேசினான் ராஜதுரை.

‘எவம்ல அது பாடத்த கவனிக்காம பேசிட்டு இருக்கது வந்தேன் தோல உறிச்சுபுடுவேன்’ , என்ற அறிவியல் வாத்தியாரின் அதட்டலில் இருவரும் அமைதியாயினர்.

ய்யா பாண்டி ! மாமாக்கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு நாளு குறிக்க சொல்லிபுடவா.. தை பொறக்கபோவுது’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார் செல்வி, வீரபாண்டியின் அன்னை.

‘முதல ஜல்லிக்கட்டு நடக்கட்டும் ஆத்தா.. அதுக்குபொறவு தேதிய குறிக்கலாம்’ என்றான்.

‘ஆமா.. உன் மாமன் ஒரு கூறுக்கெட்டது.. அதுக காலம் மாரி.. காளைய அடக்குனாதான் கல்யாணம்னு ஒரு வார்த்த சொல்லிபுட்டாக.. நீயும் அத புடிச்சிக்கிட்டு தொங்கற.. இந்த புள்ள வேலுத்தாயி என்னடானா கட்டுனா உன்னதான் கட்டுவேனு ஒன்ற வருசமா உக்காந்துருக்கு.. இவைங்க ஜல்லிக்கட்ட நடத்தவுட போறதும் இல்ல.. நா என் பேரபுள்ளைகள பாக்கப்போறதுமில்ல’ என்று மூக்கால் அழுதாள் செல்வி.

‘சத்த நேரம்.. செவனேன்னு உக்காரு ஆத்தா.. நா அழகுதேவர் கோயிலுக்கு போய்ட்டு வாரேன்’, என்று தாய்க்கு பதிலளிக்க முடியாமல் அதட்டிவிட்டுச் சென்றான் வீரபாண்டி.

ம்மா.. இந்த பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு கிடையாதாம்மா??’ என்ற கேள்வியோடே பள்ளியில் இருந்து வந்தான் ராஜதுரை.

மாட்டுக்குப் புண்ணாக்கு கரைத்துக் கொண்டிருந்த அன்னலட்சுமிக்கு மகனுக்கு என்ன பதில் கூறுவது எனத்தெரியவில்லை.

‘சொல்லும்மா.. முத்து சொல்றான் இந்த வருசமும் ஜல்லிக்கட்டு கிடையாதுன்னு.. அப்பனா நம்ம கருப்பு இந்த தடவயும் ஜல்லிக்கட்டுக்கு போவாதா??’ என்று தன் காளை கருப்புவை கட்டிக்கொண்டுக் ஏக்கத்தோடு கேட்கும் மகனை சமாளிக்க தெரியாமல் ‘நம்ம மாட்டுசாமிய வேண்டிக்கய்யா எல்லாம் நல்லதே நடக்கும்’ என்று சாமியைத் துணைக்கு அழைத்தாள் அன்னலட்சுமி.

முழுதாக சமாதானமடையாவிடினும் ‘ம்ம்.. சரி.. நானே கருப்புக்கு தண்ணி காட்டுறேன்’ என்று அந்த இடத்தை விட்டு நகரவில்லை அவன்.

ழகுதேவர் கோயில், அது ஒரு மணிமண்டபம்.. பல ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று பல காளைகளை அடக்கி ஏராளமான பரிசுகளை வென்ற சிறந்த மாடுபிடி வீரரான அழகுதேவர் என்பவர்க்கு அவரின் வீரத்தின் அடையாளமாக கிராம மக்கள் கட்டியது.

கோயிலுக்கு சென்ற வீரபாண்டியின் கண்களில் ஏற்கனவே அங்கு வந்து விளக்கேற்றிக் கொண்டிருந்த வேலுத்தாயி பட்டாள்.

இவனைக் கண்டவுடன் மலர்ந்த முகத்துடன் அருகில் வந்தவள், ‘மச்சான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்ங்க!!’ என்று தரையைப் பார்த்தபடியே கூறினாள். ’சொல்லு புள்ள’ என்றான்.

‘எங்க அப்புச்சிக்கிட்ட சொல்லி.. கல்யாணத்துக்கு நாளு குறிக்கச் சொல்லிபுடுங்க மச்சான்’ என்றாள் தயங்கியபடியே. ‘ஏம்புள்ள உனக்கு எம் மேல நம்பிக்கை இல்லையா?? காளைய அடக்க துப்பில்லனு நெனக்குதியோ!!’ என்றான் கோபத்துடன்.

சட்டென நிமிர்ந்தவள், ‘அய்யோ எஞ்சாமி!! என்ன வார்த்த சொல்லிப்புட்டீக.. நம்பிக்கையில்லாமயா இத்தன நாளா காத்துக்கெடக்கேன்!!’, என்றாள் வருத்ததுடன்.

‘மன்னிச்சுரு வேலு! ஏதோ கோவத்துல கூறில்லாம பேசிப்புட்டேன்.. உங்கப்பாரு அந்த வார்த்தைய சொன்னப்பொறவும் காளைய அடக்காம உன்ன கட்டிக்கிட்டா.. ஒரு சொல்லுக்கு எடமாயிடும் புள்ள! என்றான் அமைதியாக. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் வேலுத்தாயி.

‘வா புள்ள.. நல்லது நடக்கனும்னு சாமிய வேண்டிக்க..’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.