(Reading time: 14 - 28 minutes)

தோழீ...புரியவில்லையே எனக்கு.... - தங்கமணி சுவாமினாதன்

This is entry #42 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

Thozhi puriyavilaiye enaku

டேய்..எத்தன்நாழி தூங்குவ எழுந்திருடா சோம்பேறி..கால்மாடு தலைமாடு தெரியாம தூங்கறத பாரு..தலை மாட்டில் நின்று கத்தும் அப்பாவின் குரல் கேட்டு.. ம்ம்.. என்று முனகிய படியே புரண்டு படுத்தான் சங்கரன்.

மணி ஏழாருது எழுந்திருக்கறியா தலைல தண்ணிய கொட்டட்டுமா..?

வாரிச் சுரிட்டிக்கொண்டு படுக்கையில் எழுந்து அமர்ந்து கொண்டான் சங்கரன்.

ஏன்னா..காலங்கார்த்தால கொழந்தைய..கரிச்சுக் கொட்றேள்....நேத்திக்குத்தான் முழுப் பரிட்ச முடிஞ்சுது..இன்னிலேந்து லீவுதானே..கொஞ்ச நாழி தூங்கினா என்ன பிள்ளைக்கு   பரிந்து பேசிய படியே குளித்துவிட்டு வந்த கமலாம்பா ஈர முகத்தைத் துடைத்தபடியே சமையல் கட்டில் நுழைந்தாள்(ர்) .

அடியே புள்ளைக்கு ரொம்ப எடங் கொடுக்காதடி....

ஆமா..எடங் குடுத்தா...ரொம்பத்தான்...அவ இப்பவே எழுந்து என்ன பண்ணணும்..?

என்ன... பண்ணணுமா..?நன்னா இருக்குடி நீ கேக்கறது..பத்து நாளா புருஷ சூக்தம் முதல் நாலு வரிய சொல்லிக்குடுக்கறேன்..இன்னும் அவன் மண்டேல ஏறல..வயசு பதிமூணாச்சு..எப்ப வேதம் கத்துக்கறது என்னிக்கு மந்த்ரம், ஸ்லோகம், ஸ்தோத்ரம்

எல்லாத்தியும் தப்பு இல்லாம சொல்லவும் வைதீக காரியங்கள பண்ணி வைக்கவும் தெரிஞ்சுக்கிறது?..ஒண்ணும் தெரிஞ்சுக்காம இருந்தா பொழப்பு நாறிப் போயிடும்..

..போறும்..போறும்..அவ ஒண்ணும் ஒங்க தொழிலுக்கு வர வேண்டாம்..அவம் படிச்சு கவர்மெண்ட்டு வேலைக்கு போணுமாக்கும்...அஞ்சு காசுன்னாலும் அரசாங்க காசுதான் ஒசத்தி..

அப்ப எந்தொழில் மட்டங்கிறியா..?

ஐயோன்னா..நா அப்பிடி சொல்லல...ஒங்கப்பா தொழில நீங்க பாக்கறேள்..என்னத்த வாரி கட்டிட்டேள்..நம்ம புள்ளையாவது வேற வேலைக்குப்போயி கை நிறைய சம்பாதிக்கட்டுமே..

பாவம் கமலாம்பா அவர் வாழ்ந்த அறுபதுகளின் ஆரம்பத்தில் வைதீகத் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை வைத்து சொல்லிவிட்டார் ஆனால் கால மாற்றத்தில் ஐ.டி.துறையினர் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக வருமானம் வரும் தொழிலாக வைதீகம் இருக்கும்  என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

ன்பொருட்டு அப்பாவும் அம்மாவும் செல்லமாய் வாக்குவாதம் செய்வதை பொருட்படுத்தாது காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்த சங்கரன் சுவாமி அலமாரியில் இருந்த விபூதி டப்பாவிலிருந்து விபூதியைய் எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து உத்தரணியில் தண்ணீரை எடுத்து விபூதியில் விட்டு இரு கைகளாலும் பர பரவென்று தேய்த்து நெற்றி,இரண்டு கைகளின் தோள் பட்டை, முழங்கைகள்,மணிக்கட்டுகள்,இரு புற விலா பின் கழுத்து என்று இட்டுக்கொண்டான்.

சங்கரன் பதிமூன்று வயதில் இருக்கவேண்டிய உயரத்தை விட ஒரு பிடி கூடுதலான உயரம் பளீரென சிவந்த உடல் தீர்க்கமான மூக்கு சின்னதாய்க் குடுமி (குடுமி அவனுக்கு பிடிக்கவில்லைதான் ஆனாலும் அப்பாவின் பிடிவாதத்தால் வேறு வழியில்லை)

கழுத்தில் சிவப்புக் கயிற்றில் ஒரு உத்திராட்சம்.இட்டுக்கொண்ட விபூதி காய்ந்து பளிச்சென்று தெரிந்தபோது இளம் வயது ஆதி சங்கர பகவத்பாதாள் போலவே தேஜஸோடு தெரிந்த தன் மகனை பெருமிதத்தோடு பார்த்தார் அப்பு சாஸ்திரிகள்.

கமலம்..நாங்கெளம்பறேன்...தெக்குத்தெரு ராமு மாமாவாத்துல வர வெள்ளிக்கிழம கணபதி ஹோமமும்,சந்தானகோபால ஹோமமும் பண்ணணுமாம்.அதுக்கு என்னென்ன சாமான் வாங்கணும்கிறதுக்கு லிஸ்ட் போட்டு தரச் சொன்னார் ராமு மாமா..போய் குடுத்துட்டு வரேன்...சங்கரா காபிய குடிச்சிட்டு சொல்லிக்கொடுத்த ஸூக்தத்த படி வந்து கேப்பேன்..வெளையாட ஓடிடாத..சொல்லிக்கொண்டே செருப்பை மாட்டிக்கொண்டு படியைத்தாண்டி வாசலில் கால் வைத்தார் அப்பு சாஸ்திரிகள்.

அவர் தலை மறைந்ததுதான் தாமதம் டேய்... சங்கரா வாடா கிட்டிப்புள்ளு வெளையாடலாம்..வாசலில் கோரஸாக ஒரே சத்தம்..

அம்மா...வெளையாட கூப்படறாங்கம்மா போட்டமா..?ஆசையாக கேட்டான் சங்கரன்

ஏய்..அப்பா ஒன்ன ஸூக்தம் படிக்கச்சொன்னாரே வந்தா கோச்சுப்பாளேடா..?

போம்மா..அப்பரமா படிக்கிறேன்மா..செத்தனாழி வெளயாடிட்டு வரேனே..?

கெஞ்சும் பிள்ளையைப் பார்க்க பாவமாய் இருந்தது கமலாம்பாளுக்கு..

சரி சரி..சீக்கிரம் வந்துடு..நீ வெளயாடுறத பாத்தா துர்வாசருக்கு கோவம் வந்துடும்..

சரிம்மா சரிம்மா..நாலு கால் பாய்ச்சலில் வாசலுக்கு ஓடினான் சங்கரன்.

வாசலில் பட்டாவி,கோதண்டு,ஜெயராமன்,அம்பி,கரிச்சான்,ஏகாம்பரம் சட்டிதலையான், தியாகு எல்லோரும் இவனுக்காக காத்து நிற்க கன ஜோராக விளையாட்டு ஆரம்பமானது.எல்லோருமே சம வயதுப் பசங்கள்.இந்த காலம் போல் அந்த காலம் இல்லை.பெரும்பாலும் அந்த காலத்துக் குழந்தைகள் வீட்டிற்குள் விளையாடமாட்டார்கள்.ஆம்பள பசங்களுக்கென்று கிட்டிப்புள்,பம்பரம்.கோலி,பிள்ளையார் பந்து,சடுகுடு போன்ற விளையாட்டுக்களும் பொம்பள பசங்களுக்கு பாண்டி, மீன்வலை,நாலுமூல தாச்சி,கிச்சுக்கிச்சு தாம்பாளம்,மத்து கடைதல் தாயக்கட்டை,ஆறு காய் ஆட்டம் போன்றவைகளும் உண்டு.கண்ணாமூச்சி ரே ரே,கல்லா? மண்ணா? திருடன் போலிஸ் மூன்றும் இரு பாலருக்கும் பொதுவான ஆட்டம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.