(Reading time: 14 - 28 minutes)

ந்தக்காலம் போல் அப்போதெல்லாம் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் என்று ( ஒரு பனிரெண்டு வயது வரை) பிரித்துப் பார்ப்பதில்லை.எல்லாம் கலந்து கட்டியாய் விளையாடுங்கள்.அதுவும் கண்ணாமூச்சி ரேரே விளையாடும் போது தெருவே ரெண்டு படும்.பத்துப் பதினைந்து பேராய் பசங்களும் பொண்ணுங்களுமாய் சேர்ந்து கொள்ள வேண்டியது ஆணோ பெண்ணோ யாராவது ஒருத்தர் யார் வீட்டுத் திண்னையிலாவது காலை தொங்கப்போட்டு உட்க்கார வேண்டும்..ஏற்கனவே ஷாட் பூட் த்ரீ போட்டு அதில் தோற்றுப் போனவரின் கண்களை இவர் பொத்த வேண்டும்..கண்களைப் பொத்துபவர் கண்ணாமூச்சி ரே ரே..காட்டுமூச்சி ரேரே..ஒனக்கோர் பழம் எனக்கோர் பழம் கொண்டோ....டியா என்று காட்டுக்கத்தல் கத்தவேண்டும்..அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கத்தி முடிப்பதற்குள் மற்றவர்கள் கண்கள் பொத்தப்படுபவரின் கண்களில் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும்.அவர்களெல்லாம் ஒளிந்துகொண்டு விட்டார்கள் என்று தெரிந்தபின் கண்களைப் பொத்துபவர் இவரை விடுவிப்பார்.இவர் ஒளிந்திருப்பவர் யாரையாவது கண்டுபிடித்துத் தொட்டுவிட வேண்டும்.தொடப்பட்டவர் அவுட்....

அவுட்டாக்கியவரால் அவுட்டானவர் கண்கள் பொத்தப்படுவார்.வெகு சுவாரசியமான விளையாட்டு இது.கிராமங்களில் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கள் எல்லாமே உடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுக்கள்தான்.

விளையாடிக்கொண்டிருந்த சங்கரனுக்கு அப்பா வந்து விடுவாரோ என்ற பயம் அடிக்கடி எட்டிப் பார்த்தது.பயத்தை பாலுவிடம் பகிந்து கொண்டபோது டேய் சங்கரா ஒங்கப்பா ராமு மாமாவோட டவுனுக்கு போனத நாம் பாத்தேண்டா என்று சொன்னபோது சந்தோஷமாய் இருந்தது சங்கரனுக்கு.அப்பாடா இனி மதியம் வரை பயமில்லை என்று தோன்றியது. 

அப்போதுதான் மாலதி வீட்டுக்குள்ளிருந்து வந்தாள்.பத்து வயது இருக்கும்.ஐந்தாவது படிப்பவள்.

டீ..மாலு..நீங்கெள்லாம் வெளயாடல...பட்டாவி கேட்கவும்..

இனிமேதாண்டா..இன்னும் ஒத்துரும் வல்லியே..டீ...மல்லீ,கோமதி,மீனு,அம்புலூ, யசோதா..வாங்கடி வெளயாட...

யசோதா..மாலதி கூப்பிடவும் சங்கரனின் கண்கள் சட்டென யசோதாவின் வீட்டு வாசலை ஒரு பார்வை பார்த்து மீண்டது.

ஏய்..இருங்கடி இதோவரேன்...சொல்லிக்கொண்டே வெளியே வந்த யசோதாவை அங்கே குழுமியிருந்த ஆம்பள,பொம்பள அத்தனை பசங்களோட கண்களும் வைத்த கண்களை எடுக்காமல் பார்த்தன.அரக்குக் கலரில் ஜரிகை வைத்த கரு நீல பார்டரோடு கூடிய பாவாடை அதே கலரில் பஃப் வைத்த மேல் சட்டை காதில் சின்னதாய் குடை ஜிமிக்கி,கழுத்தில் கழுத்துக்கு ஏற்றபடி நெக்லெஸ்,கைகளில் அரக்கு கலரில் நிறைய கண்ணாடி வளையல்கள்,கால்களில் கொலுசு அழகுக்கு அழகு செய்வது போல் செக்கச்சிவக்க கைகளிலும் கால்களிலும் மருதாணியின் சிவப்பு நெற்றியில் கருனீலக் கலரில் சாந்துப் பொட்டு திலக வடிவில்...ஏற்கனவே பவுனின் நிறத்தில் இருக்கும் பத்தே வயதான ஐந்தாம் வகுப்பு படிக்கும் யசோதா அன்று பாலாம்பிகா போலவே தெரிந்தாள்.

ஏய்..யசு..இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கடீ..இது கோமதி..

ஆமாண்டி..மற்றவர்களும் ஆமோதிக்க..ஆம்பள பசங்களும் விகல்பமில்லாமல் ஆமாண்டி யசு ஜம்முனு இருக்கடி...என்ன இன்னிக்கு ஒங்காத்துல ஏதும் விஷேஷமா?

நாங்களும் சாப்பட வரலாமா என கேட்க சிரிப்பு வெடித்துக் கிளம்பியது.சாதரணமாய் ஒருபஞ்சவர்ணக் கிளியையோ,வெண் புறாவையோ அழகான பொம்மையையோ பார்த்தால்மனம் சந்தோஷப் படும்.மனதில் வேறு என்ன தோன்றும்?.அதுபோலத்தான் யசோதாவைப் பார்த்த ஆம்பள பசங்களுக்கும் இருந்திருக்க வேண்டும்.சிறு வயதுக் குழந்தைகளின் மனதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் நவீன காலத்து சினிமாவோ சீரியலோ கலாச்சார சீரழிவோ அந்த காலத்தில் இல்லை.இளம் வயதிலேயே கெட்டுப்போவதற்கான சூழ்னிலையும் வாய்ப்புக்களும் பெருகிவிட்ட இந்த காலத்தில் விபரம் புரியாத பிள்ளைகளை வழி நடத்துவது பெற்றவர்களுக்கு பெரும் சவாலாகத் தான் இருக்கிறது.அந்த காலத்தில் தவறே நடக்காது என்பதில்லை.ஒன்றிரண்டு நடக்கத்தான் செய்யும்.ஆனாலும் ஒரு கட்டுப்பாடு இருந்ததென்பது என்னவோ உண்மை.

..இன்னிக்கு எங்காத்துக்கு எங்க அத்தையும் அத்திம்பேரும் வரா..அதான் எங்கம்மா எனக்கு இதெல்லாம் போட்டுவிட்டா..அவாள்ளாம் இப்ப வந்துடுவா..அதுனால நா இப்ப வெளயாட வரல.சாயந்தரமா வரேன்..எல்லாருக்கும் டேங்ஸ் (அப்போதெல்லாம்  தேங்ஸ் என்று சரியாக உச்சரிக்காமல் இப்படிச் சொல்வதுதான் கிராமப் புரங்களில் வழக்கம்)சொல்லிவிட்டு உள்ளே சென்றபோது நீண்ட பின்னலின் முடிவில் மணி கோர்க்கப்பட்ட மூன்று உருண்டைகளோடு கூடிய குஞ்சலம் இப்படியும் அப்படியும் ஆடியது.பின்னந்தலை உச்சியில் ராக்கோடியும் பின்னலில் திருகுப் பூவும் சிரித்தன.

கனகாம்பரமும்  மல்லியுமாய் சேர்த்துக்கட்டிய பூச்சரம் சூடிய தலை...

எல்லோரோடும் சேர்ந்து நின்றபடி யசோதாவைப் பார்த்துக்கொண்டிருந்த பதிமூன்றே வயதான சங்கரனின்நெஞ்சில் அவளின் பாலாம்பிகா போன்ற உருவம் அவனுக்கே தெரியாமல் வந்து பச் என்று ஒட்டிக்கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.