(Reading time: 19 - 37 minutes)

ன்று மாலையில் புத்தகத்தை அவளிடம் இருந்து வாங்கிவிட்டேன். அந்தப் பக்கத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமாய் இருந்தது. சரவணன் உடனிருந்ததால் அந்தப்பக்கத்தை என்னால் பார்க்கமுடியவில்லை. விடுதிக்கு வந்தவுடன் அந்தப்பக்கத்தை ஆவலாய்ப் பார்த்தேன். அங்கு வெறும் கோடுதான் இருந்தது. ஏமாற்றத்துடன் புத்தகத்தை மூடினேன். அவள் பெயர்தான் இருக்குமென்று பார்த்தால் அடிக்கோடு இருந்ததால் வெறுத்துவிட்டேன்.

மறுமுறையும் அதை எடுத்துப்பார்த்தேன். அப்போதே உணர்ந்தேன் அது அடிக்கோடு அல்ல. அம்புக்குறி என்று. அதுவும் இடது நோக்கிய அம்புக்குறி. ஆனால் இடதுபுறம் ஒன்றுமே இல்லை. வெறுப்பில் இடதுபக்கம் புத்தகத்தை முழுவதும் மூடினேன். புத்தகத்தின் அட்டை மட்டும் திறந்தது. அங்கே நிஷா (புத்தகத்தின் முதல் பக்கம்) என்று எழுதியிருந்தது. அவ்வளவுதான் ஆயிரம் பட்டாம்பூச்சி என்னுள் சிறகடித்தது. சிறகின்றி நான் பறப்பதாய் தோன்றியது. சற்றுநேரத்தில், சொர்கக்த்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன்.

திடீரென ஒரு கேள்வி "இது உண்மையில் அவள் எழுதியதுதானா?அந்த அம்புக்குறியின் அர்த்தமும் சரிதானா?" என்று என்னுள் பல கேள்விகள் தோன்றியது. அவளது கைப்பேசி எண் என்னிடம் இருந்திருந்தால் இப்போதே கேட்டிருப்பேன். நாளை விடியும் வரை காத்திருக்க வேண்டுமா? என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்போது ஒவ்வொரு நிமிடமும் நூற்றாண்டைப் போல் நகர்ந்தது.

ஒருவழியாகப் பல நூற்றாண்டைக் கடந்து காலைபொழுதுக்கு வந்தேன். குளித்துவிட்டு, 7 மணிக்கே (9:15க்கு கல்லூரி தொடங்கும் நேரம்) கல்லூரிக்குச் சென்றேன். நான் புறப்படும் வரை சரவணன் விழிக்கவே இல்லை. அவள் 9 மணிக்குக் கல்லூரி வந்தாள். அவள் வரும்போது அத்தனை ஆனந்தம் நான் இதுவரைக் கண்டதில்லை. "பெண்களே பிடிக்காது" என்ற வாக்கியமும் எனக்கு அன்றோடு மறந்தது. என்னை நோக்கி அவள் நடந்து வரும்போது தேவதையாகவேத் தோன்றினாள். ரகசியம் உடைபடும் என எண்ணினேன்.

ஆனால், அவளோ எந்த ஆவலும் இன்றி என் முன்னே வந்து நின்றாள். நான் புத்தகத்தை நீட்டினேன். எதுவும் பேசாமல் புத்தகத்தை வாங்கிவிட்டு போய்விட்டாள்.

நான் அவளை நிறுத்தி "என்ன எதுவும் பேசாமல் போகிறாய்" என்றேன்.

"இன்று எனக்கும் பரீட்ச்சை இருக்கிறது. படிக்கப் போகிறேன்" என்றாள்.

நானும் எதுவும் பேசாமல் அவள் செல்ல வழிவிட்டேன்.

அவள் விரும்புகிறாளா? இல்லையா? விடைத்தெரியாமல் நாட்கள் நகர்ந்தன. அவளிடம் கேட்கவும் முடியாமல் கேட்காமலிருக்கவும் முடியாமல் தவித்தது என்னுள்ளம்.

நாங்கள் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்தோம். என் பெற்றோரையும், தம்பியையும் பார்த்த உடன் சந்தோஷமாக இருந்தது. மறுநாள் என் பள்ளி நண்பன் ரிச்சர்டைப் பார்த்தேன்.

அவன் "உனக்கு நிஷா தெரியுமா?" என்றான்.

"ஆம். என்னுடனே படிக்கிறாள். ஏன்?" என்றேன்.

"அவள் என் காதலியின் தோழி. அவளை எனக்கு நன்றாகத் தெரியும். எந்தப் பசங்க கூடவும் அவ சரியா பேசமாட்டா. ஆனா, நேற்று நான் பேசுனப்போ உன்ன பத்திதான் நிறையா கேட்டா. உன் கைப்பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டாள். என்னடா நடக்குது இங்க?" என்றான்.

அதைக் கேட்டதும் மிகப்பெரிய சந்தோஷம். என்னால் அதை நம்பவே முடியவில்லை.

ஆனாலும் அவனை சமாளிக்க "அதெல்லாம் ஒன்னுமில்ல. சும்மா கேட்டுருப்பா".

அவனிடமே அவள் கைப்பேசி எண்ணைக் கேட்கலாமா எனத் தோன்றியது பிறகு, அதான் நிஷா என் கைப்பேசி எண்ணை வாங்கிவிட்டாளே. அவளே பேசட்டும் என விட்டுவிட்டேன்.

நாளை தீபாவளி. எப்படியும் வாழ்த்துக்கள் கைப்பேசியில் சொல்லுவாள் என எண்ணினேன். ஆதலால், கைப்பேசியை கையிலே வைத்திருந்தேன். ஆனால் அன்று ஏமாற்றமே மிஞ்சியது. அவள் அழைக்கவே இல்லை.

விடுமுறை முடிந்து நாங்கள் ஊருக்குச் செல்ல அன்று இரவு புகைவண்டியில் ஏறினோம். அன்று யமுனா எங்களுடன் வரவில்லை. புகைவண்டி இடையிலே ஓரிடத்தில் நின்றது.

சரவணன் "எனக்குப் பசிக்கிறது. ஏதேனும் வாங்கி வருகிறேன்" என்று இறங்கினான்.

நான் தைரியத்தை வர வைத்துக் கொண்டு நிஷாவிடம் "நான் ரிச்சர்டிடம் பேசினேன். நீ என்னைப் பற்றிக் கேட்டதாய் சொன்னான்" என்றேன்.

அவள் நடுங்கிக் கொண்டே "இல்லை. சும்மாதான்" என்றாள்.

"ஒன்னுமில்ல, நான் சும்மா கேட்டேன்" என்றேன்.

அதற்குள் சரவணன் வந்துவிட்டான். அதன்பிறகு அன்று நான் நிஷாவிடம் எதுவும் கேட்கவில்லை. காலையில் விடுதிக்கு வந்தவுடன் என் கைப்பேசியைப் பார்த்தேன். ஒரு செய்தித்துணுக்கு வந்திருந்தது.

அதில் "நான் தான் நிஷா" என்று வந்திருந்தது.

அவ்வளவுதான் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. முதல் முறையாக என் 32 பற்களும் தெரியும்படி சிரித்தேன்.

நானும் "நிஷா நலமா?" என்றேன்.

இப்படியே செய்தித்துணுக்கை கைப்பேசி வழியே பறிமாறத் தொடங்கினோம். ஆனால், அந்த புத்தகத்தில் எழுதியது அவளா? என்ற வினாவை கேட்க முடியாமல் தவித்தேன்.

இப்படியே, சில காலம் நகர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.