(Reading time: 15 - 30 minutes)

கழனியை நோக்கி ஓர் காதல் பயணம்! - கலைவாணி

This is entry #45 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

nature

ன்ன பெத்த மம்மி உன் கண்ணுல என்ன தண்ணீ.. !!’ என்று வெங்காயம் வெட்டிக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்துப் பாடியப்படியே வந்தாள் ஜீவா என்ற ஜீவபாரதி.

‘பாட்டெல்லாம் இருக்கட்டும்.. நீ வேண்டியது எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துட்டியா? அப்புறம் கிளம்புறப்ப அதுஇல்ல இதுஇல்லனு சொல்லுவ’ என்று கேட்டார் சித்ரா.

ம்ம் எடுத்தாச்சு மா.

‘ஜீவாம்மா.. கொஞ்சம் கறிவேப்பிலை தாங்களேன், ரசம் வைக்கலாம்னு பாத்தேன் எங்கிட்ட இல்ல, நேரம் வேற ஆகிட்டு’ என்று வந்தாள் பக்கத்து வீட்டு கிரிஜா.

‘தோ வரேன் கிரிஜா’ என்று சித்ரா செல்ல, ‘என்ன ஜீவா போன வாரம் வேலை விஷயமா சென்னை போனியே என்னாச்சு?’ என்றாள் கிரிஜா.

‘அந்த கம்பெனில நைட் ஷிஃப்ட் மட்டும் தான் அக்கா, சம்பளம் வேற ரொம்ப கம்மி அது ஹாஸ்டல், சாப்பாட்டுக்கே பத்தாது அதனால போகல’ என்றாள் ஜீவா.

‘ஓ! அப்டியா! நீயும்தான் ஒரு வருசமா வேலை தேடுற ஆனா ஒரு வேலைக்கும் போன மாதிரியில்லையே. ஹம்ம்.. எங்க அக்கா பையன் இருக்கான்ல உனக்கு கூட தெரியுமே அவன் பிளஸ்டூல உன்னவிட மார்க் கம்மிதான் ஆனா சென்னையில வேலைக்குச் சேந்துட்டான், நிறைய சம்பளம் அவனுக்கு……

‘இந்தா கிரிஜா கறிவேப்பிலை நேரமாயிட்டுனு சொன்னல்ல போய் சமையல பாரு’ என்று வந்து ஜீவாவை காப்பாற்றி விட்டார் சித்ரா.

சரி நா வரேன் என்று போய்விட்டாள் கிரிஜா.

ஆனால் அவள் வேலையைப் பற்றிக் கேட்டதுமே ஜீவாவின் முகம் மாறிவிட்டது.

‘என்ன ஜீவா சோகமாருக்க?’ என்று கையில் ஒரு கிண்ணத்தோடு வந்தார் சுசிலா, ஜீவாவின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி குடியிருப்பவர்.

‘அது ஒண்ணுமில்லக்கா.. இந்த கிரிஜா வந்து வேலையைப் பத்திக் கேட்டாளா.. அதான் இவ இப்டியிருக்கா’ என்றார் சித்ரா.

‘அவ கிடக்கா விடு ஜீவா.. அதுக்கா நீ இப்டி சோகமாயிருக்க !!’ என்று அவளை சமாதானம் செய்ய முயன்றார் சுசிலா.

‘இவுங்க மட்டும் இல்லத்த.. எல்லாரும் இதேத்தான் கேக்குறாங்க, இவுங்களுக்கு நான் என்ன படிச்சேனுக்கூட தெரியாது ஆனா எல்லாரும் ஏன் வேலைக்கு போகல, ஏன் வேலைக்கு போகலனு கேக்குறாங்க. வேலை கிடைச்சா நா போகமாட்டேன்னா சொல்லுறேன். இதனால தான் இப்போலாம் நா எந்த விசேஷத்துக்கும் கூட போறது இல்ல’ என்று சோகத்தில் ஆரம்பித்து கோபத்திற்குப் போய் சோகத்திலே முடித்தாள் ஜீவா.

‘விடு ஜீவா உனக்காக பெருசா எதுவோ காத்துகிட்டு இருக்கு, நீ இதுக்காக எல்லாம் சோர்ந்துடாத நாளைக்கு இன்டர்வியூக்காக சென்னை போறல்ல அத நல்லா பண்ணு சரியா’ என்று தெம்பூட்டினார் சுசிலா.

‘இந்தா சித்ரா ஜீவாக்கு புடிச்ச மட்டன் கோலா உருண்டைக் குழம்பு அவ சீக்கிரம் சாப்புட்டுடுவாளோனு எடுத்துட்டு ஓடிவந்தேன்’ என்று கொடுத்துவிட்டு சென்றார் சுசிலா.

றுநாள் காலை சென்னை போரூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வரவேற்பறையில் தன் பெயரை அழைப்பதற்காக காத்திருந்தாள் ஜீவா.

‘தோஸ் ஹூ ஆர் கம்மிங் ஃபார் தி இன்டர்வியூ, கோ டு தி ஃபர்ஸ்ட் ஃப்ளோர்’, என்று கூறிச்சென்றாள் ஒரு பெண்.

அங்கு முதல் சுற்று முடிந்தது. ‘ஐ வில் ரீட்அவ்ட் த நேம்ஸ் ஹூ ஆர் செலக்டட் ஃபார் தி நெக்ஸ்ட் ரௌண்ட் , தோஸ் பிபுள் ஜஸ்ட் ஸ்டே ஹியர் ,அதர்ஸ் கேன் லீவ்’ என்று ஜீவாவின் பெயரையும் உள்ளடக்கியப் பட்டியலைப் படித்தார் ஒருவர்.

இரண்டாம் சுற்று குழு விவாதம் அதிலும் ஜீவா தேறினாள். மூன்றாம் சுற்று மனிதவள மேலாளருடன் நேர்காணல், இயல்பிலே தைரியமும் ஒரு வருடமாக பல நேர்காணல்களை சந்தித்த அனுபவமும் ஜீவாவை  நன்றாகவே செயல்படவைத்தது.

எல்லாச் சுற்றுகளும் முடிந்தது. முடிவுக்காக ஆவலுடன் வரவேற்பறையில் காத்திருக்கலானாள். ‘ஜீவபாரதி, யு கேன் லீவ் ஃபார் தி டே, இஃப் யு காட் ஷார்ட்லிஸ்டட் வி வில் கெட் பாக் டு யு’ என்று கூறினாள் ஒரு பெண். ‘தேங்க்யு’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.

ஜீவாவிற்கு தெரிந்துவிட்டது அவர்கள் அழைக்க போவதில்லை என்று.. எத்தனை முறை இதே வார்த்தையைக் கேட்டிருப்பாள் !

அடுத்து என்ன? கணினி அறிவியலில் இளங்கலை தொழில்நுட்பம் முடித்து ஒன்றரை வருடம் ஆகின்றது. எத்தனை நேர்காணல்கள் !! ஆனால் இன்றுவரை எதுவும் பலனளிக்கவில்லை. எல்லாமே அனுபவம்தான், ஆனால் அனுபவம் மட்டுமே உண்டெனில் அது வெற்றி ஆகுமா என்ன? 

அவள் வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலை இல்லையெனிலும் அவளுடைய நடுத்தர குடும்பத்திற்கு அவளின் சம்பாத்தியம் பெரிதும் உதவியாய் இருக்கும். தனக்கென்று எதுவும் செய்துக்கொள்ளாமல் முன்பு தங்கைகளுக்கு இப்போது பிள்ளைகளுக்கு என்று ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் தந்தையின் சுமையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இப்போதும் நிறைவேற போவதில்லை என்று நினைக்கையிலே ஜீவா சோர்ந்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.